யோக சூத்திரம் - 1.21 - தீவிர முனைப்பு
तीव्रसंवेगानामासन्नः ॥२१॥
tīvra-saṁvegānām-āsannaḥ ॥21॥
பலர் "நிறைய வேலை இருக்கு செய்ய. ஆனா , எங்க நேரம் இருக்கு ?" என்று அலுத்துக் கொள்வதை பார்க்கிறோம்.
வார இறுதியில் (weekend ) நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்போம். வீட்டை ஒழுங்கு படுத்த வேண்டும், நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும், பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் என்று பலப் பல வேலை பட்டியல் இருக்கும்.
திங்கள் கிழமை காலையில் பார்த்தால் செய்ய நினைத்த பாதி கூட நடந்திருக்காது.
ஏன் ? என்ன ஆயிற்று ?
செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முனைப்பு இருந்தது. ஆனால், செயலில் அந்த வீரியம் இல்லை.
ஆர்வமும், முனைப்பும் மட்டும் இருந்தால் போதாது. செயலிலும் வேகம் வேண்டும். கொஞ்சம் செய்து விட்டு, "...ஸ்ஸ்ஸ் அப்பாட , மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் " என்று சோம்பி இருந்து விடக் கூடாது.
நிறைய பேர் இப்படித்தான் அதை கற்றுக் கொள்ளப் போகிறேன், இதை கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று ஆரம்பிப்பார்கள். முதலில் கொஞ்ச நாள் ஆர்வமாக செய்வார்கள். அப்புறம், ஆர்வமும், முனைப்பும் குறையும், வேலையில் உள்ள தீவிரம் குறையும். அப்புறம் விட்டு விடுவார்கள்.
எடை குறைய வேண்டும் என்று உடற் பயிற்சி கூடத்தில் சேர்வது. அப்புறம் ஒரு மாதத்தில் எடை நினைத்த அளவு குறையவில்லை என்றால், விட்டு விடுவது.
புது வருட முடிவுகள் (new year resolution ) என்று நிறைய முடிவு செய்வது, பின் அதை எல்லாம் மறந்து விடுவது.
நாம் நித்தம் காணும் காட்சிகள் இவை.
எடுத்த ஒன்றில் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பதஞ்சலி கூறுகிறார்.
~"செய்யும் செயலை நம்பிக்கையோடு தீவிர முனைப்போடு செய்ய வேண்டும்."~
tīvra = தீவிர = வேகம், செயலில் வீரியம், முனைப்பு
saṁvegānām = பயிற்சி, நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் செய்யும் பயிற்சி
āsannaḥ = அருகில், சமீபத்தில் , நெருக்கத்தில்
எந்த செயலிலும் வெற்றி அடைய இரண்டு வேண்டும்.
ஒன்று - செய்யும் செயலில் நம்பிக்கை, அசைக்க முடியாத நம்பிக்கை
இரண்டாவது - செயலில் வேகம், ஆழம், முனைப்பு
இதில் ஒன்று இருந்து , இன்னொன்று இல்லாவிட்டால் காரியம் கை கூடாது.
பயிற்சி செய்யும்போது மித வேகத்தில் ஆரம்பிக்க வேண்டும், பழக பழக அதை கொஞ்சம் மத்திய வேகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்புறம், அதி வேகம்.
ஆரம்பிக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு சூரிய நமஸ்காரம் செய்வதே கடினமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக முயன்று, ஒன்றை இரண்டாக்க வேண்டும், இரண்டு நாலாக வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் செயல்களில் திறமை கூடிக் கொண்டே போக வேண்டும். முன்னேற்றம் இருக்க வேண்டும்.
அடுத்தது, "என்ன செஞ்சு என்ன ஆகப் போகுது " என்று ஒரு உற்சாகம் இல்லாமல், நம்பிக்கை இல்லாமல் வேலை செய்யக் கூடாது.
எவ்வளவு வேகமாக செய்தாலும், நம்பிக்கையும், உற்சாகமும் இல்லாமல் செய்தால் அது வெற்றியாக முடியாது.
வேகம் என்று எடுத்துக் கொண்டால் - மிதம் , மத்யம் , அதி வேகம்
நம்பிக்கை, உற்சாகம் என்று எடுத்துக் கொண்டால் - அதிலும் இந்த குறைவான நம்பிக்கை, மிதமான நம்பிக்கை, அதிக நம்பிக்கை என்று மூன்று பிரிவாக பிரித்த்துக் கொள்ளலாம்.
ஆக மொத்தம் 9 வகைகள் உள்ளன.
இரண்டிலும் மிதமான ஒன்றில் ஆரம்பித்து , இரண்டிலும் உயர் நிலையை அடைய வேண்டும்.
செயலில் வேகம்,
நம்பிக்கையில் உறுதி
வெற்றி உங்களுடையதே.
வாழ்த்துக்கள்.
http://yogasutrasimplified.blogspot.com/2017/07/121.html
No comments:
Post a Comment