Thursday, August 15, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 5

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 5


बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥


bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

இப்படி மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டால் என்ன நிகழும். சும்மா பொழுது போகவில்லை என்றால் இப்படி ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டிருக்கலாமே தவிர, இப்படி மூச்சை வித விதமாக விடுவதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?

நம் வறுமை தீருமா ? உடல் வலி குறையுமா? புகழும் பெருமையும் வருமா ? வங்கியில் இருப்பு உயருமா ?

பலன் இல்லாமல் ஒரு காரியமும் செய்யக் கூடாது.

பிராணாயாமம் செய்பவர்களை கேட்டால், "அது உடலுக்கு நல்லது, மனம் அமைதியாகி இருக்கிறது என்றெல்லாம் சொல்லுவார்கள்". கொஞ்சம் அழுத்திக் கேட்டால், "இப்பத்தான் ஆரம்பித்து இருக்கிறேன்...போகப் போகத்தான் தெரியும்" என்று நழுவுவார்கள்.

நம் வாழ்வின் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம், நம் மனம் தான்.

இல்லாததை இருப்பதாய் எண்ணிக் கொண்டு கவலைப் படுகிறது, சண்டை போடுகிறது. (அவ அப்படி நினைச்சுத்தான் சொல்லி இருப்பாள் )

இருப்பதை இல்லாதாதாய் எண்ணிக் கொண்டு கவலைப் படுகிறது. சிலருக்கு எவ்வளவு   வசதி இருந்தாலும், ஏதோ ஒன்றை சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

கற்பனைகளை வளர்த்துக் கொண்டு வருத்தப்படும் (எப்படியெல்லாம் அவனை வளர்த்தேன், கடைசியில் இப்படி பண்ணிட்டானே)

எதிர்பார்ப்புகளினால் ஏமாறும்.

சில சமயம் ஏன் இந்த கவலை, துன்பம், குழப்பம் என்று அறியாமல் தடுமாறும்.

அனைத்துக்கும் மனம் தான் காரணம்.

அந்த மனம், மூச்சோடு நெருங்கிய சம்பந்தம் கொண்டது.

நம்மால் மனதை நேரடியாக கட்டுப் படுத்த முடியாது. மனதை அடக்குகிறேன் என்று ஆரம்பித்தால் அது விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.

மூச்சை கட்டுப் படுத்தினால் மனம் கட்டுப் படும்.

நம்மால் மூச்சை கட்டுப் படுத்த முடியும்.

அது எப்படி மூச்சை கட்டுப்படுத்தினால் மனதை கட்டுப் படுத்த முடியும் ?

ஒரு சோதனை செய்து பாப்போம்.

சும்மா கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் இருங்கள். ஒரு ஆசனம், இடம், பொருள் ஒன்றும் வேண்டாம். சும்மா கண்ணை மூடி இருங்கள்.

ஒரு நிமிடம் கழித்து கண்ணை திறவுங்கள். உங்கள் மனம் என்னவெல்லாம் நினைத்தது என்று யோசித்துப் பாருங்கள்.

ஒன்றை விட்டு  ஒன்றாய் மனம் ஓடிக் கொண்டே இருப்பது தெரியும்.

இப்போது, மீண்டும் கண்ணை மூடுங்கள். மூடிய பின், மூச்சை இழுத்து நிறுத்துங்கள்.

மன ஓட்டம் எல்லாம் நின்றுவிடும். எப்படா அடுத்த மூச்சை எடுப்பான் என்று கவனம் முழுவதும் அங்கே போகும். மூச்சை விடுங்கள்.  இழுக்காதீர்கள். மீண்டும் மனம் மூச்சிலேயே கவனமாய் இருக்கும்.

அது சரி தான், மூச்சு நின்று போனால், மனம் பதறத்தான் செய்யும். இதில் என்ன பெரிய  வித்தை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

வருகிறேன்.

அடுத்த படிக்கு போவோம்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது , உங்கள் மூச்சு எப்படி இருக்கிறது என்று  கவனியுங்கள்.  அது சன்னமாக இருக்கும். சட்டென்று  உள்ளே போய் , சட்டென்று வெளியே வரும்.

