Sunday, December 10, 2017

யோக சூத்திரம் - 2.14 - இன்ப துன்பத்திற்கு காரணம்

யோக சூத்திரம் - 2.14 - இன்ப துன்பத்திற்கு காரணம்



ते ह्लाद परितापफलाः पुण्यापुण्यहेतुत्वात् ॥१४॥

te hlāda paritāpa-phalāḥ puṇya-apuṇya-hetutvāt ॥14॥

te = அது

hlāda  = இன்பமான

paritāpa = பரிதாப, துக்ககரமான

phalāḥ = பஹ்லா , (phal என்றால் பழம்) பலன்களை

puṇya = புண்ணியம்

apuṇya = அ -புண்ணியம் , புண்ணியம் அல்லாத

hetutvāt = ஹேதுவத் , ஏதுவான, உருவாக்குகின்ற , உதவி செய்கின்ற


செயலின் தன்மையைப் பொறுத்து இன்ப துன்பங்கள் விளைகின்றன.


நாம் அன்றாடம் பார்க்கும் வாழ்க்கையில் நல்லவர்கள் துன்பப் படுகிறார்கள். கெட்டவர்கள் இன்பமாக வாழுகிறார்கள்.

எது எந்த  விதத்தில் சரி ?


சட்டத்துக்கு பயந்து, நீதி, நேர்மை, ஞாயம், உழைப்பு என்று இருப்பவன் அல்லல் படுகிறான்.


பொய், புரட்டு, இலஞ்சம், கொலை, கொள்ளை செய்பவன் இன்பமாக இருக்கிறான்.

கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா ? இதுக்கெல்லாம் என்ன காரணம். சந்தோஷமாக இருக்க இதுதான் வழி என்றால், பின் எல்லோரும் அயோக்கியத்தனம் செய்து விட்டு போகலாமே. நாட்டில் தர்மம் என்று ஒன்று எதற்கு ?

இந்த சந்தேகம் வராத ஆளே கிடையாது.

ரொம்ப யோசித்து கடைசியில், இது போன ஜென்ம பாவ புண்ணியம் என்று தங்களை தாங்களே  தேற்றிக் கொள்கிறோம்.

ஏன் ஒரு ஜென்மம் காத்திருக்க வேண்டும் ? இந்த ஜென்மத்திலேயே அதன் பலன் ஏன் கிடப்பது இல்லை ?

சரி, அப்படியே மறு ஜென்மத்தில் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...இன்று சுகமாக இருப்பவன், போன பிறவியில் நல்லது செய்திருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால், இந்த பிறவியில் ஏன் அயோக்கியத்தனம் செய்து சுகமாக  இருக்கிறான் ? நல்லது செய்து இன்பமாக இருக்கக் கூடாதா ?

பதஞ்சலி இதற்கு பதில் சொல்கிறார்.

இந்த கடவுள், மறு பிறவி, முன் பிறவி, கர்ம வினை என்று அனைத்தையும் புறம் தள்ளி விடுகிறார்.


அதை எல்லாம் கொண்டு வந்தால் எதையும் நிரூபணம் பண்ண முடியாது.

முன் பிறவியின் தொடர்ச்சி என்று எப்படி நிரூபணம் செய்வது ?


பதஞ்சலி ஒரு விஞ்ஞானி மாதிரி. எதை சோதித்து அறிய முடியுமோ, அது தர்க்க வாதத்துக்கு (logic ) உட்படுமோ, அதை மட்டுமே சொல்லுவார்.

பதஞ்சலி கூறுகிறார், உன் சந்தோஷமும், துக்கமும் உன் செயல்களின் விளைவு. அவ்வளவுதான்.


நீங்கள் இப்போது துன்பப் படுகிறீர்களா ? முன்பு எதையோ சரியாகச் செய்யவில்லை. அவ்வளவு தான்.

முன்பு என்றால் முற்பிறப்பு இல்லை. .இந்த பிறப்புதான்.

கணவனோ மனைவியோ , மாமியார் நாத்தனார் , சம்பந்தி சரியாக அமையவில்லையா ? அதனால் மன கஷ்டமா ?

காரணம் சம்பந்தம் பேசும் போது சரியாக வேலை செய்யவில்லை.

வறுமை வாட்டுகிறதா ? படிப்பு, உழைப்பு, நல்ல ஆட்களின் தொடர்பை ஏற்படுத்தாமல் இருந்ததனால் வந்த விளைவு.

ஆரோக்கிய குறைவா - தவறான உணவு பழக்கம், உடற் பயிற்சி இன்மை ...

இப்படி எந்த நல்லது கெட்டதுக்கும் நாம் செய்யும் செயல்களே காரணம்.

கடவுள், முன் வினை, சுவர்க்கம் , நரகம் இதெல்லாம் தேவை இல்லை.

நல்ல வேலை செய்தால், நல்ல பலன் விளையும். அவ்வளவுதான்.

சரி, அது சரி என்றே எடுத்துக் கொள்வோம். அதனால் என்ன இப்ப ? இதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் ?

இனிமேல் உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இனி செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சரியாகச் செய்ய வேண்டும்.

தெளிவான சிந்தனை. சரியான ஆராய்ச்சி. தேவையான உழைப்பு.

ஏனோ தானோ என்று காரியம் செய்தால், பின்னால் அது மன கிலேசத்தில் கொண்டு விடும்.

எதுக்கு தேவை இல்லாமல் முன் பிறவி, முன் வினை, கடவுள் , கத்திரிக்காய் என்று போட்டு குழப்ப வேண்டும்.

என்ன சரிதானே ?


