Friday, February 16, 2018

யோக சூத்திரம் - 2.26 - தொடர் புரிதலும் நுண்ணறிவும்

யோக சூத்திரம் - 2.26 - தொடர் புரிதலும் நுண்ணறிவும் 


विवेकख्यातिरविप्लवा हानोपायः ॥२६॥

viveka-khyātir-aviplavā hānopāyaḥ ॥26॥

viveka = விவேகம், அறிவு

khyātir = நுண்ணறிவு, புரிந்து கொள்ளுதல்

aviplavā = தொடர்ந்து, இடை விடாமல்

hānopāyaḥ = குறிக்கோளை அடைய வழி

இடைவிடாத புரிதலும், நுண்ணறிவும் குறிக்கோளை அடைய வழி.

குறிக்கோள் என்ன?

பார்ப்பவனும் , பார்க்கப் படுவதும் ஒன்றென்று அறியும் நிலை. அது குறிக்கோள். அதை அடைய என்ன வழி?

இடை விடாத புரிதலும், நுண்ணறிவும்

அது என்ன இடைவிடாத புரிதல்? இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொன்றாக சிந்திப்போம்.

முதலாவது, நமக்கு பல நல்ல விஷயங்கள் தெரியும். இருந்தும் நாம் அவற்றை கடை  பிடிப்பது இல்லை. ஏன் ? உதாரணமாக, இனிமேல் ஐஸ் கிரீம், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது இல்லை என்று முடிவு செய்திருப்போம். ஆனால்,  நல்ல ஐஸ் கிரீமை பார்த்தவுடன், கொண்ட உறுதி எல்லாம் மறந்து போய் விடும். சாப்பிட்டு விடுவோம். பின்னால், வருந்துவோம்.

புரிதல் இருந்தது. அந்த நேரத்தில் அது எங்கோ போய் விட்டது.

ஆசை அதிகமாகும் போது , அறிவு மங்கி விடுகிறது.

உலகில் தவறு செய்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்திருக்கும் தாங்கள் செய்வது தவறு என்று. இருந்தும் அந்த நேரத்தில் அது மறந்து போய் விடுகிறது.

விழிப்புணர்வு என்பது விட்டு விட்டு வருகிறது. தொடர்ந்து இருப்பதில்லை.

அடுத்ததாக, சில சமயம் விழிப்புணர்வு என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது  விழிப்புணர்வாக இருக்காது. நுண்ணறிவு வேலை செய்யாது.

எப்படி ?

சில சமயம் ஏதாவது ஒரு வேலையில் நாம் தீவிரமாக மூழ்கி இருந்தால், நேரம் போவதே தெரியாது. இப்ப தான் அலுவலகத்துக்குள் வந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள மணி மூணு ஆயிருச்சா ? என்று ஆச்சரியப்படுவோம். பசித்திருக்காது.

எங்கே போயிற்று பசி ?

மற்ற நேரங்களில், ஒரு மணி ஆனவுடன், எல்லோருமே சாப்பிட கிளம்பியவுடன் நமக்கும் பசி வந்து விடும். அது பசி அல்ல. மனத் தோற்றம். எல்லோரும் போகிறார்கள். மணி ஒன்றாகி விட்டது. சாப்பாட்டு நேரம். எனவே, சாப்பிடணும் என்ற ஆவல். பசி போல தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால் அது பசி அல்ல என்று தோன்றும். .

மருந்து பற்றி சொல்ல வந்த வள்ளுவர் சொல்கிறார்,

மூன்று வேளை ஒழுங்காக சாப்பிட்டால் நோய் வராது என்று சொல்லவில்லை.

அற்றால் அளவு அறிந்து உண்டால் பெற்றான் நெடிதுயிர்க்கும் ஆறு என்கிறார்.

அதாவது, முன் உண்ட உணவு நன்கு ஜீரணமாகி விட்டதா என்று அறிந்து பின் அளவோடு உண்டால், நீண்ட நாள் உயிரோடு இருக்கலாம் என்கிறார்.

