Saturday, February 17, 2018

யோக சூத்திரம் - 2.27 - ஏழு படிகள்

யோக சூத்திரம் - 2.27  - ஏழு படிகள்



तस्य सप्तधा प्रान्तभूमिः प्रज्ञ ॥२७॥

tasya saptadhā prānta-bhūmiḥ prajña ॥27॥

tasya = இந்த

saptadhā = ஏழு படிக்கள் , ஏழு படிமங்கள்

prānta = பாதைகள்

bhūmiḥ = நிலைகள்

prajña = அறிவதற்கு

இதை அறிவதற்கு ஏழு வழிகள்/படிகள் உள்ளன.

எதை அறிய?

எது உண்மையோ அதை அறிய? அவித்தை மறைய. நான் என்பது இந்த உடம்பு அல்ல என்று அறிய. பார்ப்பவனும், பார்க்கப்படுவதும் ஒன்றென்று அறிய. மெய்யறிவு பெற (enlightenment).

அதற்கு ஏழு படிகள் அல்லது நிலைகள் அல்லது படிமங்கள் உள்ளன என்று கூறுகிறார்.

நமக்கு எல்லாமே உடனடியாக வேண்டும்.

ஆண்டாண்டு காலம் கண்டதையும் உண்டு, உடற் பயிற்சி எதுவும் செய்யாமல் உடம்பு நன்றாக சதை போட்டு இருக்கும். ஒரு நாள், முடிவு செய்வோம். நாளையில் இருந்து உணவு கட்டு பாடு, மற்றும் உடற் பயிற்சி செய்வது என்று.

ஆரம்பித்த இரண்டு மூணு நாளில், "என்ன இது ஒரு மாற்றமும் இல்லையே. எவ்வளவு வாய கட்டி, வயித்த கட்டி, உடற் பயிற்சி செய்கிறேன்...ஒரு முன்னேற்றமும் இல்லையே " என்று சலித்துக் கொள்வோம்.

எல்லாம் உடனேயே வேண்டும்.

எதிலும் பொறுமை இல்லை.

பதஞ்சலி சொல்கிறார். ஏழு படிகள் இருக்கின்றன.

முதல் படியில் ஏறாமல் மூன்றாம் படிக்கு போக முடியாது. ஒவ்வொன்றாகத்தான் ஏற முடியும். அதற்கு பொறுமை அவசியம்.

படி என்றால் இங்கே மாடிப் படி இல்லை.

ஒவ்வொரு படியும் ஒரு நிலை. சில பயிற்சிகள். சில ஒழுக்க முறைகள் (discipline ).

ஒரு நிலையில் தேர்ச்சி  பெற்ற  பின் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.

சிலருக்கு சில படிகள் கடினமாக இருக்கும். சிலருக்கு எளிமையாக இருக்கும்.

எனவே, இந்த ஏழு படிகளை கடக்க எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியாது.

அது ஒவ்வொரு தனி மனிதனையும் பொறுத்தது.

அவன் எவ்வளவு தூரம் முனைப்புடன் இருக்கிறான். எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான். எவ்வளவு விடா முயற்சியுடன் இருக்கிறான் என்பதையெல்லாம் பொறுத்தது.

அது என்ன ஏழு படிகள்.

அடுத்த சூத்திரத்தில் சொல்கிறார்.

மிக மிக முக்கியமான சூத்திரம். பதஞ்சலியின் முழு யோக சாஸ்திரமும் அந்த ஒரு சூத்திரத்தில் அடங்கி இருக்கிறது.

அது என்ன என்று நாளை பார்ப்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/02/227.html




No comments:

Post a Comment