Saturday, August 10, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 2

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 2


बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥


bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

இந்த சூத்திரத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முன் பிராணாயாமம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பிராணன் + யாமம் = பிராணாயாமம்.

பிராணன் என்றால் உயிர் சக்தி. அது மூச்சு மட்டும் அல்ல. இந்த உடலை, மனதை செலுத்தும் சக்தி. மூக்கும், நுரையீரலும் இல்லாத பாக்டீரியா போன்ற  உயிர்களும் செயல்படுகின்றன. அவையும் உண்கின்றன, நகர்கின்றன, இன விருத்தி செய்கின்றன, எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றன.  அவற்றிற்குள்ளும் பிராணன் இருக்கிறது அல்லவா?  எனவே, பிராணன் என்பது மூச்சு மட்டும் அல்ல, அது உயிர் சக்தி, ஒரு உந்து சக்தி.

யாமம் என்பது பதஞ்சலி கூறிய 8  யோகப் படிகளில்  முதல்  படி (பிராணாயாமம் நாலாவது  படி).

1. யாமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணாயாமம்
5. ப்ரத்யாஹாரம்
6. தாரண
7. தியானம்
8. சமாதி

இதில் இந்த பிராணன் என்பது எப்போதும் வெளிச் செல்வது. புலன்களால் தூண்டப்பட்டு வெளி நோக்கிச் செல்வது.

உதாரணமாக, ஒரு லட்டைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. அதை எடுத்து தின்ன வேண்டும் என்று ஆவல் எழுகிறது. நம்மை அதை எடுத்துச் தின்னச் சொல்வது பிராணன். "போ, அதை எடுத்துச் சாப்பிட்டுப் பார், நல்லா இருக்கும்" என்று சொல்கிறது.

இது ஒரு உதாரணம். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல இடம் (அடடா அங்க போய் ஒரு வாரம் தங்கி இருந்தால் எப்படி இருக்கும்), எதிர் பாலினத்தின் மேல் ஒரு ஈர்ப்பு, அவர்களை கவர செய்யும் வேலைகள் என்று நம்மை சதா உந்திக் கொண்டிருப்பது இந்த பிராண சக்தி.

பணம் சம்பாதி, புகழ் சம்பாதி, முடியை டை அடித்துக் கொள், ஜிம்முக்குப் போய் தொப்பையை குறை, படி, பாடு, ஓடு, வேலை செய், சாப்பிடு, என்று நம்மை ஓட வைத்துக் கொண்டே இருப்பது பிராணன்.

இது வரை புரிகிறது அல்லவா ?

இங்கே சற்று நிதானிப்போம்...

ஏன் இந்த பிராணன் நம்மை செலுத்திக் கொண்டே இருக்கிறது ? சாப்பாடு வேண்டும் உயிர் வாழ...அது தவிர இன்னும் எத்தனையோ வழிகளில் இந்த பிராணன் நம்மை அலைக்கழிப்பதை உங்களால் உணர முடிகிறதா?

பிராணன் நம் பிராணனை வாங்குகிறது அல்லவா. ஒரு நிமிடம் நம்மை சும்மா இருக்க விட மாட்டேன் என்கிறது.

வீடு வாங்கு, கார் வாங்கு, பணத்தை இதில் போடு, அதில் போடு, என்று சதா சர்வகாலமும்  நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது.

இது ஏன் இப்படி செய்கிறது?  இந்த விரட்டலில் இருந்து எப்படி தப்பிப்பது? என்று யோசித்தார்   பதஞ்சலி.

ஒரு நிமிஷம் நிம்மதியாய், அமைதியாய் இருக்க விடுகிறதா? இப்படி வாழ் நாள் எல்லாம ஓடிக் கொண்டே இருந்தால், நாம் தளர்ந்து போவோம் அல்லவா?

ஒவ்வொரு  கால கட்டத்திலும் எதையாவது ஒன்றை துரத்திக் கொண்டு இருக்கிறோம்.

பொம்மை, பின் படிப்பு, மார்க், பின் வேலை, பின் துணை நாடி ஓட்டம், பின் பிள்ளை வேண்டி ஓட்டம், பிள்ளைகளை வளர்க்க ஓட்டம், இதற்கு நடுவில் பணம், புகழ், செல்வம், செல்வாக்கு என்று தனி ஓட்டம்...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு ஒன்றின் பின், நாளை மற்றொன்றின் பின்னால்...

இந்த ஓட்டத்தை எப்படி நிறுத்துவது?  வெளியே ஓடும் பிராணனை நிறுத்தி உள்ளே திருப்புவது எப்படி ?

எப்படி நிம்மதியாக, அமைதியாக, சாந்தமாக இருப்பது என்று சொல்லித் தருவது இந்த சுலோகம்.

என்ன ஏதோ ரியல் எஸ்டேட்  விளம்பரம் மாதிரி இருக்கா ?

இல்லை. இந்த ஸ்லோகத்தின் முடிவில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இது வரை சொன்னதை யோசித்துக் கொண்டிருங்கள்...நாளை வரை....


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

No comments:

Post a Comment