Sunday, December 31, 2017

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 1

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 1


प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियाअत्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥

prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dr̥śyam ॥18॥

prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத

śīlaṁ = சில

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்

apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்

dr̥śyam = திரிஷ்யம், பார்வை, பார்க்கப் படுவது ॥18॥


வாழ்க்கையின் நோக்கம் என்ன ?

எதற்காக வாழ்கிறோம் ? இந்த வாழ்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், திருமணம் முடித்தோம், பிள்ளைகளை பெற்றோம், அவற்றை வளர்த்தோம், வயதான பின் மறைந்தோம்....இவ்வளவுதானா...எதற்கு இத்தனை பாடு ?

நாம் பிறந்ததால் என்ன ஆகி விட்டது உலகுக்கு ? நாம் பிறக்காவிட்டால் என்ன குறைந்திருக்கும் ?

உலகில் எத்தனை தொல்லைகள், துன்பங்கள், பசி,பிணி, பட்டினி, திருட்டு, கொள்ளை, நோய் , விபத்து, சண்டை , சச்சரவு...இதெல்லாம் எதற்கு ?

இறைவன் உலகைப் படித்தான் என்றால் இத்தனை சிக்கல் எதற்கு ? இவை இல்லாமல்  உலகை படைக்க முடியாதா ? சரி அப்படியே படைத்து விட்டாலும், இந்த சிக்கல்களை ஒரு நொடியில் போக வைக்க முடியாதா கடவுளுக்கு ? பின் ஏன் இந்த போராட்டம் ?

துன்பமும், போராட்டமும், எதிர் நீச்சலுக்குமாகவே இருக்கிறது இந்த உலகு.

உலகை விடுங்கள். நமது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ? குறிக்கோள் ?

தெரியுமா நமக்கு ? வாழ்ந்து கொண்டிருக்கிறோமே தவிர, எதற்காக என்று தெரியுமா ?

இந்த கேள்விக்கு பலர் பலவிதமாக பதில் சொல்லலாம்...

வாழ்க்கை என்பது அனுபவிக்க, இறைவனை அடைய, முக்தி அடைய, வைகுண்டம் போக, கைலாசம் போக, மற்றவர்களுக்கு உதவி செய்ய, சாஸ்திரப் படி வாழ , ஞானம் பெற என்று எவ்வளவோ சொல்லலாம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். சில பேர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போவோம். அவ்வளவுதான்....என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

முதலில் கற்பனையானவற்றை ஒதுக்கி விடலாம் - சொர்கம், வைகுண்டம், கைலாசம், இறைவன் திருவடி அடைவது போன்றவை. அதை அடைய வேண்டும் என்று விரும்புவர்களுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது அவர்கள் அடைந்தார்களா என்று. முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அடைந்தார்களா இல்லையா என்று தெரியாது. எனவே அவற்றை விட்டு விடலாம்.

பதஞ்சலி ,  நாம் சரி பார்க்க முடியாத எதையும் சொல்ல மாட்டார். நம்பிக்கை என்பதெல்லாம் அவரிடம் கிடையாது. இதோ இருக்கிறது. நீயே சரி பார்த்துக் கொள் . ஒரு நம்பிக்கையும் தேவை இல்லை என்பது அவர் பாணி.

பின் பணம், செல்வாக்கு, ஞானம், பதவி, புகழ், பிறருக்கு உதவுவது போன்ற குறிக்கோளை எட்டிப் பிடிக்க முடியுமா ?  இவ்வளவு ஞானம் போதும், இவ்வளவு செல்வம் போதும், இவ்வளவு புகழ் தான் கணக்கு என்று ஏதாவது இருக்கிறதா ? எப்போது நமது குறிக்கோளை அடைந்து விட்டோம் என்று அறிந்து கொள்வது ? அப்படி ஒரு எல்லைக் கோடே இல்லை.  முடிவில்லாத ஒன்றை துரத்துவதில் அர்த்தம் இருக்கிறதா ? நாய் தன் வாலை பிடிக்க முயல்வது போல.

பின், என்னதான் வாழ்க்கைக்கு அர்த்தம் ? எது தான் குறிக்கோள் ?