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/214.html




Thursday, December 7, 2017

யோக சூத்திரம் - 2.13 - வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி

யோக சூத்திரம் - 2.13 - வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி


सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ॥१३॥

sati mūle tad-vipāko jāty-āyur-bhogāḥ ॥13॥

sati = அப்படி இருப்பதற்கு

mūle =மூல காரணம்

tad = அவர்களின்

vipāko = வெளிப்பாடு,

jāty = சமூக நிலை

āyur = ஆயுள்

bhogāḥ = வாழ்க்கையை அனுபவிப்பது

ஒருவனின் ஆயுள், சமூக நிலை, அவன் எவ்வாறு வாழ்க்கையை அனுபவிக்கிறான் என்பது அதைப் பொறுத்தது 


நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும் , உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட பாதையிலேயே மீண்டும் மீண்டும் போய் கொண்டிருப்பது. உங்கள் செயல், எண்ணங்கள், எல்லாமே ஒரு செக்கு மாடு மாதிரி மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றையே சுத்தி சுத்தி வரும்.

அது பயமாக இருக்கலாம், குழப்பமாக இருக்கலாம், குற்ற உணர்வாக இருக்கலாம், ஆசையாக இருக்கலாம் ஏதோ ஒன்றைப் பற்றியே உங்கள் வாழ்க்கை சுத்தி சுத்தி வரும்.

அதைப் பொறுத்தே நீங்கள் இருக்கும் இடம், உண்ணும் உணவு, செய்யும் செயல்கள் அனைத்தும் இருக்கும். இவை ஏதோ ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை போலத் தெரிந்தாலும், இவற்றிற்கு அடி நாதமாய் ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.

சிலருக்கு வெளியே போகவே பிடிக்காது. சிலருக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் போதும் எங்கே போகலாம் என்று இருப்பார்கள்.

சிலருக்கு தாழ்வு  மனப்பான்மை இருக்கும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைவும் அந்த தாழ்வு மனப்பான்மையை போக்கிக் கொள்ளவே இருக்கும்.

சிலருக்கு, ஆச்சாரம்,
சிலருக்கு , ஆணவம்,
சிலருக்கு, பக்தி , படிப்பு,
சிலருக்கு , சேவை

என்று ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொள்ளகிறார்கள்.

அவர்கள் செய்யும் செயல் அனைத்தும் அதை சார்ந்தே இருக்கிறது.

இங்கு ஒரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் .



 jāty-āyur-bhogāḥ

ஜாதி என்று பதஞ்சலி சொல்லுவது சமயம் சேர்ந்த , பிறப்பு சார்ந்த ஜாதி அல்ல. தொழில் சார்ந்த ஜாதி.

சிலருக்கு படிப்பு, சொல்லிக் கொடுப்பது, ஆராய்ச்சி செய்வது இவற்றில் நாட்டம் இருக்கும்.

சிலருக்கு விளையாட்டு, வேலை செய்வது, பிரயாணம் செய்வது இவற்றில் ஆர்வம் இருக்கும்.

சிலருக்கு ஆட்களை கட்டி மேய்ப்பது, அவர்களை ஒழுங்கு படுத்துவது, வேலை வாங்குவது என்று நாட்டம் இருக்கும்.


இப்படி ஒவ்வொருவருக்கும் ஒன்றில் நாட்டம் இருக்கும். அதைப் பொறுத்தே அவர்களின் வேலை அமைகிறது. அதைப் பொறுத்து அவர்களின் சமுதாய அந்தஸ்து அமைகிறது.

பதஞ்சலி இன்னும் மேலே போகிறார்.

அவர்களின் ஆயுளும் அவர்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதும் இந்த கிலேசத்தின் அடிப்படையில் அமைகிறது என்கிறார்.

நாம் பல முறை செய்தி தாள்களில் படித்து இருக்கிறோம்...கோவில் வாசலில் பிச்சை எடுத்தவன் பல இலட்சங்களுக்கு அதிபதியாக இருந்து இறந்தான் என்று.

அவனுக்கு எதிர் காலம் பற்றிய பயம். பணத்தை சேமித்துக் கொண்டே இருந்தான். செலவழிக்க மனம் இல்லை. அது அவனின் மன  கிலேசம்.

பதஞ்சலி இது சரி, அது தவறு என்று சொல்ல வரவில்லை.

அவர் சொல்வதெல்லாம் இது தான்...இந்த மன கிலேசம் என்பது மிக மிக ஆழமானது. நம் வாழ்க்கையை நிர்ணயிப்பது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் கோபம், பயம், மனப் பான்மை, சந்தோஷம், துக்கம், வேலை, உறவுகளின் தன்மை எல்லாம்  உங்கள் மனதை பொறுத்தே அமைகிறது.

ஆழ்ந்து சிந்தியுங்கள். மீண்டும் மீண்டும் உங்கள் வாழ்வில் தோன்றும் எண்ணம் எது என்று. அது எங்கே இருந்து வருகிறது என்று தேடுங்கள்.

தேடுங்கள்....கண்டடைவீர்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/213.html

Wednesday, December 6, 2017

யோக சூத்திரம் - 2.12 - கர்மா

யோக சூத்திரம் - 2.12 - கர்மா 



क्लेशमूलः कर्माशयो दृष्टादृष्टजन्मवेदनीयः ॥१२॥

kleśa-mūlaḥ karma-aśayo dr̥ṣṭa-adr̥ṣṭa-janma-vedanīyaḥ ॥12॥


kleśa = கிலேசம், மன குழப்பங்கள், தடைகள்

mūlaḥ = மூலம், ஆதி

karma = கர்மா

aśayo = சாயா, நிழல், தொடர்ச்சி, பழக்கம்

dr̥ṣṭa = கண்ணுக்குத் தெரிவது

adr̥ṣṭa = கண்ணுக்குத் தெரியாதது

janma = வாழ்க்கையில்

vedanīyaḥ = அனுபவம், பட்டறிவு

நமது பழக்க வழக்கங்கள், மன கிலேசத்தில் இருந்து வருகின்றன. அதிலிருந்து நமது வினை மற்றும் அதன் பலன்கள் தொடர்கின்றன. அந்த மன கிலேசங்கள் சில சமயம் வெளிப்படையாகத் தெரியும். சில சமயம் தெரிவது இல்லை.


