Wednesday, February 21, 2018

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 1

யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின் எட்டு அங்கங்கள் - பாகம் 1



यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥

yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥


yama = இயமம்  = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்

niyama = நியமம் = கடைபிடித்தல்

āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை

prāṇāyāma = பிராணாயாமம்

pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்

dhāraṇā  = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்

dhyāna = தியானம்

samādhayo = சமாதி

'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்

இந்த எட்டில் முதல் சொன்ன இரண்டை எடுத்துக் கொள்வோம். 

இயமம், நியமம். 


இயமம் என்பது கொஞ்சம் ஆழமான வார்த்தை. 

இயமம் என்றால் கட்டுப்பாடு, ஒழுங்கு படுத்துதல் என்று பொருள். 

என்னடா இது, எவரும் இப்படி ஆரம்பித்து விட்டாரா...புலன் அடக்கம், கட்டுப்பாடு என்று...சரியான சாமியார் மடம் போல் இருக்கிறதே என்று அலுத்துக் கொள்ளத் தோன்றுகிறதா ?

இல்லை இல்லை, பதஞ்சலி அப்படி எல்லாம் சொல்ல வில்லை. 

நாம் எடுத்த எந்த காரியத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றால் , நமது சக்தியை, முயற்சியை அந்த காரியத்தில் மட்டும் செலுத்த வேண்டும். நமது சிக்கல் என்ன என்றால், நாம் நமது சக்தியை ஒரு கட்டு பாடு இல்லாமல் சிதற விடுகிறோம். 

ஒன்றை செய்யும் போதே இன்னொன்றின் மேல் ஆசை. செய்வதில் நம்பிக்கை கிடையாது. 

எப்போதும் சந்தேகம். 

அது மட்டும் அல்ல, சந்தேகம் வந்தவுடன் உத்வேகம் குறையும். கொஞ்ச நாளில் முயற்சியை கை விட்டு விடுதல் என்பது நிகழும். 

வருட பிறப்பில் எத்தனை பேர், "இந்த வருஷம் எப்படியாவது 10 கிலோ எடையை குறைக்க வேண்டும்  என்று உடற் பயிற்சி நிலையத்தில் சென்று பேர் கொடுப்பார்கள்....ஒரு வாரம் இருக்காது...அப்படியே விட்டு விடுவார்கள்"

டிவி பார்ப்பது, whatsapp இல் நேரம் செலவிடுவதை குறைப்பது என்று நிறைய குறிக்கோள் இருக்கும். ஆனால், செய்வது கிடையாது. டிங் என்று செல் போனில் ஒரு சத்தம் கேட்டால், ஓடிப் போய் எடுப்பார்கள். 

இயமம் என்றால் செய்யாமல் இருப்பது. தவறானவற்றை செய்யாமல் இருப்பது. 

நியமம் என்றால், சரியானவற்றை செய்வது. 

அல்லது ஒழித்தலும், நல்லது செய்தலும் என்று சொல்லுவார்கள். 

இதைத்தான் கட்டுப்பாடு என்கிறார்கள். 

அற நூல்களில் சொல்லியவற்றை செய்ய வேண்டும். அவை கூடாது என்று சொல்பவற்றை விலக்க வேண்டும். 

நமக்கு வாய்த்த பெரிய நன்மை என்ன என்றால், கணக்கில் அடங்காத அற நூல்களை நம் முன்னவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். கொட்டிக் கிடக்கிறது. 

நமக்கு நேர்ந்த பெரிய தீமை என்ன என்றால், அவற்றை படிப்பது இல்லை, படித்தாலும், "இதெல்லாம் சரிப்படாது " என்று அவற்றை ஓரம் கட்டி வைத்து விடுவது.

எது செய்ய வேண்டும் , எது செய்யக் கூடாது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதன் படி விடாமல் நடவுங்கள்.

இன்று ஒரு நாள் தானே, நாளும் கிழமையுமா ஒரே ஒரு லட்டு தானே, ஒரே ஒரு கிளாஸ் தானே, ஒரே ஒரு சிகரெட் தானே என்று தொடங்கக் கூடாது.

இவை இயம நியமங்கள். இதை விரித்து சொல்லிக் கொண்டு போனால் சொல்லிக் கொண்டேபோகலாம். நீங்களே சிந்தித்துப்  பாருங்கள்.

அடுத்தது ஆசனம்.

நாளை சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-1.html









No comments:

Post a Comment