சிந்திப்போம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/218-1.html

Friday, December 29, 2017

யோக சூத்திரம் - 2.17 - துன்பத்தின் காரணம் , தொடர்பு

யோக சூத்திரம் - 2.17 - துன்பத்தின் காரணம் , தொடர்பு


द्रष्टृदृश्ययोः संयोगो हेयहेतुः ॥१७॥

draṣṭr̥-dr̥śyayoḥ saṁyogo heyahetuḥ ॥17॥


draṣṭr̥ = பார்ப்பவன்

dr̥śyaḥ = பார்க்கப் படுவது

saṁyoga = தொடர்பு, ஐக்கியம்,

heya = தவிர்க்கப் பட வேண்டியது

hetuḥ = காரணம்

அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் இரண்டுக்கும் உள்ள தொடர்பு தவிர்க்கப் பட கூடியது. துன்பங்களுக்கு அதுவும் காரணம்.

துன்பங்களை, கஷ்டங்களை எப்படி தவிர்ப்பது என்று ஆரம்பித்தவுடன், "ஆஹா, இதோ நமது எல்லா துன்பங்களுக்கும் ஒரு விடை கிடைத்து விட்டது " என்று எண்ணக் கூடாது.

துன்பங்கள் பலவகை. உடல் துன்பம், உள்ளைத் துன்பம், பணத்தினால் வரும் துன்பம், சட்டச் சிக்கல், உறவுகளால் வரும் துன்பம், என்று பலப் பல துன்பங்கள் உள்ளன. அனைத்துக்கும் ஒரே ஒரு பதில் இருக்க முடியாது.


துன்பங்களுக்கு உள்ள காரணங்களை தொகுத்து, இந்த மாதிரி துன்பங்களுக்கு, இது வழி என்று காண்பிக்கிறார். நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்  நமது துன்பம் எப்படி பட்ட துன்பம் என்று. கண்டு கொண்ட பின், அதை தீர்க்க   யோக சாத்திரம் என்ன சொல்கிறது என்று அறிந்து அதன் படி செயல் பட வேண்டும்.


நமது உழைப்பும், கொஞ்சம் அறிவும் வேண்டும். முழுச் சோம்பேறியாக இருந்து கொண்டு  எனது துன்பங்களுக்கு யோக சாத்திரம் சரியான தீர்வை சொல்லவில்லை , என்ன பெரிய யோக சாத்திரம் என்று அலுத்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

இது யோக சாத்திரத்துக்கு மட்டும் அல்ல. எதைப் படித்தாலும் , இது பொருந்தும். கீதை, இராமாயணம், குறள் என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். 1330 குறளையும் படித்து விட்டேன். என் துன்பம் குறைந்து பாடில்லை என்றால் எப்படி குறையும் ? சுந்தர காண்டம் படித்தால் துன்பம் குறையும் என்று சொல்வார்கள்.  படித்தேன் , ஒன்றும் குறையவில்லை என்று சொல்பவர்களை என்ன சொல்வது. படித்தால் மட்டும் போதாது, அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று அறிந்து செயல் படவேண்டும்.

சில பேர் படித்துக் கொண்டே இருப்பார்கள். செயல் இருக்காது. கேட்டால், இது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள்.

சரி இப்போது சூத்திரத்துக்கு வருவோம்.

நமக்கு வரும் துன்பங்களுக்கு பெரிய காரணம் நாம் எதை அனுபவிக்கிறோமோ, அதை நாமாகவே நாம் பாவித்துக் கொள்வதால் வரும் துன்பம்.

அது என்ன அனுபவிப்பது, பாவிப்பது ?

சொல்கிறேன்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

இந்தியன், இந்து/கிறித்துவன் /முஸ்லீம், தென் இந்தியன்/ வட இந்தியன்,  செட்டியார்/முதலியார்/பெந்த கோஸ்தே என்று ஏதாவது சொல்லுவோம் அல்லவா ?


நீங்கள் இந்தியான ?

நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள். அவ்வளவு தான். இந்தியாவின் நிலம், நீர், காற்று, அது தரும் வசதிகளை அனுபவிக்கிறீர்கள். இந்த அனுபவிக்கப் படும் பொருள் சிறிது சிறிதாக உங்களோடு கலந்து விடுகிறது. "நான் இந்தியன்" என்று ஆகி விடுகிறது. வெளியில் இருக்கும் இந்தியாவோடு நீங்கள் ஒன்றாக ஆகி விடுகிறீர்கள்.

