Monday, August 12, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 3

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 3


बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥


bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

இந்த சூத்திரத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முன் பிராணாயாமம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் இரண்டு பகுதிகளை கீழே காணலாம்.


முந்தைய பிளாகில் எப்படி பிராணன் நம்மைச் செலுத்துகிறது என்று பார்த்தோம்.

இன்னும் ஆழமாக சிந்திப்போம்.

நமது புலன்கள் வெளி நோக்கி ஓடுகின்றன. வெளியில் இருந்து வரும் விஷயங்கள் நம்மை செயலாற்ற தூண்டுகின்றன.

உதாரணமாக, ஒரு வாலிபன் ஒரு அழகான பெண்ணைப்  பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்குள் என்ன நிகழ்கிறது? கண் விரிகிறது. அவளுடைய முழு அழகையும் இரசிக்கத் தலைப்படுகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. காது மடல் சூடாகும். உடலில், சில அவயங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவனுடைய பிராண சக்தி, உயிர் சக்தி உடலில் சில அவயங்களில் அதிகமாக வேலை செய்கிறது.

உணவைக் கண்டால் நாக்கு தூண்டப் படுகிறது. சக்தி நாக்குக்கு போகிறது.

நல்ல இசையை கேட்டால், காது தூண்டப் படுகிறது. மேலும் ஆர்வமாக கேட்கிறோம்.

சக்தி உடம்பில் ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு அதிகமாக கிடைக்கிறது. மற்ற இடங்களுக்கு கொஞ்சமாக கிடைக்கிறது.

இரத்த ஓட்டம்,  பிராண வாயு, எல்லாம் உடம்பில் ஒரு சில பகுதிக்கு அதிகம் செல்கிறது.

இதனால் அந்த புலன்கள் , சிலவற்றை அனுபவிக்க ஆசைப் படுகிறது.

இலட்டைப் பார்த்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுவது போல.

எப்போது உடலில் உள்ள சக்தி ஒரு சில இடங்களுக்கு அதிகமாக கிடைக்கிறதோ, அந்த இடம் தூண்டப் பெறுகிறது. அது சம்பந்தப் பட்ட ஆசை பிறக்கிறது.

எப்படியாவது அதை அடைய வேண்டும் என்ற உந்துதல் பிறக்கிறது.

அந்த கார் வேண்டும், வீடு வேண்டும், அந்த பெண் வேண்டும்...என்றெல்லாம்  எண்ணம் எழுகிறது.

சக்தியின் சம சீர் இல்லாத ஓட்டத்தால் இது நிகழ்கிறது என்று தெரிகிறதா?

பிராணன், உடல் முழுவதும் சமமாக இருந்தால், ஒரு அவயம் மட்டும் தூண்டப் படுவது  நிகழாது.

உதாரணமாக , ஒரு அழகான பெண்ணை ஒரு 90 வயது கிழவன் பார்க்கிறான் என்று  வைத்துக் கொள்வோம். அவனுக்குள் ஆசை பீறிட்டு எழுவதில்லை. காரணம் என்ன ? அவன் உயிர் சக்தி குறைவாக இருக்கிறது, இருக்கின்ற குறைவான சக்தியும்,  வேறு எதற்கோ பயன்படுகிறது.

பிராணனை சமச் சீராக செய்து விட்டால், புலன்கள் பிய்த்துக் கொண்டு ஓடுவது நிகழாது.

ஒரு புலனுக்கு மட்டும் செல்லும் சக்தியை மடை மாற்றி அனைத்து அவயங்களும்  சமமாக செலுத்தினால் மனம் அங்கும் இங்கும் ஓடாது.

உதாரணமாக, ஒரு கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். காரில் உள்ள   எரி சக்தி நான்கு சக்கரங்களுக்கும் ஒரே மாதிரி சக்தி தந்தால் வண்டி ஒழுங்காக நேரே செல்லும்.

மாறாக, வலது முன் சக்கரத்துக்கு அதிகம் சக்தி சென்று அது மற்ற சக்கரங்களை விட வேகமான சுழன்றால் என்ன ஆகும் ?  வண்டி இடது புறம் திரும்பும்.  அப்படித்தான் வண்டியை திருப்புகிறார்கள். ஒரு புற சக்கரம் வேகமாக சுழன்றாள் தான்   வண்டி திரும்பும். இல்லை என்றால் வண்டி எப்போதும் நேரேயே  சென்று கொண்டிருக்கும்.

நம் உடல் மட்டும் மனம் என்ற வண்டி என்ன செய்கிறது  ?

ஒரு நாள் வலது புறம் ஓடுகிறது. இன்னொரு நாள் இடது புறம். மற்றொரு நாள் முன்னோக்கி. பின்னொருநாள் பின்னோக்கி என்று அங்கும் இங்கும் அலை பாய்கிறது.

இந்த வண்டியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

சக்கரங்களுக்கு செல்லும் சக்தியை ஒரே சீராக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால்  வண்டி ஒரே சீராக நேரே ஓடும்.

சரி, இது சரிதானா என்று எப்படி  அறிந்து கொள்வது? பதஞ்சலி சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள்.  சரி போல பட்டாலும், சந்தேகம் இல்லாமல் இல்லை.

இதை எப்படி சரியா தவறா என்று அறிந்து கொள்வது ?

அதற்கும் பதஞ்சலி வழி சொல்கிறார்.

அது என்ன வழி என்று நாளை பார்ப்போமா?


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html


---------------------------------------------------------------------------
பாகம் 2

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

No comments:

Post a Comment