Tuesday, February 27, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 5

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 5



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம் = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் வரை பார்த்தோம்.

அடுத்தது பிரத்தியாகாரம்.

ப்ரத்த்யாகாரம் என்றால் என்ன?

அகராதியில் உள்ள அர்த்தம் புலன்களை அடக்குதல், கட்டுப் படுத்துதல்.

நுணுக்கமான அர்த்தம் புலன்களை உள் நோக்கி திருப்புதல்.

அது என்ன உள் நோக்கி திருப்புதல்?

நாம் எப்போதும் புலன்கள் இழுக்கும் பக்கம் எல்லாம் ஓடுகிறோம். 

அங்கே ஒரு நல்ல படம் என்றால் அதை பார்க்க ஓடுகிறோம். 

நல்ல உணவு என்றால் ருசிக்க ஓடுகிறோம் 

கச்சேரி கேட்க ஓடுகிறோம். 

அந்த நாடு பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு. அங்க போகணும் னு ஜொள்ளு விடுகிறோம். 

அந்தக் கோவில், இந்த குளம், அந்த சாமியார், என்று அலைந்து கொண்டு இருக்கிறோம். 

இப்படி புலன்களை நம்மை இழுத்து இழுத்து , நாம் நம்மை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். 

நம் வீடு எங்கே இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. 

நாம் யார் என்றே நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது. 

இவ்வளவு நாள் அலைந்தாயே என்ன கிடைத்தது என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. 

அங்காடியில் (market ) சில நாய்கள் இருக்கும். காலை எழுந்தது முதல் அங்கு ஓடும், இங்கு ஓடும், அங்கு சில நாய்களை பார்த்து குரைக்கும் , இங்கு சில நாய்களை பார்த்து வாலாட்டும். அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும். நிற்க நேரம் இருக்காது. மாலை வந்தவுடன், "நாயே, நாள் முழுவதும் அலைந்தாயே, என்ன சாதித்தாய் " என்று கேட்டால் நம்மைப் பார்த்து இரண்டு குலை குலைத்து விட்டு மீண்டும் ஓடும். 

அங்காடி நாய் போல்  அலைந்தனையே நெஞ்சமே என்பார் பட்டினத்தார். 


மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

வெளியே அலையும் புலன்களை உள்நோக்கி திருப்புதல் பிரத்தியாகாரம். 

ஆசைகளுக்கான காரணம் என்ன, ஆசைகள் எவ்வாறு உதிக்கின்ற, அவை எவ்வாறு திருப்த்தி படுத்தப் படுகின்றன, இந்த இரண்டுக்கும் உள்ள இடை வெளியில் என்ன நிகழ்கிறது என்று சுயபரிசோதனை செய்வது  பிரத்தியாகாரம். 

பதஞ்சலி புலன்களை அடக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வெளியே சொல்லும் புலன்களை உள் நோக்கி திருப்பச் சொல்கிறார். 


அங்காடி நாய் ஒரு  வினாடி நின்று யோசித்து இருந்தால், ஓடுவதை நிறுத்தி  இருக்கும்.

 காரணம் தெரியாமல் ஓடுவதால் ஓடிக் கொண்டே இருக்கிறது.  

யோசிப்போம். 

ஏன் இந்த ஓட்டம். இந்த  ஓட்டத்தினால் நமக்கு கிடைத்த இலாபம் என்ன  

நாம் சரியான திசை நோக்கித் தான் ஓடுகிறோமா ? ஓட்டத்தின் முடிவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா ?

தெரியாவிட்டால் , பின் எதற்காக ஓட வேண்டும். அறியாத ஒன்றை எப்படி அடைவது ?

தெரியும் என்றால், பின் ஓட்டம் எதற்கு ?

சிந்திப்போம்




No comments:

Post a Comment