நீங்கள் இந்துவா ?

இந்து மத கோட்பாடுகளை கடை பிடிக்கிறீர்கள். சாலை விதிகளை கடை பிடிப்பது போல. வருமான வரி விதிகளை கடை பிடிப்பது போல. சாலை விதிகளை கடை பிடிப்பதால் யாராவது "நான் ஒரு சாலை" என்று சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா ? அப்படியே சொன்னாலும் நீங்கள் என்ன அப்படி சொல்பவரை பற்றி என்ன நினைப்பீர்கள் ?

ஆனால், ஒரு மத கோட்பாடுகளை கடை பிடிப்பவர்கள் அந்த மதமாகாவே மாறி விடுகிறார். நான் இந்து, முஸ்லீம், கிறித்துவன்  என்று ஆகி விடுகிறார்.

சாலை விதிகள் அடங்கிய புத்தகத்தை ஒருவர் எரித்தால் உங்களுக்கு கோபம் வராது. ஆனால், உங்கள் முன்னால் ஒருவர் கீதையையோ, குரானையோ, பைபிளையோ எரித்தால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏன் ? எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ, அதையே நீங்களாக நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

சரி. அப்படி நினைத்துக் கொண்டால் என்ன கெட்டு பொய் விட்டது ? அதனால் என்ன துன்பம் வந்து விடும் ?

நான் ஒரு இந்துவாகவோ, இந்தியனாகவோ இருப்பதால் என்ன சிக்கல் ?

நீங்கள் இந்தியன் என்றால், பாக்கிஸ்தான் காரன் மேல் கோபம் வருகிறது. அவனோடு சண்டை போட இராணுவத்தை வளர்கிறீர்கள்.

நீங்கள் இந்து என்றால், முஸ்லீம் மேல் வெறுப்பு வருகிறது. உங்களுக்கு வரமால் இருக்கலாம். ஒரு முஸ்லிமுக்கு உங்கள் மேல் வெறுப்பு வரலாம் அல்லவா , நீங்கள் இந்துவாக இருப்பதால் ?

இப்படி எதையெல்லாம் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்களோ, அது அல்லாத மற்றவற்றில் இருந்து நீங்கள் அந்நியப் பட்டு போகிறீர்கள். அவற்றோடு முரண் படுகிறீர்கள். அவற்றோடு சண்டை போட தயாராக இருக்கிறீர்கள்.

இது ஒரு நிலை.

அடுத்தது, நீங்கள் செய்யும் வேலை. நான் ஒரு டாக்டர், என்ஜினீயர் என்று வேலையோடு நீங்கள் உங்களை ஐக்கிய படுத்திக் கொள்கிறீர்கள்.

இதையும் அடுத்த நிலை, பொருள்களோடு உங்களை தொடர்பு கொடுத்திக் கொண்டு துன்பப் படுவது.

உதாரணமாக, பேனா என்பது எழுதுவதற்கு ஒரு கருவி. அவ்வளவு தான். அது தொலைந்து போனால், இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு  "நான் ஆசை ஆசையாக வைத்திருந்த பேனா தொலைந்து போய் விட்டது " என்று வருந்துபவர்களை காணலாம்.

பேனா என்பது ஒரு உதாரணம் தான்.

நாய் குட்டி, செருப்பு, செல் போன், வீடு, நிலம், என்று உங்கள் பிடிமானம் இதன் மீதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடுத்த படி,

உறவுகள். பிள்ளை, கணவன், மனைவி, என்று. அவர்களோடு உங்களை நீங்கள் ஐக்கியப் படுத்திக் கே கொள்வதால் எவ்வளவு துயரம் ?

சரி, அதுக்காக எல்லாரையும் விட்டு விட்டு சாமியாராகப் போக முடியுமா ?

வேண்டாம்,  உறவுகளை இராசியுங்கள். அனுபவியுங்கள். ஆனால், அவைதான் நான், அவை இல்லாமல் நான் இல்லை, அவர்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை என்று அவற்றை உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வருந்தாதீர்கள்.

சற்று சிரமம் தான்.