கர்மா என்றால் ஏதோ முன் ஜென்மத்தில் செய்தது, இந்த ஜென்மத்தில் நமக்கு வருகிறது என்று கொள்ள வேண்டியதில்லை. முன் ஜென்மம், இந்த ஜென்மம், மறு பிறவி என்பதெல்லாம் நம்பிக்கையின் பால் பிறப்பது. அவற்றை நிரூபணம் பண்ண முடியாது. வேண்டுமானால் நம்பிக் கொள்ளலாம். இந்து சமயம் தவிர மற்ற சமயங்கள் மறு பிறப்பு என்பதை பற்று பேசுவது இல்லை. எனவே அது எல்லா மக்களும் பின் பற்றக் கூடிய ஒன்று அல்ல. அது உலகளாவிய உண்மை என்று சொல்ல முடியாது. இந்த உலகில், ஒரு சிறு பகுதியினர் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள். அது உண்மையாக  இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை.

மேலும், நிரூபணம் பண்ண முடியாத எதையும் பதஞ்சலி சொல்லுவது இல்லை. ஆன்மீக உலகத்தில் பதஞ்சலி வேறு பட்டவர். அனைத்து மதங்களும் எதையாவது நம்பச் சொல்லும். கடவுள், சொர்கம், நரகம், கர்மா, மறு பிறப்பு, நியாயத் தீர்ப்பு என்று சோதித்து அறிய முடியாத ஒன்றை கண்ணை மூடிக் கொண்டு நம்பச் சொல்லும்.


பதஞ்சலி அப்படி அல்ல. அவர் சொல்வது ஒவ்வொன்றையும் நீங்கள் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரு விஞ்ஞான  கோட்பாடு மாதிரி. புவி ஈர்ப்பு விசையை அறிந்து கொள்ள நியூட்டன் மேல் நம்பிக்கை தேவை இல்லை. நீங்களே பரிசோதனை செய்து , விடை சரியாக வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். சரி இல்லை என்றால் விட்டுத் தள்ளி விடலாம். எந்த நம்பிக்கையும் தேவை இல்லை.

அதுபோலத்தான் பதஞ்சலியும்.


அவர் கர்மா என்று சொல்லுவது, நீங்கள் முன்பு கொண்ட கிலேசம்.

அது என்ன முன்பு கொண்ட கிலேசம் ?

உங்களின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் முன்பு எப்போதோ நீங்கள் உங்களை பழக்கப் படுத்திக் கொண்டதன் விளைவு.

சில விஷயங்களின் மேல் உங்களுக்கு கோபம் வருகிறது, ஆசை வருகிறது, சில பிடித்திருக்கிறது, சிலவற்றை கண்டால் வெறுப்பு வருகிறது, சிலவற்றை நினைத்தால் பயம் வருகிறது....

ஏன் ?

உங்களுக்கு ஒன்றின் மேல் பயம் என்று வைத்துக் கொள்வோம்...அந்த பயம் எல்லோருக்கும் இருக்கிறதா ? இல்லையே ? பின் உங்களுக்கு மட்டும் ஏன் அந்த பயம் ?

காரணம், முன்பு எப்போதோ நீங்கள் உங்கள் மனதில் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டது.

100 ரூபாய் சேமிப்பு இல்லாதவன், வாழ்க்கையை நம்பிக்கையோடு ஓட்டுகிறான். 5 கோடி ரூபாய் சேமிப்பு உள்ளவன், எதிர் காலம் பற்றி பயம் கொள்ளுகிறான்.

ஏன் ?

நம்முடைய அனைத்து செயல் மற்றும் எண்ணங்களுக்கு காரணம் நமது மனதில் ஏற்கனவே உள்ள கிலேசங்கள்.

நாம் செய்யும் / நினைக்கும் ஒவ்வொன்றும் நமக்குள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த சேர்த்து வைத்த குவியல் தான் நமது பழக்கமாக மாறுகிறது.

இப்படி செய்தால் - கோபம் வரும்.

அப்படி செய்தால் - ஆசை வரும்

இதற்கு - அன்பு
அதற்கு - வெறுப்பு

என்று ஒரு பட்டியல் உங்களுக்குள்ளே இருக்கிறது. அது உங்கள் பழைய அனுபவத்தில் இருந்து வருவது.


நாம் இந்த கணத்தில் வாழ்வது இல்லை. பழைய அழுக்கு மூட்டைகளை தூக்கிக் கொண்டு அதில் இருந்து வாழ்கிறோம்.

முன்பு செய்தது, நினைத்தது இன்றைய செயல் மற்றும் பழக்கமாக இருக்கிறது.

இன்று செய்வது மற்றும் நினைப்பது நாளைய பழக்கமகாக மாறும்.

இதுதான் கர்மா என்று கூறுகிறார்.

சிலருக்கு என்ன வந்தாலும் கிடைத்தாலும் மகிழ்ச்சி இருக்காது. நிம்மதி இருக்காது.

ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தாலும் , அதில் 30% வரி போய் விட்டதே  என்று கவலைப் படுவார்கள்.

காரணம் அவர்களுடைய பழைய கர்மா. மன கிலேசம்.

எதை நமது மனதில் படிய விடுகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். இன்று நாம்  படிய விடுவது, நாளை நமது எண்ணங்களை செயல்களை உருவாக்கும்.

இரண்டாவது, நமது இன்றைய செயல்களுக்கு எண்ணங்களுக்கு காரணம் என்றோ நமது மனதில் படிந்த நினைவுகள்.

அந்த விழிப்புணர்வு வந்து விட்டால், நமது எண்ணங்களும், செயல்களும் பழையதில் இருந்து விடுபட்டு, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார்ப் போல் அமையும்.


