யோக சூத்திரம் - 1.23 - எல்லாம் ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் -பாகம் 1
ईश्वरप्रणिधानाद्वा ॥२३॥
īśvara-praṇidhānād-vā ॥23॥
நான் முன்பே கூறியது போல, வார்தைகளை நிதானமாக சிந்திக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அர்த்தம் தான் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்று எண்ணிக் கொள்ள கூடாது.
உதாரணமாக, "அவன் கிட்ட எந்த திருக்குறளை கேட்டாலும் அசால்டாக சொல்லி விடுவான் " என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
அசால்ட் என்றால் ஆங்கிலத்தில் சண்டை, அடி தடி என்று அர்த்தம். நமது மனதில் அசால்ட் என்றால் எளிதாக என்று அர்த்தம் படிந்து இருக்கிறது.
எனவே, நாம் நினைத்துக் கொண்டு இருப்பது தான் அர்த்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
சரி, இப்போது சூத்திரத்தை பார்ப்போம்.
நீங்கள் ஒரு புதிய ஊருக்குப் போய் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் ஏதோ ஒரு இடத்துக்குப் போக வேண்டும். அங்கு உள்ள ஒருவரிடம் எப்படி , நீங்கள் போக வேண்டிய இடத்தை சொல்லி , அங்கு எப்படி போவது என்று கேட்கிறீர்கள்.
அதற்கு அவர், "அந்த இடமா, அதுக்கு நீங்க இப்படி போகலாம் , அப்படியும் போகலாம் " என்று வழி சொல்கிறார். நீங்கள் அவரை கொஞ்சம் குழப்பமாக பார்க்கிறீர்கள். புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது.
அவர் உங்கள் குழம்பிய முகத்தை பார்த்துவிட்டு, "இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் இல்லேனா ஒண்ணு செய்யுங்க ...."
என்று மூன்றாவது ஒரு வழியை சொல்லத் தொடங்குகிறார்.
அந்த "இல்லேனா " என்பதற்கு பின்னால், சில விஷயகள் இருக்கிறது.
ஒன்று, அவர் நீங்கள் ஊருக்குப் புதியவர், சொன்ன வழி ஒன்றும் உங்களுக்கு புரியவில்லை என்று அவர் புரிந்து கொண்டார்.
இரண்டாவது, முதலில் சொன்ன வழிகளை விட, சுருக்கமான , எளிமையான வழி ஒன்றை சொல்ல வேண்டும் என்று நினைத்து , புதிதான ஒன்றை சொல்ல நினைக்கிறார்.
மூன்றாவது, நீங்களும் , முதலில் சொன்ன வழிகள் எல்லாம் சிக்கல் போல இருக்கிறது. இப்போது ஏதோ ஒரு எளிய வழியை சொல்லப் போகிறார் என்று ஆவலோடு கேட்கத் ஆர்வமாய் இருப்பீர்கள் அல்லவா.
அது போல,
சித்த வ்ருத்தி நிரோதம் பற்றி பல வழிகளை சொல்லி வந்தார் பதஞ்சலி.
அதெல்லாம் ரொம்ப கஷ்டமான வழி போல தோன்றும். அது மட்டும் அல்ல, நீண்ட நாள் பயிற்சி செய்ய வேண்டும் போல இருக்கும். அப்படியே செய்தாலும், சரியாக செய்கிறோமா என்று தெரியாது. கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் செய்ய வேண்டும். நடக்குமா என்ற சந்தேகம் வரும் அல்லவா.
எனவே, "அப்படியில்லேனா ஒண்ணு பண்ணுங்க " என்று இந்த ஸ்லோகத்தில் ஒரு மிக மிக எளிமையான வழியை சொல்கிறார்.
அது என்ன வழி ?
īśvara-praṇidhānād-vā
"வ" என்றால் அல்லது (or என்று ஆங்கிலத்தில் சொல்வோமே ) என்று அர்த்தம்.
நீங்கள் முன்பு கூறிய எல்லாம் செய்யுங்கள். "அல்லது" என்று இன்னொரு புது வழியை சொல்கிறார்.
அது
"īśvara-praṇidhānād" = ஈச்வர ஈஸ்வர ப்ரநிதானத்
என்ற வழி.
அது என்ன வழி ?
ப்ரநிதானத் என்றால் ஒரு அர்பணிப்பு (டெடிகேஷன்), பக்தி (devotion ) என்று அர்த்தம்.
ஈஸ்வர என்றால் உருவாக்கும் சக்தி. ஈஸ்வரன் என்றால் ஏதோ ஒரு கடவுள், பனி மலையில், பாற்கடலில் இருக்கும் ஒரு ஆள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.
வீட்டில் , பொதுவாக, பெண்கள் சமையல் செய்வார்கள். செய்து முடித்த பின் நாம் அந்த உணவை பார்க்கிறோம்.
அந்த உணவு தயாராவது முன்னால் எப்படி இருந்தது ? வாணலியில் வரு பட்டு, வேக வைக்கப் பட்டு, தாளிக்கப் பட்டுக் கொண்டு இருந்தது.
அதற்கு முன்னால் ?
கழுவப்பட்டு, நறுக்கப் பட்டு, சுத்தம் செய்யப் பட்டுக் கொண்டு இருந்தது.
அதற்கு முன்னால் ?
இன்னைக்கு என்ன சமைக்கலாம், எப்படி சமைக்கலாம் என்று அந்த பெண் மனதில் சிந்தித்துப் பார்த்து இருப்பாள் அல்லவா ?
அந்த சிந்தனை, அந்த படைக்கும் ஆற்றல், அது தான் ஈஸ்வரன்.
அது புத்தகம் எழுதும் ஆசிரியராகட்டும், இசை அமைக்கும் இசை அமைப்பாளராகட்டும், புது சித்தாந்தங்களை படைக்கும் அறிவியல் அறிஞர் ஆகட்டும் , சமைக்கும் ஒரு சமையல் ஆளாக இருக்கட்டும் யாராக இருந்தாலும், ஒன்றை செய்வதற்கு முன்னால் அதை செய்யும் சிந்தனை, ஆற்றல் இருக்கிறது அல்லவா ? அந்த ஆற்றல் மற்றும் படைப்புத் திறன் தான் ஈஸ்வரன் என்று அழைக்கப் படுகிறது.
அந்த ஈஸ்வரனுக்கு , அந்த திறனுக்கு, அர்ப்பணம் செய் என்கிறார்.
இது என்ன புது கதையாக இருக்கிறது.
எனக்கு நானே அர்ப்பணம் செய்து கொண்டால் , அது எப்படி என் சித்த சலனங்களை போக்கும் ?
புரியலையே ......
மேலும் சிந்திப்போம்.
http://yogasutrasimplified.blogspot.com/2017/07/123-1.html
No comments:
Post a Comment