முடியாவிட்டால் ஒன்று பண்ணுங்கள். உறவுகள் பிரியும் போது வரும் துன்பத்திற்கு காரணம் உறவினர் அல்ல, நீங்கள் அல்ல, நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட மாய சங்கிலி என்று அறிந்து கொள்ளுங்கள் போதும். துன்பம் குறையும்.

அடுத்தது, இவை எல்லாவற்றையும் விட நுண்ணியமானது, இந்த உடல். உங்கள் உடலை நீங்களாகவே நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலா ? இந்த உடல் தான் நீங்கள் என்றால், ஐந்து வயதில் இருந்த உடலும், இப்போது உள்ள உடலும் ஒன்றா ?

அதை விடுங்கள்.


நீங்கள் உங்கள் உடல் சம்பந்தமாக பேசும் பேச்சுகளை பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நீங்கள் என்பது இந்த உடல் இல்லை என்று.

உங்களுக்கு தலை வலி என்று வைத்துக் கொள்வோம். மருத்துவரிடம் போகிறீர்கள்.

என்ன சொல்வீர்கள் ?

டாக்டர் எனக்கு தலை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள் ?

எனக்கு தலை வலிக்கிறது என்றால் அதில் உள்ள எனக்கு என்பது யார் ?

என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று   கேட்கிறோம். என் உடல் என்றால், நான் வேறு , என் உடல் வேறு என்று தெரிகிறது அல்லவா ? என் money purse என்றால், நான் வேறு, என் money purse  வேறு என்று தெரிகிறது அல்லவா ?

என் தலை வலிக்கிறது, என் உடல் , என் பேனா, என் கணவன், என் மனைவி, என் வீடு என்று சொல்லும் போது நான் வேறு என் பேனா வேறு, என் கணவன் வேறு, என் மனைவி வேறு என்று தெரிகிறது அல்லவா ?

அதே போல், நீங்கள் வேறு , உங்கள் உடல் என்பது வேறு.

ஆனால், நாம் , நம் உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் அல்ல, மற்றவர்களும் அவர்கள் உடல் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுபவிப்பவது நீங்கள். அனுபவிக்கப் படுவது உடல். இந்த உடல் மூலம் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த உடல் தான் நான் என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்.

இந்த அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது இரண்டுக்கும் உள்ள தொடர்பு தான் துன்பங்களுக்கு மூல காரணம்.

புரிகிறது தானே ?


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/217.html



Thursday, December 28, 2017

யோக சூத்திரம் - 2.16 - எந்தத் துன்பங்களை தவிர்ப்பது ?

யோக சூத்திரம் - 2.16 - எந்தத் துன்பங்களை தவிர்ப்பது ?


हेयं दुःखमनागतम् ॥१६॥

heyaṁ duḥkham-anāgatam ॥16॥

heyaṁ = தவிர்த்தல்

duḥkham = துக்கம்

anāgatam = எதிர்காலம்


எதிர் காலத்தில் வரும் துன்பங்களை தவிர்க்கலாம்.

எதிர் காலம் இன்னும் வரவில்லை. எதிர் கால துன்பம் என்று ஒன்று கிடையாது. பின் ஏன், பதஞ்சலி எதிர் கால துன்பங்களை தவிர்க்கலாம் என்கிறார் ?

வாழ்க்கை என்பது துன்பங்கள் நிறைந்தது.

பரிணாமம், தாபம், சம்ஸ்காரம் இவற்றினால் துன்பம் விளைகிறது என்று பார்த்தோம்.

நிகழ்ந்த துன்பங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவை நடந்து முடிந்து போனவை. ஆனால், நாம் அவற்றை விடுவது இல்லை. நடந்து முடிந்த துன்பங்களை மீண்டும் மீண்டும் நினைத்து மேலும் துன்பப் படுகிறோம்.

"அன்னிக்கு அவன் அப்படி செய்தானே "

"அவள் அன்று அப்படி சொன்னாளே "

என்று பழசை நினைத்து மேலும் துன்பப் படுகிறோம்.

முதலில் அதை நிறுத்த வேண்டும். நடந்து முடிந்த துன்பங்களை எப்போதும் இழுத்துப் போட்டுக் கொண்டு  மீண்டும் துன்பப் படக் கூடாது.