ப்ரதி பிரசவ என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறியதும் இதைத்தான்.

ஏதோ ஒரு சினிமாவில், புத்தகத்தில் வந்த கணவன்/மனைவி பாத்திரம் மனதுக்கு பிடித்துப் போய் விடுகிறது. கணவன் என்றால் அப்படி இருக்க வேண்டும். மனைவி என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு கற்பனை விழுந்து விடுகிறது. நிஜ வாழ்வில் கணவனோ மனைவியோ அப்படி அமைவதில்லை. என்ன ஆகிறது. கற்பனை கணவனுக்கும் நிஜ கணவனுக்கும் இடையில்  .போராட்டம்.

இது இந்த ஒரு கற்பனையில் மட்டும் அல்ல. இது வெளிப்படையாக தெரியும்.

பல விஷயங்கள் வெளிப்படையாக தெரிவது இல்லை.

சில பேர் சில விஷயங்களை பற்றி பேசவே  தயங்குவார்கள்.

ஏன் ?

அவர்களுக்கு அப்படி சொல்லப்பட்டது. அவர்கள் படித்த புத்தகங்கள், எல்லாம் சேர்ந்து அவரக்ளை அப்படி உருவாக்கி விட்டது.

நாம் நமது  கடந்த காலத்தின் கைதிகளாக இருக்கிறோம்.

இறந்த காலம் என்ற சிறையில் அடைப்பட்டு கிடக்கிறோம். அப்படி சிறையில் இருக்கிறோம் என்று கூடத் தெரியாமல் இருக்கிறோம்.

நல்லாதானே இருக்கிறது. காத்து வருகிறது. வெளிச்சம் வருகிறது. சாப்பாடு வருகிறது. சுகமாகத்தான் இருக்கிறது. இதுக்கு என்ன குறை என்று சிறை நமக்கு பிடித்துப் போய் விடுகிறது.

வெளியில் உள்ளவன் வா என்று அழைத்தாலும், வருவதில்லை. இதில் என்ன குறை இருக்கிறது என்று சுதந்திரமாக வெளியே வரச் சொல்கிறாய் என்று அவனோடு வாதம் செய்கிறோம்.

தங்க விலங்கு.

இந்த விழிப்புணர்வு (awareness ) வர வேண்டும். இறந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். அதில் இருந்து விடுபட வேண்டும்.

கர்ம வினையில் இருந்து விடுபடுவது என்பது  அதுதான்.

கோடிக்கணக்கான வருடங்களின் சுமையை தூக்கிக் கொண்டு அலைகிறோம் .

அதை இறக்கி வைத்து விட்டால். சுகம். சொர்கம். விடுதலை. முக்தி. வீடு பேறு.

சிந்தியுங்கள். நீங்கள் இன்றிருப்பது எப்படி என்று. அது எங்கிருந்து வருகிறது என்று.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/212.html

Tuesday, December 5, 2017

யோக சூத்திரம் - 2.11 - தியானம்

யோக சூத்திரம் - 2.11 - தியானம் 




ध्यान हेयाः तद्वृत्तयः ॥११॥

dhyāna heyāḥ tad-vr̥ttayaḥ ॥11॥

dhyāna = தியானம்

heyāḥ = தாண்டி வர,

tad = அவைகளை

vr̥ttayaḥ = எண்ண அலைகள்

அவற்றை தாண்டி வர தியானம் பண்ண வேண்டும். 

பதஞ்சலி படுத்தறார் இல்ல ? ரொம்பத்தான் வார்த்தை சுருக்கம்.

மன கிலேசம் நிறைய வழிகளில் வருகிறது என்று பார்த்தோம்.

அவித்தை, அஸ்மிதா, ரகா , பயம், என்று பல வழிகளில் வருகிறது.

இவை  வருகின்றன ? எங்கிருந்து வருகின்றன ? இவற்றை எப்படி கையாள்வது ?

தியானம் மூலம் இவற்றை கடந்து போகலாம் என்கிறார்.

எப்படி ?

நாம் நினைக்கிறோம் நமது மன சலனங்களுக்கு காரணம் வெளி உலகம் என்று.

கணவனோ மனைவியோ ஏதோ சொல்கிறார்கள். கோபம் வருகிறது. காரணம்  அவர்கள் தானே.

நல்ல பொருளை பார்க்கிறோம். அது நமக்கு வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். அப்படி பார்த்தால், ஆசைக்கு காரணம் வெளியே உள்ள அந்த பொருள் தானே ?

போலீஸ் அராஜகம், கொடுமையான பாலியல் வன் முறை, பட்டினிச் சாவு, கௌரவ கொலை  என்று பல விஷயங்களை கேள்விப் படும் போது   ,கோபமும்  வருத்தமும் வருகிறது அல்லவா. அதற்கு காரணம் அந்த  வெளி நிகழ்வுகள்தானே .

இல்லை என்கிறார் பதஞ்சலி.

இந்த மன சலனங்களுக்குக் காரணம் நாம் தான்.

உள்ளே இல்லாத உணர்ச்சி எப்படி வெளியில் இருந்து வரும் ?

ஒரு கணம் சந்தோஷமாக இருக்கிறோம். ஏதோ ஒரு செய்தி வருகிறது. சந்தோஷம்   இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. வருத்தம் வந்து சேர்கிறது.


நமது கோபம், காமம், பொறாமை, வருத்தம், பயம் போன்ற மன கிலேசங்களுக்கு காரணம் நம் அடி மனதில் படிந்துள்ள எண்ணங்கள் தான்.

அவற்றை அறிய வேண்டும் என்றால், நாம் உள் நோக்கி போக வேண்டும்.

எப்ப , எந்த செயல் செய்தாலும், என்ன எண்ணங்கள் வந்தாலும், ஏன் செய்கிறோம், என்ன சிந்திக்கிறோம் , என்ன நினைவுகள் வருகிறது என்று  சிந்திக்க வேண்டும். அந்த செயல் மற்றும் சிந்தனைக்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும்.

