Wednesday, August 16, 2017

யோக சூத்திரம் - 1.32 - மனதை ஒருநிலை படுத்துதல்

யோக சூத்திரம் - 1.32 -  மனதை ஒருநிலை படுத்துதல்



तत्प्रतिषेधार्थमेकतत्त्वाभ्यासः ॥३२॥

tat-pratiṣedha-artham-eka-tattva-abhyāsaḥ ॥32॥

ஒன்பது விதமான தடைகளும், அதில் இருந்து வரும் நான்கு விதமான  வெளிப்பாடுகளும் எப்படி நாம் மனதை ஒரு நிலை படுத்துவதில் இருந்து நம்மை தடுக்கின்றன என்று பார்த்தோம்.

சரி, அவை தடுக்கின்றன. என்ன செய்வது ? அவற்றில் இருந்து எப்படி மீள்வது ? அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா ?

வழி சொல்கிறார் பதஞ்சலி.

நாம் நம் மனதை கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். அது ஓயாமல் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். எதிலும் நிலையாக நிற்காது.

சரி என்று தெரிந்தாலும், அதை விட்டு விட்டு தவறான ஒன்றை செய்யும். அதை செய்தால் என்ன ? என்ன ஆகிவிடும் என்று தூண்டிக் கொண்டே இருக்கும்.

ஆரோக்கியம் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் - உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இருந்தும், ஒரு  ஐஸ் க்ரீமை கண்டால் , மனம் ஓடுகிறது.

பணம் வேண்டும். ஓய்வு வேண்டும். உறவுகள் வேண்டும். தனிமை வேண்டும் என்று மனம் ஒன்றை தேடிப் போகும் போது , பாதி வழியில் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்கு போகிறது. இப்படி முடிவில்லாமல் திக்கு திசை தெரியாமல் அலைந்து கொண்டே இருக்கிறது.

என்ன செய்யலாம் ?

எதோ ஒன்றை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

மனதை ஏதோ ஒன்றின் மேல் நிறுத்த வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

படம், குறியீடு, ஒலி , ஜோதி, விளக்கு, பூ....எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

மனதை ஏதோ ஒன்றின் மேல் நிறுத்தப் பழக வேண்டும். அப்படி பழகினால் மனம் அலை பாய்வதை குறைத்து இறுதியில் சுத்தமாக நிறுத்த முடியும்.



tat = எவன்
pratiṣedh = தடுத்து, விலக்கி , எதிர்த்து, நீக்கி
artam = அர்த்தம்
eka = ஒன்று
tattva = தத்துவம் , உண்மை, நிலை
abhyāsaḥ = பயிற்சி

எவன் அலை பாயும் மனதை தடுத்து நிறுத்தி ஒரே ஒரு தத்துவத்தின் மேல் நிலை நிறுத்துகின்றானோ அவன் அந்தத் (9 விதமான) வென்று அதன் வெளிப்பாடான நான்கு வித சிக்கல்களில் இருந்து விடுபடுவான்.

இதன் மேல் மனதை நிலை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை.

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எது உங்களுக்கு எளிதாக இருக்கிறதோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.

சமயப் பெரியவர், கடவுள் படம்,  ஜோதி, மந்திரம், உங்கள் காதலன்/காதலி படம், குழந்தைகள் படம்...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
மனம் அதன் மேலே நிலைத்து நிற்க வேண்டும்.

சரி, மனதை ஒரு முகப் படுத்தினால் நல்லதுதான். எப்படி செய்வது ?

அதற்கான 10 வழிமுறைகளை பின்னால் தருகிறார்.

அவற்றைப் பற்றி இனி வரும் நாட்களில் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/132.html

No comments:

Post a Comment