இரண்டாவது, எதிர் காலத்தில் வரப் போகும் துன்பங்களை நாம் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியும் .

நடந்து முடிந்ததை ஒண்ணும் பண்ண முடியாது.

இனி வரும் துன்பங்களை எப்படி விலக்குவது என்று பதஞ்சலி சொல்லப் போகிறார்.

வாருங்கள், கேட்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/216.html

Wednesday, December 27, 2017

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 4

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 4


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 

துன்பங்களுக்கு காரணம் என்ன ?

முதல் காரணம் - பரிணாமம் - அதாவது மாற்றம் 

இரண்டாவது காரணம் - தாபம் 

இவை இரண்டையும் இதற்கு முந்தைய பிளாகில் பார்த்தோம் 

அடுத்தது,

ஸம்ஸ்கார. ஸம்ஸ்கார என்றால் சுவடுகள், படிமங்கள் என்று அர்த்தம். 

அது என்ன சுவடு, படிமம்...அது எப்படி துன்பத்துக்கு காரணமாகும் ?

அனுபவங்கள் நமக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இன்பமோ, துன்பமோ , நல்லதோ கெட்டதோ அவை நமக்குள் ஒரு பதிவினை விட்டுச் செல்கின்றன. 


கடற்கரையில் காலடிச் சுவடுகள் போல, அனுபவங்களின் சுவடுகள் நமக்குள் ஏராளமாய் படிந்து கிடக்கின்றன. சில பேரை நினைத்தாலே வெறுப்பும் கோபமும் வருகிறது. சில பேரை நினைத்தால் மனதுக்குள் மழை அடிக்கிறது. அதே போல சம்பவங்களும். சில சம்பவங்கள் மனதுக்குள் நெருடலை விட்டுச் செல்கின்றன. சில சம்பவங்கள் இனிய நினைவுகளை விட்டுச் செல்கின்றன.

எப்போதோ நடந்து முடிந்த சம்பவங்கள் இன்றும் நம்மை பாதிக்கின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்ததை நினைத்து இப்போது வருந்துகிறோம். 

சில சமயம் அவை மீண்டும் கிடைக்காதா என்று ஏங்கி வாடுகிறோம். 

அனுபவங்களை சேர்த்துக் கொண்டே போவதால் ஒவ்வொரு அனுபவம் ஒரு படிமத்தை, ஒரு சுவடை விட்டுச் செல்வதால், யோசித்துப் பாருங்கள், எத்தனை ஆயிரம் சுவடுகள் உங்களுக்குள் இருக்கும் என்று.  இவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதி உங்கள் மனதை அலைக்கழிக்கின்றன. நல்லது கெட்டது  என்று எல்லாம் குவிந்து கிடக்கிறது. 


வாசனை என்று சொல்லுவார்கள். பெருங்காயம் வைத்த பாத்திரத்தில், பெருங்காயத்தை எடுத்த பின்னாலும் வாசம் வந்து கொண்டே இருப்பதை போல, சம்ஸ்காரம் என்பது உள்ளே இருந்து கொண்டு நம்மை நடத்துகின்றன.

குழந்தைகள் சந்தோஷமாக இருக்கின்றன என்றால் அவைகளிடம் இந்த அனுபவ தொகுப்பு இல்லை. 

இவர் நல்லவர், அவர் கெட்டவர் , இது நல்லது, அது கெட்டது , இது உயர்வு, இது தாழ்வு என்று எத்தனையோ படிமங்கள். 

சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் சுவடுகளை.


அடுத்தது குணங்கள்.

ரஜோ , தமோ, சாத்வீகம் என்று மூன்று குணங்கள் நமக்கு இருக்கின்றன.


இதில் சாத்வீகம் என்பது சாந்தம், பொறுமை, நல்லதை நினைப்பது  என்பது. 

ரஜோ குணம் என்பது வீரியம், செயலாற்றுதல், உழைப்பை தூண்டுவது, செயலை தூண்டுவது. 

தமோ குணம் என்பது சோம்பல், முடங்கிக் கிடத்தல், அனுபவித்தல், சுகத்தில் மூழ்குதல் என்பன.

இதில் நமக்கு ரஜோ குணமும், சாத்வீகமும் வேண்டும், தமோ அல்லது தமஸ் என்று சொல்லப் படும் குணம் வேண்டாம், அது கெட்ட குணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

அப்படி அல்ல. 