எளிய காரியம் இல்லை. நமக்குள்ளே அடுக்கடுக்காக எண்ணங்கள் , படிந்து கிடக்கின்றன.

ஒவ்வொரு வயதிலும் நிகழும் நிகழ்வுகள், அவ்வப்போது சொல்லப் பட்ட செய்திகள், படித்த புத்தகங்கள் உள்ளே படிந்து கிடக்கின்றன.

நாம் வாழ்வது நமது வாழ்க்கை அல்ல....மற்றவர்களின் வாழ்க்கை.

நமது மனத்தில் , நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், சமுதாயம் , படித்த புத்தகங்களின் ஆசிரியர்கள் என்று பெரும் கூட்டமே இருக்கிறது. இருந்து கொண்டு அதைச் செய், இதை செய், அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்குத் தெரியாது. இந்த கும்பல் உள்ளே இருந்து நம்மை ஏவிக் கொண்டிருப்பது.

கீ கொடுத்த கடிகாரம் போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கீ கொடுப்பது  மேலே சொன்ன கும்பல்.

தியானம் எப்படி செய்வது ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/211.html

Monday, December 4, 2017

யோக சூத்திரம் - 2.10 - காரணத்தை நோக்கி பயணி

யோக சூத்திரம் - 2.10 - காரணத்தை நோக்கி பயணி



ते प्रतिप्रसवहेयाः सूक्ष्माः ॥१०॥

te pratiprasava-heyāḥ sūkṣmāḥ ॥10॥

This burden (klesha) should be nipped in the bud. || 10||


te = அது
prati = மறுபடியும், மூலம், ஆதி
prasava = பிரசவம்
heya = மாற்ற, மறுக்க ,
sūkṣmāḥ = சூக்ஷும, நுண்ணிய

அதை மாற்ற மூலத்தை நோக்கி போ !

எதாவது புரிகிறதா ?

எதை மாற்ற ? எது மூலம் ? ஒண்ணும் புரியவில்லை அல்லவா ?

மன கிலேசத்தை மாற்ற மூலத்தை நோக்கி போ என்கிறார்.

மன கிலேசம் என்பது அவித்தை, அஸ்மிதா, ரகா , பயம் இவற்றால் உண்டாகிறது என்று பார்த்தோம்.

சரி, இவை எல்லாம் இருக்கிறது என்று புரிகிறது. பயம் இருக்கிறது. ஆசை இருக்கிறது. அதெல்லாம் சரி. இவற்றை எப்படி போக்குவது ?

காய்ச்சல் இருக்கிறது என்று தெரிகிறது. தெரிந்தால் மட்டும் போதாதே அதை  எப்படி குணப்படுத்துவது என்றும் தெரிய வேண்டுமே ?

சொல்லித் தருகிறார் பதஞ்சலி.

மூலத்தை நோக்கி சென்றால் இவற்றை மாற்ற முடியும் என்கிறார்.

எது மூலம் ?

நமது ஒவ்வொரு  குணாதிசயத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அந்த மூல காரணத்தை  கண்டு பிடிக்க வேண்டும்.

பயம் - அது எந்த பயமாக இருந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். மரண பயம், எதிர் காலம் பற்றிய பயம், மூப்பு பற்றிய பயம், தனிமை பயம், இப்படி எந்த பயம் என்றாலும், அதற்கு சிறு வயதில் நடந்த ஏதோ ஒன்று காரணமாக இருக்கும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணத்துக்கு பின்னாலும் ஒரு சிறு வயது நிகழ்வு காரணமாக இருக்கும்.

கடவுள் நம்பிக்கை, மதம், எதிர் பாலின் மேல் ஈர்ப்பு, வெறுப்பு, படிப்பு, செல்வம், அரசியல் பிடிப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் உங்கள் சிறு வயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வே காரணம்.

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்....."நான் ஒரு பெரிய புத்திசாலி , நான்  செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு முடிவும் நான் திட்டமிட்டு, அலசி ஆராய்ந்து எடுக்கும் முடிவு " என்று.

இல்லவே இல்லை.

நீங்கள் எப்படி முடிவு எடுக்கப் போகிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்பதெல்லாம் உங்களின் பத்து வயதுக்கு முன்பே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. அந்த தீர்மானத்தில் இருந்து நீங்கள் விலகுவதே இல்லை, பெரும்பாலும்.

எத்தனை ஆயிரம் சிந்தனைகளை, சாட்சிகளை, நிரூபணங்களை தந்தாலும், உங்களின் ஆழ்மன சிந்தனையில் இருந்து நீங்கள் விடுபடுவது இல்லை. மேலோட்டமாக மாறினால் போலத் தோன்றினாலும், அடிப்படையில் நீங்கள் நீங்கள் தான். மாறுவது  இல்லை.


மாறுவதா, மாறாமல் இருப்பதா என்பதல்ல கேள்வி. பதஞ்சலி க்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.

உங்களின் இன்றைய நிலைக்குக் காரணம் உங்கள் கடந்த காலம்.

அது என்ன என்று நீங்கள் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

பிரசவம் என்றால் பெறுவது. உதிப்பது. பெற்று எடுப்பது.


பிரதி பிரசவ என்றால் பிரசவித்த அந்த நிலைக்கு போ என்கிறார்.

அது தான் நீங்கள் தோன்றிய அந்த முதல் நிலை. அங்கிருந்து உங்கள் எண்ணங்கள் வலுப் பெற தொடங்குகின்றன.

வாழ்க்கையில் குழப்பமா, பயமா, சபலமா, வெறுப்பா, நடுக்கமா, சூன்யமா ...நீங்கள் எதையும் மாற்ற முடியும். அதற்கான காரணத்தை தேடி கண்டு பிடித்தால்.

