யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 1
योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥
yogaś-citta-vr̥tti-nirodhaḥ ॥2॥
யோகா சித்த விருத்தி நிரோதா
ஒவ்வொரு வார்த்தையையும் மிக மிக கவனமாக போட்டிருக்கிறார் பதஞ்சலி. மிகவும் அடர்த்தியாக எழுதப் பட்டது யோகா. கடுமையான சொற் சிக்கனம். இதனால் ஒரு நல்லது என்ன என்றால், இதில் ஒரு வார்த்தையை எடுத்து விட்டு இன்னோர் வார்த்தையை போட முடியாது. யாரும் இடைச் செருகல் செய்ய முடியாது. ஒரு கணித சூத்திரம் போல, ஒரு அறிவியில் கோட்பாடு (தியரி) போல எழுதி இருக்கிறார்.
யோகா = யோகப் பயிற்சி செய்வதன் மூலம் என்ன கிடைக்கும் ? யோக பயிற்சி செய்தால் என்ன நிகழும் என்று சொல்கிறார்.
சித்த = சித்தம். சித்தம் என்றால் என்ன ? இதற்கு பக்கம் பக்கமாக விரிவுரை எழுதி இருக்கிறார்கள். கொஞ்சம் சிந்திப்போம்.
வெளி உலகில் நடப்பதை நமக்கு நம் புலன்கள் பெற்றுத் தருகின்றன.
ஒளி, ஒலி , தொடு உணர்வு, சுவை, வாசம், என்பதை கண், காது, உடல், மூக்கு, நாக்கு என்ற புலன்கள் அறிய உதவுகின்றன.
இது புரிகிறது அல்லவா.
சரி, கண் பார்க்கிறதா ? காது கேட்கிறதா ? இல்லை.
இவை வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை மூளைக்கு அனுப்புகின்றன. அவ்வளவுதான். கண்ணுக்கு ஒன்றும் தெரியாது. அது ரோஜா பூவா, மல்லிகையா என்று கண்ணுக்குத் தெரியாது. அது காம்போதியா, பைரவி இராகமா என்று காதுக்குத் தெரியாது.
சப்தம் மூளைக்குப் போய் , மூளை அதை கண்டு சொல்கிறது. அது மல்லிகை பூ, இது காம்போதி இராகம் என்று.
சரி, மூளை உணர்கிறதா ? மூளைக்குத் தெரியுமா ?
எனக்கு சங்கீதம் என்றால் என்ன என்றே தெரியாது. என் காதில் ஒரு மோகன இராகப் பாடல் விழுகிறது. ஒரு சங்கீத மேதை என் பக்கத்தில் இருக்கிறார். அவர் காதிலும் அந்த பாடல் விழுகிறது. அவருக்கு அது மோகன இராகப் பாடல், இன்ன தாளம் என்று புரிகிறது. எனக்கு அது சத்தமாக கேட்கிறது. எனக்கும் காது இருக்கிறது. மூளை இருக்கிறது. இருந்தும் என்னால் அதை அறிய முடியவில்லை.
காரணம் என்ன ?
என் அறிவு, அனுபவம், ஞாபகம் இவை எல்லாம் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
அது மூளை என்ற ஒரு உறுப்பு மட்டும் மட்டும் அல்ல. அதில் கொஞ்சம் மற்றவையும் சேர வேண்டி இருக்கிறது அல்லவா.
இதன் மூலம் நாம் உலகை அறிகிறோமோ, அது சித்தம்.
சித்தம் நேராக உலகை அறிய முடியாது. புலன்களும், மூளையும் வேண்டும். இவற்றின் துணை கொண்டு சித்தம் உலகை அறிகிறது.
இதை புத்தி என்கிறார்கள், மனம் என்கிறர்கள். சித்தம் என்கிறார்கள்.
மிகச் சரியாக அறுதியிட்டு கூற முடியவில்லை. இருந்தும் உங்களுக்கு அது என்ன என்று புரிகிறது அல்லவா ?
இந்த சித்தம் தான் நாம் உலகை அறிய உதவுகிறது.
ஒருவரை பார்த்தவுடன் நமக்கு பிடித்துப் போய் விடுகிறது. அதே ஆளை இன்னொருவருக்கு படித்தவுடன் பிடிக்காமல் போகிறது. ஏன் ? ஆள் ஒருவர் தான். எடை, நிறம், உயரம் எல்லாம் ஒன்று தான். இருந்தும் ஒருவர்க்கு பிடிக்கிறது. இன்னொருவருக்கு பிடிக்கவில்லை.
காரணம் , நம் சித்தம் வேறு, அவர் சித்தம் வேறு.
காதலிக்காக காத்திருந்தால், நேரம் நகரவே மாட்டேன் என்கிறது. ஒவ்வொரு வினாடியும் யுகம் போல இருக்கிறது. அவள் வந்து விட்டால், யுகமும் நொடியாக போய் விடுகிறது. "அட அதுக்குள்ள 4 மணி நேரம் ஆகி விட்டதா ? இப்ப தான் வந்த மாதிரி இருக்கு " என்று சொல்லுவதை கேட்டு இருக்கிறோம்.
ஏன் ?
நேரம் என்னவோ ஒரே மாதிரிதான் போய் கொண்டு இருக்கிறது. நாமும் ஒரே ஆள் தான். இருந்தும் நேரம் சில சமயம் வேகமாக போவது போலவும், சில சமயம் மெதுவாக போவதும் போலவும் இருக்கிறது.
ஏன் ?
நம் சித்தம் இருக்கும் நிலை.
உலகம் என்பது நம் சித்தத்தின் நிலையை பொறுத்தது என்று புரிகிறது அல்லவா ?
மழை நல்லதா ?
காதலியின் கை பிடித்து நடந்தால் சுகம் தான். உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது நனைந்தால் எரிச்சலும் கோபமும் வரும்.
இப்படி பல உதாரணம் சொல்லலாம்.
வெளி உலகம் என்பது நம் சித்தத்தை பொறுத்தது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இது மிக மிக தெளிவாக நம் மனதில் பதிய வேண்டும்.
நல்லதும், கெட்டதும் , சுகமும், துக்கமும், இன்பமும், துன்பமும், நம் மன நிலை அல்லது சித்தத்தை பொறுத்தது.
கோபம், வெறுப்பு, எரிச்சல், காமம், மயக்கம், குழப்பம் எல்லாம் சித்தத்தை பொறுத்தது என்று புரிகிறது அல்லவா.
அப்படி என்றால், சித்தத்தை மாற்றினால், உலகம் வேறு மாதிரி தெரியும் நமக்கு.
பச்சை நிற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால், எல்லாம் பச்சையாகவே தெரியும்.
மஞ்சள் காமாலை வந்தால், எல்லாம் மஞ்சளாகத் தெரியும்.
நம் சித்தம் எப்படியோ, உலகம் அப்படியே தெரியும்.
அப்படி என்றால் அந்த சித்தத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா.
அது எப்படி செயல் படுகிறது, அதன் நிலைகள் என்ன, எப்படி ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு கொண்டு செல்வது எப்படி, இந்த நிலை நல்லது, எது நல்லது இல்லை ....
இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இதன் மூலம் நாம் உலகை அறிகிறோமோ, அது சித்தம் = எதன் மூலம் நாம் உலகை அறிகிறோமோ, அது சித்தம்
ReplyDeleteஇதன் மூலம் நாம் உலகை அறிகிறோமோ, அது சித்தம் என்பதை எதன் மூலம் நாம் உலகை அறிகிறோமோ, அது சித்தம் என் வாசிப்போம்.
Delete