நீங்கள் சோகமாக இருக்கும் போது எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள்.

அது நீண்ட பெரு மூச்சாக இருக்கும். மெல்லமாக இழுத்து , மெல்லமாக விடுவீர்கள்.

ஒரு முறை, கொஞ்சம் கவலையாக இருக்கும் போது , வேக வேகமாக மூச்சை இழுத்து  வெளியே விட்டுப் பாருங்கள். கவலை போய் விடும்.

அதே போல், சந்தோஷமாக இருக்கும் போது, மெதுவாக மூச்சை இழுத்து ,மெல்ல வெளியே விட்டுப் பாருங்கள். சந்தோஷம் போய் மெல்லிய சோகம் வந்து விடும்.

நம் உணர்ச்சிகள் நம் மூச்சை பாதிக்கின்றன என்று தெரிகிறது அல்லவா ?

நான் கூறியது இரண்டு உதாரணங்கள் தான். ஒவ்வொரு உணர்ச்சிக்கும், ஒரு விதமான மூச்சோட்டம் இருக்கும்.

கணவனோ, காதலனோ, அன்போடு கையைப் பற்றும் போது மூச்சு மாறும். பட படப்பாக இருக்கும்.

அதே கணவனோ, காதலனோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , படுக்கையில் இருக்கும் போது கையை பிடித்தால், மூச்சு வேறு மாதிரி இருக்கும்.

உணர்வுகள், மூச்சை பாதிக்கும்.


யோகா கண்டு பிடித்த மிகப் பெரிய விஷயம் என்ன என்றால் மூச்சு உணர்ச்சிகளை பாதிக்கும்.

உங்களுக்கு சந்தோஷமாக இருக்க வேண்டுமா, நிமிர்ந்து உட்காருங்கள் (முதுகு நேராக வேண்டும்), சற்று வேக வேகமாக மூச்சை இழுத்து விடுங்கள்.

உங்களுக்கு சோகமாக இருக்க வேண்டும், முதுகு லேசாக வளைந்து, தலை சற்று கவிழ்ந்து, மெல்லமாக நீண்ட மூச்சாக உள் இழுத்து மெல்ல வெளியே விடுங்கள். இரண்டு நிமிடத்தில் சோகம் வந்து விடும்.

எனவே, மூச்சைக் கட்டுப் படுத்தினால், உணர்ச்சிகளை கட்டுப் படுத்தலாம்  என்பது  யோகாவின் அடிப்படை உண்மை.

மனதை ஒருமுகப் படுத்தி படிக்க வேண்டுமா,  வேலை செய்ய வேண்டுமா, பரீட்சை எழுத வேண்டுமா,  விளையாட்டில் வெல்ல வேண்டுமா,  மனதில் தெளிவு வேண்டுமா ...மூச்சை கட்டுப் படுத்தினால் போதும். மனம் வசப்படும்.

அடுத்த கேள்வி வரும், சரி ஒத்துக் கொள்கிறேன், மூச்சைக் கட்டுப் படுத்தினால்  மனம் கட்டுப் படும் என்று புரிகிறது.

இந்த மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி இதெல்லாம் எப்படி செய்வது.. அதற்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா ?

எவ்வளவு நேரம் இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும், எவ்வளவு நேரம் விட விடும், பின் எவ்வளவு நேரம் வெற்றிடமாக வைக்க வேண்டும் ?

இது பற்றி ஏதாவது கணக்கு இருக்கிறதா என்றால் இருக்கிறது.

அதுவும் இந்த ஸ்லோகத்திலேயே


vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

அது தான் கணக்கு.

அந்த கணக்கை நாளை பார்க்கலாமா ?

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-5.html

------------------------------------------------------------------------------------
முதல் நான்கு   பகுதிகளை கீழே காணலாம்.


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-4.html


முதல் மூன்று  பகுதிகளை கீழே காணலாம்.

------------------------------------------------------------------------------
பாகம் 3

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html

----------------------------------------------------------------------------------------------
பாகம் 2

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

No comments:

Post a Comment