சிலருக்கு காரணம் இல்லாமல் முரட்டு பிடிவாதம் இருக்கும், சிலருக்கு அளவுக்கு அதிகமா சாப்பிடத் தோன்றும், தூங்குவது, மது அருந்துவது, ஊர் சுற்றுவது, படிப்பது என்று நல்லது மற்றும் கெட்டது அனைத்துக்கும் உங்கள் பிள்ளை பருவமே காரணம்.

உங்கள் உடல் நிலைக்குக் கூட காரணம் உங்கள் சிறு பிரயாம் தான்.

சிலருக்கு படபடப்பு இருக்கும், இரத்த கொதிப்பு, தூக்கம் இன்மை, என்று பல வித வியாதிகளுக்கும் காரணம் சிறு வயதில் நடந்த நிகழ்வுகள்.

சிலரால் தங்கள் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தத் தெரியாது. அன்பை, காதலைக் கூட சொல்லத் தெரியாது. மனதில் இருக்கும். அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஒன்று கிடக்க ஒன்று சொல்லி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவார்கள்.

என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று வருந்துவார்கள்.

இதன் மூல வேர் பிள்ளை பிரயாத்தில் இருக்கிறது.


அதை அறிந்து கொண்டால், இப்போதுள்ள குறையை மாற்ற முடியும்.

காரணத்தை கண்டு பிடித்து விட்டால், காரியம்  சரியாய் விடும்.

இதைத்தான் உளவியல் அறிஞர்கள் ஹிப்னாடிசம், regression to the past என்று ரொம்ப மெனக்கெடுகிறார்.

பதஞ்சலி 5000 ஆண்டுகளுக்கு முன்பே இவற்றை பற்றி தீவிரமாக சிந்தித்து இருக்கிறார்.


ஆசை தான், அனைத்தையும் கண்டு பிடித்து நம்மை ஒரு புதிய மனிதனாய் உருவாக்க, தேவை இல்லாத பயம் மற்றும் கவலைகளில் இருந்து விடு பட்டு வாழ்வில் நிம்மதியாக , இன்பமாக இருக்க ஆசைதான்.

நம்மை நாமே ஆராய முடியுமா ? அது பற்றி பதஞ்சலி ஏதாவது சொல்லி இருக்கிறாரா ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/210.html

Sunday, December 3, 2017

யோக சூத்திரம் - 2.9 - பயம்

யோக சூத்திரம் - 2.9 - பயம்


स्वरस्वाहि विदुषोऽपि समारूढोऽभिनिवेशः ॥९॥

svarasvāhi viduṣo-'pi samārūḍho-'bhiniveśaḥ ॥9॥

sva  = சுயம், தானே

rasa = ரச = இயற்கை, தன்மை

vahi = வாழ்கை ஓட்டத்தில்

viduṣo = குரு, படித்து அறிந்தவர்கள்

api = மேலும்

sama  = முழுவதும் , இணையாக

rudhah  = மேலோங்கி

abhiniveśaḥ = பயம்

கற்றறிந்த ஞானிகளிடம் கூட வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருவது பயம்.

அவித்தை, அஸ்மிதா, ரகா , துவேஷ இவற்றை பார்த்தோம். இவை எல்லாம் மன கிலேசத்தை உண்டாக்குபவை.

அடுத்தது பயம்.

பயம் என்பது வாழ் நாள் எல்லாம் நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது.

நாம் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு இருக்கும் போது பயம் நம்மை ஒவ்வொரு கணமும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் மற்ற உணர்ச்சிகளை அறிந்து கொண்ட அளவுக்கு பயத்தை அறிந்து கொள்வதில்லை ஏன் என்றால், பயம்.

பயம் எப்படி வருகிறது. அதன் விளைவுகள் என்ன என்று பார்த்தால் நமக்கே பிரமிப்பாய் இருக்கும்.

எதிர் காலத்தைப் பற்றிய பயம், மரணம் பற்றிய பயம், ஆசைப் பட்டது கிடைக்காதோ என்ற பயம், கிடைத்தது கை விட்டு போய் விடுமோ என்ற பயம் என்று பயம் ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் பின்னி பிணைந்து கிடக்கிறது.

பயத்தில் இருந்து தப்பிக்க நாம் நம்பிக்கையை கை கொள்கிறோம்.

இவற்றை சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

கணவன் முழுவதும் மனைவியை சார்ந்து இருக்கிறான். அவள் வீட்டு நிர்வாகம் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். அனைத்தையும் அவள் பொறுப்பில் விட்டு விடுகிறான். இவள் இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன் என்ற பயம் அவனுள் எழுகிறது. அந்த பயத்தினால் அவள் செய்யும் செயல்கள் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து போகிறான். அடி நாதமாய் இருப்பது பயம்.  மேலோட்டமாக சொல்லுவது சகிப்புத் தன்மை, (compromise ), விட்டு கொடுத்து போவது, மனைவி மேல் காதல் / நேசம்  என்று.

கணவன் தான் சம்பாதிக்கும் ஒரே நபர். அவன் இல்லாவிட்டால் வீட்டின் பொருளாதாரம் குலைந்து விடும். எனவே, அவன் என்ன செய்தாலும், சொன்னாலும் மனைவி பொறுத்து சகித்துப் போகிறாள். அடி நாதம், பயம். அதற்கு வைத்திருக்கும் பெயர் காதல், கற்பு,  கணவன் மேல் பக்தி என்று ஏதேதோ பெயர்கள். இவன் இறந்து போனால் நமக்கு விதவை பட்டம் கிடைக்குமே, சமுதாயம் நம்மை மதிக்காதே என்ற பயம். இந்த பயத்துக்கு வேறு வேறு பெயர்கள்.