நாம் செய்யும் வேலை, தட்ப வெப்பம், உடல் நிலை இவற்றின் காரணமாக சில சமயம் சீக்கிரம்சீரணமாகி விடும், சில சமயம் நேரமாகும். அது தெரிந்து உண்ண வேண்டும். மூணு வேளையும் , கடிகாரத்தை பார்த்து உணவு உண்ணக் கூடாது.

அது போல, நாம் செய்யும் பல காரியங்களுக்கு காரணம் இல்லாமல் இருக்கும். எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்வோம்.

உழவன், அவன் வயலில் இருந்து அறுவடை வந்தால் , அந்த மகிழ்ச்சியை பொங்கல் இட்டு கொண்டாடுகிறான். அலுவலகத்துக் போகும் ஆட்களும் கொண்டாடுகிறார்கள். ஏன் ? தெரியாது. எல்லோரும் கொண்டாடுகிறார்கள், நாமும் கொண்டாடுவோம்.

இப்படி, நாளில் நாம் செய்யும் பல காரியங்களை , ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் தெரியும், நாம் எவ்வாறு ஒரு விழிப்புணர்வு இல்லாமல் காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம் என்று.

ஒரு இயந்திர கதியில்  காரியம் செய்கிறோம்.

என் அப்பா செய்தார், அவர் அப்பா செய்தார், நானும் செய்கிறேன்.

எதிலும் தெளிவு இல்லாமல்,  எதற்கும் காரணம் இல்லாமல் , எதன் மேலோ ஏதோ பெய்த மாதிரி  காரியங்கள் நிகழ்கின்றன.

என் கணவன் என்னை நேசிக்கிறான். என் மனைவி என்னை நேசிக்கிறாள். என் பிள்ளைகள்  என்னை பின்னாளில் பார்த்துக் கொள்ளும். அரசாங்கம் மக்களுக்கு நல்லது  செய்யும். டிவி மற்றும் செய்தி தாள்களில் வரும் செய்திகள் உண்மை....என்று நாம் நினைக்கிறோம். நம்புகிறோம்.

இது பற்றி எல்லாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா ?


நுண்ணறிவு. விழிப்புணர்வு வேண்டும்.


டிவி யில் ஒரு விளம்பரம் பார்த்தால், அது நமக்குள் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்று நமக்குத் தெரியுமா ?

செய்தித் தாளில் ஒரு செய்தியை படித்தால் அது நமக்குள் என்ன பாதிப்பை உண்டு பண்ணும் என்று தெரியுமா ?

நம்மை அறியாமலேயே இவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வருகின்றன. நாம் அறிவது இல்லை.

அவை செலுத்தும் திசையில் மந்தைகள் மாதிரி போய் கொண்டிருக்கிறோம்.


அவற்றை நிறுத்த வேண்டும். நமக்கு என்ன என்ன நிகழ்கிறது என்ற உள்ளுணர்வு வேண்டும். நம்மை சுற்றி நிகழ்பவைகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வு வேண்டும்.

இவை இரண்டும் தொடர்ந்து இருக்க வேண்டும்.

நமது கோபம் எங்கிருந்து வருகிறது. ஆசை எங்கிருந்து வருகிறது, காமம் எங்கிருந்து வருகிறது என்று அறிய வேண்டும்.

எது நம்மை தூண்டி விடுகிறது என்று அறிய வேண்டும்.

அந்த அறிவே குறிக்கோளை அடையும் இரண்டாம் படி.

அவித்தை போது முதலாவது படி.

தொடர்ந்த விழிப்புணர்வும், நுண்ணறிவும் இரண்டாம் படி.


விழியுங்கள். உங்களுக்குள் நிகழும் மாற்றங்களை எந்நேரமும் கவனியுங்கள்.

உலகம் வசப்படும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/226.html




No comments:

Post a Comment