யோக சூத்திரம் - 1.1 - இப்போது யோக அனுசாசனம்
अथ योगानुशासनम् ॥१॥
atha yoga-anuśāsanam ॥1॥
அத யோக அனுசாசனம்
இப்போது யோக பயிற்சி
இப்போது = இந்த நிமிடத்தில், இந்த நொடியில் இருந்து. நாம் எப்போதும் ஒன்று கடந்த கால நினைவுகளில் வாழ்கிறோம் அல்லது எதிர் கால கனவுகளில் அல்லது பயங்களில் வாழ்கிறோம். இந்த நொடியில் நாம் வாழ்வதே கிடையாது.
கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இன்று எத்தனை தடவை பழசை எண்ணிப் பார்த்தீர்கள். எத்தனை முறை எதிர் காலத்தைப் பற்றி யோசித்தீர்கள் என்று.
வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடந்த காலம் போய் விட்டது. வராது. எதிர் காலம் இனிதான் வரப் போகிறது. இந்த இரண்டு காலமும் நம் கையில் இல்லை.
நம்மிடம் இருப்பது இந்த நொடி தான். ஏதாவது செய்வது என்றால் இந்த நொடியில் செய்தால்தான் உண்டு.
ஆனால், நாம் இந்த நொடியில் இருப்பதே இல்லை.
பதஞ்சலி சொல்கிறார் "இப்போது யோக பயிற்சி " என்று.
இந்த நொடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நாளைக்கு நல்ல நாள், அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கக் கூடாது.
இப்போது.
உடனே.
"யோக" - யோகம் என்றால் இணைப்பது. இனைந்து இருப்பதை மீண்டும் இணைக்க முடியாது. பிரிந்து கிடப்பதை இணைத்து வைக்கலாம். எது பிரிந்து கிடக்கிறது ?
மனமும் உடலும்
உடலும் உணர்வும்
மனமே , பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது . மனச் சிதைவு என்று சொல்வார்களே.
ஆசை ஒரு புறம், தவறு என்ற எண்ணம் ஒரு புறம், பொறாமை ஒரு புறம், புன்னகை மறு புறம், வெறுப்பு ஒரு புறம், சகிப்பு மறு புறம் என்று மனம் பல பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது.
இப்படி உடைந்து கிடக்கும் நம்மை எடுத்து ஒட்டி வைப்பது யோகா. நம்மை முழு மனிதனாக்குவது யோகா.
அனுசாசனம் = பயிற்சி, ஒழுக்கம் (discipline ).
உலகில் உள்ள அத்தனை மதங்களும் ஏதோ ஒன்றை தருவதாகச் சொல்லி தான் மக்களை தன் பக்கம் இழுக்கிறது. ஒன்றும் கிடைக்காது என்றால் மனிதன் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும், பூஜை செய்ய வேண்டும், காணிக்கை செலுத்த வேண்டும் ? ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவற்றை எல்லாம் செய்கிறான்.
ஒரு வேளை கிடைக்காவிட்டால் ?
இருக்கவே இருக்கிறது, சொர்கம், மறு பிறப்பு . இந்த பிறவியில் கிடைக்காவிட்டால் , சொர்க்கத்தில் கிடைக்கும். மறு பிறவியில் கிடைக்கும் என்று சொல்லி விடலாம். யாராலும் செக் பண்ண முடியாது. மனிதன் , ஏதோ பெரிதாக கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டு மதங்களின் பின்னால் போய் கொண்டிருக்கிறான்.
ஆனால், பதஞ்சலி அப்படி ஒன்றும் தருவதாக, கிடைப்பதாக சொல்ல வில்லை.
யோக பயிற்சியை இப்போது தொடங்கு என்கிறார்.
யோகா செய்தால் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று ஆசை காட்டவில்லை.
அனுசாசனம் = அனுசாசனம் என்பதற்கு சரியான தமிழ் சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை. பயிற்சி, ஒழுக்கம் , discipline என்று சொல்லலாம். அது கட்டு பாடு கிடையாது. அதை செய், இதை செய்யாதே என்று விதிப்பது அல்ல. பயிற்சி. அவ்வளவு தான்.
சரியான பயிற்சி இருந்தால், ஒழுக்கம் இருந்தால் எதையும் அடையலாம். அதனால், பயிற்சியை ஆரம்பி இப்போதே என்கிறார்.
எதை பயிற்சி செய்ய வேண்டும், பயிற்சி செய்தால் என்ன நிகழும்....பார்ப்போம்.
அனுசாசனம் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் இசைவாக இருத்தல் .
ReplyDelete