இந்த முக்குண கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். 

தமோ குணம் இல்லை என்றால் தூங்க முடியாது. ரஜோ குணம் அளவுக்கு அதிகமாகப் போனால் , ஏதாவது செய்து கொண்டே இருக்கத் தோன்றும். பத்து மணிக்கு மேல் பார்ட்டி, கிளப் என்று அலையும். இருக்கிற நேரம் பூராவையும் அனுபவிக்க வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும். உழைப்பு எவ்வளவு  முக்கியமோ, அதே அளவு முக்கியம் ஓய்வும். தூக்கம் வராமல் அவதி  படுபவர்கள் தமோ குணம் குறைந்ததால். 


இந்த குணங்கள் மாறு பட்டால் துன்பம் வரும். சாத்வீகம் மிகக் குறைந்தால் உயர்ந்த சிந்தனைகள், நோக்கங்கள் இல்லாமல் போகும். வாழ்க்கை என்பது ஏதோ அனுபவிக்க என்று நினைத்த்துக் கொண்டு எல்லாவற்றையும் அனுபவிக்க துடிக்கும். 

இந்த மூன்று குணங்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிக்கல் தான். 


மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் நூலோர்


வளிமுதலா வெண்ணிய மூன்று.

என்பார் வள்ளுவர். 

இந்த மூன்றும், மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் (துன்பம் ) செய்யும்.

இவற்றை எப்படி கட்டுப் படுத்துவது என்று எழுதப் புகுந்தால் நீண்டு விரியும். ஆர்வம் உள்ளவர்கள் தேடி அடையுங்கள். 

இந்த துன்பங்களில் இருந்து விடு பட என்ன வழி ?

விழிப்புணர்வு (awareness ) உள்ளவர்கள், இந்த துன்பங்களில் இருந்து விடுபடுவார்கள் என்கிறார்.

எப்படி அவர்கள் விடுபடுவார்கள் என்பதை பார்ப்போம். 



http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-4.html

Monday, December 25, 2017

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 3

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 3


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 



துன்பத்திற்கு என்ன காரணம் ?

முதலாவது காரணம் - பரிணாமம் என்று பார்த்தோம். 

அடுத்தது, தாபம். தாபம் என்றால் ஏக்கம், தவிப்பு. பொருள்களும், உறவுகளும் இன்பம்  தருபவைதான். அதில் சந்தேகம் இல்லை. அவற்றை அடைய  முயற்சிப்பதிலும் தவறில்லை. ஆனால், அவை கிடைத்தால் தான் வாழ்க்கை, இல்லை என்றால் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்ற  தாபம் துன்பத்திற்கு இன்னொரு காரணம். 


சிலருக்கு , தங்களுக்கு வேண்டியதை அடையும் வரை தூக்கம் வராது, நிம்மதி இருக்காது, வேறு எதுவும் ஒரு பொருட்டாகத் தெரியாது. 

பணம், அதிகாரம், பதவி, செல்வாக்கு, மதிப்பு, என்று ஏதோ ஒன்றை சதா சர்வ காலமும்  அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். 


சிலர் கடவுள், சொர்கம், வைகுண்டம், கைலாசம், இறைவன் திருவடி என்று ஏங்குவார்கள். 

எல்லா ஏக்கமும் ஒன்றுதான். அது செல் போனாக இருந்தாலும் சரி, புதியதாய் வந்த  காராக இருந்தாலும் சரி, இறைவன் திருவடியாக இருந்தாலும் சரி...ஆசை என்பது ஆசைதான். இதன் மேல் ஆசை என்பதில் பெரிய  பெரிய வித்தியாயசம் இல்லை. 

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார் திருமூலர். 

இறைவன் மேல் வைத்த உயர்ந்த ஆசை , பொருள்கள் மேல் வைத்த தாழ்ந்த ஆசை  என்று இல்லை. 

எல்லா ஆசையும் ஒன்று தான். 

தாபம் மறைந்தால் துன்பம் மறையும். 

நாமாக கற்பித்துக் கொள்கிறோம்...சிற்றின்பத்தின் மேல் ஆசை வைக்கக் கூடாது. பேரின்பத்தின் மேல் ஆசை வைக்கலாம் என்று. 