நிறைய தவறுகள் செய்கிறோம். ஐயோ, என்ன ஆகுமோ என்ற பயம். நரகம், மோசமான மறு பிறப்பு, பிள்ளைகள் தலையில் விழுந்து விடக் கூடாதே என்ற பயம். சமயங்கள் இந்த பயத்தை பயன் படுத்திக் கொள்கின்றன. பாவம் செய்து விட்டாயா  ? மறு பிறப்பை பற்றி பயமா ? நரகம் பற்றி பயமா ? சொர்கம் போக மாட்டோம் என்று பயமா ? என்னிடம் வாருங்கள். இறைவனை வழி பட்டால் பாவம் போய் விடும், மன்னிப்பு கிட்டும், சொர்கம் போகலாம் என்று அந்த பயத்தை பயன் படுத்தி சாதாரண மக்களை ஆசை காட்டி  பணம் பறிக்கின்றன. கோவிலுக்கு வா, உண்டியலில் காணிக்கை போடு, அந்த பூஜை செய், இந்த பூஜை செய்,  இதை வாங்கு , அதை வாங்கு என்று சாதாரண மக்களை வதைக்கின்றன.

மதம் ஒரு புறம் என்றால், அரசியல் இன்னொரு புறம்.

உன் மொழியை அவன் அழித்து விடுவான், உன் கலாச்சாரம் போய் விடும், படிப்பில், வேலை வாய்ப்பில் உனக்கு ஒரு முன்னுரிமை (reservation ) போய் விடும் என்று பயமுறுத்துகின்றன. பயந்தவர்கள் என்னிடம் வாருங்கள். எனக்கு வோட்டு போடுங்கள். நான் உங்களை பாதுகாக்கிறேன் என்று சாதாரண மனிதர்களை ஏமாற்றி வோட்டு வாங்குகின்றன.

நமக்கு  ஒன்று மற்றவர்களிடம் இருந்து தேவை இருக்கிறது என்றால், அவர் நமக்குத் தர மாட்டாரோ என்ற பயம் வரும். பயத்தின் ஆணி வேர் ஆசை.

பயத்தில் இருந்து நம்பிக்கை (hope ) பிறக்கிறது.

பெற்றோர் மேல் பயம், ஆசிரியர்கள் மேல் பயம், வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் பயம்,  கடவுள் மேல் பயம், மனைவி/கணவன் மேல் பயம், சமுதாயத்தின் மேல் பயம், சட்டம், காவல்துறை, இராணுவம், மற்ற சமுதாயக் குழுக்கள், ...இப்படி வாழ் நாள் முழுவதும் பயத்தினால் நடத்தப் படுகிறது.

 பயத்தில் பெரிய பயம் மரண பயம். மரண பயம் இல்லாதார் யார் ?

தேவைகள் குறைந்தால் பயம் குறையும்.

அவித்தை குறைந்தால் பயம் குறையும்.


நாம் நமது பயங்களுக்கு வேறு பெயர் வைத்திருக்கிறோம்.

காதல், பக்தி,  புண்ணியம் என்று வேறு வேறு நல்ல பெயர்கள் வைத்திருக்கிறோம்.

பயம் இருக்கும் வரை மன அமைதி என்பது கானல் நீரே.

பதஞ்சலி பயம் நல்லதா கெட்டதா என்ற தர்க்கத்தில் இறங்கவில்லை. பயம் இருந்தால்  மன கிலேசம் வரும். அவர் சொல்வது அவ்வளவுதான்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/29.html

Friday, December 1, 2017

யோக சூத்திரம் - 2.8 - துவேஷம்

யோக சூத்திரம் - 2.8 - துவேஷம் 


दुःखानुशयी द्वेषः ॥८॥

duḥkha-anuśayī dveṣaḥ ॥8॥


duḥkha = துக்கம், கவலை ,

anuśayī = நம்பிக்கையால், அதனால் , நினைத்துக் கொள்வதால்

dveṣaḥ = துவேஷம், வெறுப்பு ॥8॥

துக்கம் என்று நம்புவதால் துவேஷம் வருகிறது. 

அவித்தையின் அடுத்த வெளிப்பாடு துவேஷம்.

முதலில் அவித்தை என்றால் என்ன என்று பார்த்தோம்.

அதில் இருந்து வெளிப்படும் அஸ்மிதா, ராக இவற்றைப் பார்த்தோம்.

அடுத்தது துவேஷம்.

துவேஷம் என்றால் வெறுப்பு.

ராக என்பதின் எதிர்மறை துவேஷம்.

துவேஷம் ஏன் வருகிறது ?

ஒன்று நமக்கு துக்கம் அல்லது கவலையை தரும் என்று நாம் நம்பினால்  அதன் மேல் நமக்கு  வெறுப்பு வருகிறது.

நமக்கு துன்பம் தந்தவர்களை ஆம் வெறுப்போம் அல்லவா ?

நமக்கு பிடிக்காத ஒன்றின் மேல் வெறுப்பு வருவது இயற்கை தானே. இதில் என்ன இருக்கிறது என்று  பதஞ்சலி சொல்ல வந்து விட்டார். இது தான் நமக்குத் தெரியுமே.

காரணம் இல்லாமல் பதஞ்சலி சொல்ல மாட்டார்.

சிந்தித்துப் பார்ப்போம்.

ஒருவர் மேல் வெறுப்பு வருகிறது என்றால் அதற்கு காரணம் அவரா அல்லது நாமா ?

அவர் செய்யும் செய்கைகள், அல்லது பேசும் பேச்சு நமக்கு சுகமாக இல்லை, உடன்பாடு இல்லை, எனவே அது நமக்கு வெறுப்பை, எரிச்சலைத் தருகிறது.

வெறுப்பின் காரணம் அவர் அல்ல. அவருடைய அந்த பேச்சும் செய்கையும் மற்ற சிலருக்கு பிடித்து இருக்கிறதே.

