Friday, February 9, 2018

யோக சூத்திரம் - 2.25 - கைவல்யம்

யோக சூத்திரம் - 2.25 - கைவல்யம்

तदभाबात्संयोगाभावो हानं तद्दृशेः कैवल्यम् ॥२५॥

tad-abhābāt-saṁyoga-abhāvo hānaṁ taddr̥śeḥ kaivalyam ॥25॥

tad = அது , அதன்

abhābāt = மறைந்தால்

saṁyoga = சேர்தல், கூடுதல்

abhāvo = இல்லாமல் இருத்தல் , மறைதல்

hānaṁ = விட்டு விடுதல்

tad = அது

dr̥śeḥ = பார்ப்பவரின்

kaivalyam = விடுதலை, முக்தி,

அது மறையும் போது அதோடு சேர்ந்து தொடர்புகளும் மறைகிறது. அந்தத் தொடர்புகள் மறையும் போது விடுதலை கிடைக்கிறது. 


அது மறையும் போது என்றால் , எது மறையும் போது ?

அவித்தை, அறிவீனம், மறையும் போது.

மற்றவையும் மறையும்.

எது மற்றவை ?

இந்த உலகம், அதில் உள்ள பொருள்கள், அதில் உள்ள மனிதர்கள் அவர்களிடம் உள்ள  பற்று எல்லாம் மறையும். பற்று அல்லது பாசம் என்று நாம் கொண்டிருப்பதற்கு காரணம், நம் அறியாமை.

செல்வத்தின் மேல் பற்று.

இளமையின் மேல் பற்று.

உறவுகளின் மேல் பற்று.

இந்த உடலின் மேல் பற்று.

இந்த அனைத்து பற்றுக்களுக்கும் காரணம் அவித்தை  தான்.

சரி, இந்த அறியாமையை போக்க என்ன செய்ய வேண்டும் ?


அறியாமையை போக்க அறிவை பெற வேண்டும் என்று சொல்ல வில்லை பதஞ்சலி.

அறிவைப் பெறுகிறேன் பேர்வழி என்று சிலர் கண்ணில் கண்டதையெல்லாம் படித்துக்  கொண்டிருப்பார்கள். அந்த சாமியார் அப்படி சொன்னார். இந்த சாமியார்  இப்படி சொன்னார் என்று ஓடி ஓடி கேட்பார்கள்.

பாத்தா  குறைக்கு mp3, CD , Youtube என்று கேட்பார்கள்.

எவ்வளவு படித்து விட முடியும் ? எவ்வளவு கேட்டு விட முடியும்.

சொல்லப் போனால், படிக்க படிக்க குழப்பம் தான் மேலும்  அதிகரிக்கும். குறையாது.

பதஞ்சலி சொல்கிறார் - அறியாமை விலக வேண்டும் என்று. வேண்டும் என்றால்  "அறிவு பெருக வேண்டும் " என்று சொல்லி இருப்பார் அல்லவா ? அப்படி சொல்லவில்லை.  அறியாமை விலக வேண்டும்.

அறிவு , ஆணவத்தை கொண்டு வரும்.

அறிவு, குழப்பத்தைத் தரும்.

"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் " என்பார் மணி வாசகர்.

அறியாமையை போக்குகிறேன் என்று அறிவை சேர்க்கத் தொடங்கினால் , அறியாமை  மேலும் கூடுமே தவிர குறையாது.

எனவே, அவித்தை நீங்க வேண்டும். நீங்கினால் பற்று நீங்கும். பற்று நீங்கினால்  விடுதலை கிடைக்கும். (liberation ).


அது எப்படி என்று மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/225.html


No comments:

Post a Comment