பதஞ்சலியைப் பொறுத்த வரை, எல்லா சிற்றின்பம், பேரின்பம் என்ற பாகு பாடெல்லாம்  கிடையாது. எல்லா தாபங்களும் துன்பம் மற்றும் வலிக்கு காரணம். அவ்வளவுதான். 

யோசித்துப் பாருங்கள். தாபம் என்று ஒன்று வந்து விட்டால், மகிழ்ச்சி மறைந்து விடும்.  இதன் மேல் தாபம் இருக்கிறதோ, அது மட்டுமே பிரதானமாகத் தெரியும். மற்றவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 

உங்கள் தாபம் இதன் மேல் என்று சிந்தியுங்கள். அது எப்படி உங்கள் மகிழ்ச்சியை குறைக்கிறது என்றும் சிந்தியுங்கள். 

நல்ல தாபம், கெட்ட தாபம் என்று லேபிள் ஒட்டாதீர்கள். யாருக்காக அந்த தாபம் என்று நினைக்காதீர்கள் ...நாட்டுக்கு, வீட்டுக்கு ...என்று ஆயிரம் காரணம் கிடைக்கலாம் அந்த தாபத்தை ஞாயப்படுத்த. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுங்கள். 

உங்களின் தாபம் எது என்று மட்டும் சிந்தியுங்கள். 

துன்பத்திற்கு மேலும் என்னென்ன காரணங்கள் என்று மேலும் சிந்திப்போம். 


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-3.html

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 2

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 2


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 



துன்பத்திற்கு என்ன காரணம் ?

முதலாவது காரணம் - பரிணாம - என்கிறார்.

பரிணாமம் என்றால் என்ன ?

மாற்றம்.  வெளி உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. இன்று ஏதோ ஒன்று விளம்பரத்தில் வருகிறது, அல்லது நண்பர் வீட்டில் பார்க்கிறோம், அதன் மேல் ஆசை வருகிறது. நமக்கும் அது போல   இருந்தால் எப்படி இருக்கும் என்று ஏக்கம் வருகிறது. அதை அடைய மனம்  விரும்புகிறது. கஷ்டப்பட்டு அடைந்தும் விடுகிறோம். அடைகிற வரையில் துன்பம்தான்.  அடைந்த  பின் இன்பம் வருகிறதா ? இல்லை. 

ஏன் இல்லை ?

பரிணாமம். உலகம் மாறிப் போகிறது. நாம் அடைந்ததை விட சிறந்த ஒன்று வந்து விடுகிறது.  அட, இதுனால என்ன பிரயோஜனம். இதை விட அது நல்லா இருக்கே என்று மனம் வேறொன்றை நாடுகிறது. 

அது மட்டும் அல்ல, 

இன்னொரு பரிணாமமும் இருக்கிறது....அது...நாம் அடைந்த பொருள் நாளடைவில் மாறி விடும். 

பழசாகி விடும். தேய்ந்து போகும். கெட்டு போகும். மங்கிப் போகும். வாங்கிய போது இருந்த மெருகு எதிலும் இருக்காது. 

இதில் பொருளில் மட்டும் அல்ல. மனித உறவுகளிலும் அப்படித்தான். 

அழகான பெண் என்று கல்யாணம் கட்டிக் கொண்டு வருகிறான். கல்யாணம் முடிந்த பின், இவளை அவள் அழகோ ? அவளை திருமணம் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்குமோ ? என்று மனம் அலை பாய்கிறது. 


திருமணம் ஆன சில வருடங்களில், அலுப்பு வந்து விடுகிறது. ஓரிரண்டு குழந்தைகள் பிறந்த பின் பெண்ணின் அழகு முன்பு போல் இருப்பது இல்லை. மாற்றம் வருகிறது. 

அது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. வயது ஏறும். முதுமை வரும். அழகு குன்றும். 

இது ஒரு புறம்.

இன்னொரு பரிணாமம் இருக்கிறது. மூன்றாவது பரிணாமம் ...அது நம் மனம். 


ஆசைப் படும் போது இருக்கும் மனம், அதை அடையும் போது இருப்பது இல்லை. மனம் மாறிக் கொண்டே இருக்கிறது. 