எனவே, வெறுப்பின் காரணம், நமது எண்ணம். அது நம்மை காயப் படுத்துவதால் நாம் அதை வெறுக்கிறறோம்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.


ஒரு ஆசிரியர் மாணவனை படி, படி என்று ஓயாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார். வீட்டுப் பாடம் தருகிறார். சரியாக செய்யவில்லை என்றால் திட்டுகிறார், குட்டுகிறார் . மாணவனுக்கு ஆசிரியர் மேல் வெறுப்பு வருகிறது. எப்படியோ படித்து முடித்து பெரிய ஆளாகி விடுகிறான். இப்போது நினைத்து பார்க்கிறான்....அடடா, அன்று அந்த ஆசிரியர் நம்மை திட்டி, விரட்டி படிக்கச் செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா என்று நினைத்து அவர் மேல் மரியாதை கொள்கிறான்.

அதே ஆசிரியர் தான், அதே செய்கை தான், அதே மாணவன் தான்...ஒரு காலத்தில் வெறுப்பாக இருந்தது , இப்போதும் நன்றி உணர்வாக மாறிவிட்டது. இது இரண்டும் ஆசிரியருக்குத்  தெரியாது. வெறுப்பின் காரணம் ஆசிரியர் அல்ல. மாணவனின் மனப் பங்கு என்று புரிகிறது அல்லவா ?

அதே போலத்தான் பெற்றோரும்.

காலையில் எழுந்திரு, குளி , படி, சாப்பிடு, நேரா நேரத்தில் தூங்கு, அதை செய், இதை செய்யாதே என்று ஆயிரம்  குறிப்புகள் (instructions ) கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும். அது பெற்றோரின் தவறா ?

அது பிள்ளைகளின் தவறான எண்ணம்.


அவர்கள் சொல்வதோ செய்வதோ தவறாகவே இருந்து விட்டு போகட்டும். அது எதுவாக இருந்தாலும், வெறுப்புக்கு காரணம் அவர்கள் அல்ல. உங்கள் எண்ணம் என்று புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக , நம்மிடம் இருக்கும் எந்த குணமும் தனித்து நிற்பதில்லை. ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை.

ஆசையும், பயமும், வெறுப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை.

மாணவனை ஆசிரியர் படிக்கச் சொன்னால் மாணவனுக்கு ஆசிரியர் மேல் வெறுப்பு வருகிறது.

காரணம் என்ன ? ஆசை.

மாணவனின் ஆசை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

மாணவனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூங்க ஆசை, சினிமா பார்க்க ஆசை, ஓய்வு எடுக்க ஆசை, நண்பர்களோடு அரட்டை அடிக்க ஆசை...ஆனால் இந்த ஆசிரியர் படி படி என்று உயிரை எடுக்கிறார். மாணவனின் ஆசைக்கு தடையாக  இருக்கிறார். எனவே அவர் மேல் வெறுப்பு வருகிறது.

கணவன் மனைவி இடையேயும் இது போன்ற வெறுப்பு வரலாம். வெறுப்புக்கு காரணம் மற்றவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். தான் கேட்டதை கணவன் வாங்கித் தரவில்லை என்றால் கணவன் மேல் வெறுப்பு வருகிறது. காரணம் வேண்டிய பொருளின் மேல் ஆசை. தான் சொல்வதை மனைவி கேட்டு அதன் படி பணிவாக நடக்க வேண்டும் என்று கணவன் ஆசைப் படுகிறான். அவள் அப்படி நடக்கவில்லை என்றால் அவர்கள் மேல் வெறுப்பு வருகிறது. வெறுப்புக்குக் காரணம் மனைவி அல்ல. அவள் அப்படி இருக்க வேண்டும் ஆசைப் பட்ட கணவனின் ஆசையே காரணம்.


நமது ஆசையின் மறு வடிவம்தான் வெறுப்பு.

ஒரு அளவு கோலை (scale ) எடுத்துக் கொண்டால், அதன் ஒரு முனை ஆசை, இன்னொரு முனை வெறுப்பு.

ராக, துவேஷ என்றும் என்று முனைகள். அளவு கோல் என்னவோ ஒன்றுதான். நீங்கள் ஒரு முனைக்கு ஆசை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். இன்னொரு பகுதிக்கு துவேஷம் என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள். இரண்டும் ஒரு அளவு கோல் தான்.


ஆசை அல்லது ராக என்பது போகும் போது துவேஷமும் போய் விடும்.

நாம், வெறுப்புக்கு காரணம் மற்றவர்கள் என்று நினைக்கிறோம். நாம் தான் காரணம்.

அப்படியானல் வெறுக்கும் செயல் , சொல் என்று எதுவும் இல்லவே இல்லையா ?

கேள்வி அது அல்ல. ஏன் அது உங்களுக்கு வெறுப்பைத் தருகிறது என்று யோசியுங்கள்.

நீங்கள் ஆழமாக யோசித்தால், அனைத்து வெறுப்பும் உங்களது ஆசையில் இருந்து புறப்படுகிறது என்று புரியும்.

நீங்கள் உங்களை மாற்றினால் உங்களை சுற்றி உள்ள உலகம் மாறும்.

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே

வெறுக்கும் செயல்களை செய்தாலும், அப்படி செய்தவரை பொறுப்பது பெரியவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல...என்பார் அபிராமி பட்டர்.

அபிராமி , நீ எனக்கு மறுக்கக் கூடியவற்றை செய்தாலும், நான் உன்னை வெறுக்க மாட்டேன், உன்னை வாழ்த்துவேன் என்கிறார்.

காரணம் என்ன ? வெறுப்புக்குக் காரணம் மற்றவர்களிடம் இல்லை. நம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்ததனால்.

சிந்தியுங்கள். இது புரிந்தால், வெறுப்பு அன்பாய் மலரும்.



http://yogasutrasimplified.blogspot.in/2017/12/28.html