யோக சூத்திரம் - 1.20 - மெய்யறிவை அடையும் வழி
श्रद्धावीर्यस्मृति समाधिप्रज्ञापूर्वक इतरेषाम् ॥२०॥
śraddhā-vīrya-smr̥ti samādhi-prajñā-pūrvaka itareṣām ॥20॥
முந்தைய சூத்திரத்தில் எப்படி புற வேறுபாடுகளை நீக்கி (விதேகம், தேகம் = உடல், தோற்றம்) , அனைத்திலும் இருக்கும் சக்தி ஒன்றுதான் அறிந்தால் அலை பாயும் மனம் அமைதியுற்று தெளிவு பிறக்கும் என்று பார்த்தோம்.
சிலருக்கு சொன்னால் புரியும். ஆனால் அதை செயல் படுத்துவது எப்படி என்று தெரியாது.
வடிவங்கள்தான் வேறு, உள்ளுறையும் சக்தி ஒன்றுதான் என்று அறிவளவில் புரிகிறது. ஆனால், நடை முறை வாழ்க்கை என்று வரும்போது, படித்தது மறந்து விடுகிறது அல்லது அதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் தவிப்போம். ஒருவேளை, இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லையோ ? ஒரு வேளை இதெல்லாம் சாமியார்களுக்குத்தான் ஒத்துவருமோ ? நம்மை போல குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் சரிப்படாதோ என்று பல சந்தேகங்கள் வரும்.
நேரடியாக செயல்படுத்த முடியாதவர்களுக்கு , படிப் படியாக அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று வழிமுறைகளை சொல்லித் தருகிறார் பதஞ்சலி.
அது என்ன வழி முறை.
śraddhā = நம்பிக்கை, உறுதி, நிச்சய தன்மை.
இதை நாம் அடைவோம் என்ற நம்பிக்கை வேண்டும். அடைந்தே தீருவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும். இப்படி செய்தால் , அது நிகழும் என்ற நிச்சய தன்மை வேண்டும்.
இது யோக சமாதிக்கு மட்டும் அல்ல. வாழ்வில் எதை செய்தாலும் இந்த நம்பிக்கை, உறுதி, நிச்சய தன்மை வேண்டும்.
நடக்குமா ? இது சரிதானா ? இப்படி செய்யலாமா ? இன்னும் ஒரு முன்னேற்றமும் வரலையே ? இதைவிட அது நல்ல வழியாக இருக்குமோ ? என்று எப்போதும் சந்தேகப் பட்டுக்கொண்டே இருந்தால் ஒன்றும் நடக்காது.
எண்ணித் துணிக கருமம் என்பார் வள்ளுவர்.
துணிந்து, நம்பிக்கையோடு , உறுதியோடு இறங்க வேண்டும்.
vīrya - உற்சாகமாக, வலுவோடு, , சக்தியோடு
வீர்யம் என்றால் முழு சக்தியும் , உற்சாகமாக, வலுவோடு உபயோகப் படுத்த வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் எந்த காரியமும் சித்தி ஆகாது. "செஞ்சு பார்ப்போம், வந்தால் வரட்டும், வராட்டியும் பரவாயில்ல " என்று எதையும் செய்யக் கூடாது. முழு உற்சாகத்தோடு செய்ய வேண்டும்.
smr̥ti - நினைவோடு, ஞாபகத்துடன், செய்கிறோம் என்ற உணர்வோடு
பலபேருடைய வாழ்க்கை முழுவதும் ஏதோ இயந்திரம் போல நிகழும். காலையில் எழுந்திருப்பது, குளிக்கணும், சிற்றுண்டி, அலுவலகம், சாப்பாடு, வீடு, தூக்கம் என்று உயிர்ப்பு இல்லாமல் இருக்கும். எதைச் செய்தாலும் ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம், எப்படி செய்கிறோம், இதை இன்னும் எப்படி சிறப்பாக செய்யலாம், என்று என்ன செய்கிறோம் என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.
சிலர் சாப்பிடும்போது கூட, எதையோ நினைத்துக் கொண்டு அல்லது டிவி பார்த்துக் கொண்டு, பேப்பர் வாசித்துக் கொண்டு உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொள்வதை பார்க்கிறோம்.
அதை விடுத்து, அந்த உணவை கண்ணால் கண்டு, கையால் உணர்ந்து, அதன் மணத்தை நுகர்ந்து, அதை வாயில் போட்டு அதன் சுவையை இரசித்து சாப்பிட்டால் அது தனி சுகம்.
மனைவியிடம் இருக்கும் போதும் அலுவலகத்தை நினைத்துக் கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கை சுகமானதா ?
Mindful என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். எதை செய்தாலும், மனதை அதில் செலுத்தி முழுமையாக ஈடுபட்டு செய்ய வேண்டும்.
samādhi = சமாதி
சமாதி நிலையை அடைய முடியும். ஒவ்வொரு செயலையும் முன்பு கூறிய மாதிரி செய்தால், மனம் மீண்டும் மீண்டும் ஏங்காது. எல்லாம் அறை குறையாக செய்வதால், ஒரு திருப்தி இருப்பது இல்லை. மீண்டும் மீண்டும் அது வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. எதையும் முழுமையாக , ஈடுபாட்டோடு செய்யும் போது மனம் முழுதுமாக திருப்தி அடைகிறது. அது வேண்டும், இது வேண்டும் என்ற அலை பாய்வது குறையும்.
prajñā =உண்மையான அறிவு, மெய் அறிவு
அந்த சமாதி நிலையில் உண்மையான அறிவை நாம் அடைவோம். நாம் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருப்பது என்பது வெறும் தகவல் தொகுப்பு. உலகின் உண்மை நிலையை நாம் அறிவதில்லை.
pūrvaka = பூர்வக, மேலே சொன்னவை, முன்பே சொன்னவை
itareṣām = மற்றவர்களுக்கு
எல்லாம் ஒன்றுதான் என்று அறிய முடியாத மற்றவர்களுக்கு, மேலே சொன்னவற்றை கடை பிடித்தால் அவர்களும் அறிய முடியும்.
எதை செய்தாலும் ஆர்வத்துடன், உறுதியுடன், நிச்சய தன்மையுடன், முழு மூச்சாக, செய்கிறோம் என்ற உணர்வோடு செய்து பழகுங்கள்.
உண்மையான அறிவை அடைய அதுவே வழி.
http://yogasutrasimplified.blogspot.com/2017/07/120.html
No comments:
Post a Comment