நம்மிடம் இருக்கும் எத்தனையோ பொருள்கள், உறவுகள் , அவை எல்லாம் ஒரு காலத்தில், அவற்றை அடைவதே நம் இலட்சியம் என்று இருந்தோம். அது மட்டும் கிடைத்து விட்டால் , சொர்கமே  கிடைத்த மாதிரி என்று இருந்தோம். கிடைத்த பின் சொர்கம் மாதிரியா இருக்கு ? 

அது அப்படி இருக்கும் போது , இப்போதுள்ள ஆசைகள் மட்டும் அதற்கு விதி விலக்கா ? இவையும் நமக்கு இன்பம் தரப் போவது இல்லை. இருந்தும், அவற்றின் பின்னால் ஓடுகிறோம்.


இந்த பரிணாமத்தை புரிந்து கொள்ளாவிட்டால் துன்பம் தான். 


வெளி உலகம் மாறிக் கொண்டே இருக்கும். 


அதனால், நம் மனமும் மாறிக் கொண்டே இருக்கும். 

அது தெரியாமல், இது தான் எனக்கு வேண்டும். அதை அடைந்தால் தான் நிம்மதி. மன அமைதி கிடைக்கும்   என்று நினைப்பது வீண் வேலை. அதனால் துன்பம் வருகிறது. 

எதை அடைந்தாலும் இன்பமும், அமைதியும் வரப் போவது இல்லை. அப்படி ஒன்று இருந்தால், மனித குலம் அதை இந்நேரம் கண்டு பிடித்திருக்கும். 

சற்றே தள்ளி நின்று யோசியுங்கள்.

எதெல்லாம் ஆசைப்  பட்டீர்கள். எவற்றையெல்லாம் அடைந்தீர்கள். அடைந்தவை எல்லாம் உங்களுக்கு  நினைத்த இன்பத்தை தந்திருக்கிறதா ? இப்போது எவற்றிற்கு எல்லாம் ஆசைப் பட்டுக்  கொண்டிருக்கிறீர்கள் ? சிந்தியுங்கள். 

துன்பத்திற்கு முதல் காரணம் - பரிணாமம்.

அடுத்த காரணம்.....

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-2.html

Saturday, December 23, 2017

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 1

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 1


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 

மிக மிக முக்கியனமான சூத்திரம்.

இன்பம் வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப் படுகிறார்கள். பலப் பல காரியங்கள் செய்கிறார்கள். இருந்தும் யாரும் இன்பமாய் இருப்பதாய் தெரியவில்லை.

திருமணம் ஆகாதவன், திருமணம் செய்து கொண்டால் இன்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறான்.

திருமணம் செய்து கொண்டவன், திருமணம் செய்யாமல் இருந்தால் இன்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறான்.

என்ன செய்தாலும், துன்பம் மட்டுமே மிஞ்சுகிறது. ஏன் ?

பணம் உள்ளவனும் துன்பப் படுகிறான், பணம் இல்லாதவனும் துன்பப் படுகிறான்.

பிள்ளை இல்லாதவனும் வருந்துகிறான், பிள்ளை உள்ளவனும் வருந்துகிறான்.

குழந்தையாக இருக்கும் போதும் துன்பம். வயதான காலத்திலும் துன்பம்.

வாழ்க்கை என்பது துன்பம் மட்டுமே நிறைந்ததாய் இருக்கிறது. இடை இடையிடையில் இன்பம் தலை காட்டி விட்டுப் போகிறது. இன்பத்தை நிரந்தரமாய் பிடித்து வைக்க முடிவதில்லை.

ஏன் ?

இதைப் பற்றி யோசித்து இருக்கிறோமா ?

பதஞ்சலி யோசித்து இருக்கிறார்.

துன்பத்திற்கு காரணம் என்ன என்று மட்டும் அல்ல. அவற்றை எப்படி போக்குவது என்றும் யோசித்து இருக்கிறார். வழியும் சொல்லித் தருகிறார்.

முக்கியமான சூத்திரம். ஆழமான பொருள் கொண்டது.

மொத்தத்தையும் ஒன்றாக எழுதினால் படிக்கும் போது விட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.

எனவே, பகுதி பகுதியாக பிரித்து சிந்திக்கலாம்.

என்ன, சரிதானே ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-1.html