யோக சூத்திரம் - 1.22 - பயிற்சியின் மூன்று நிலைகள்
मृदुमध्याधिमात्रत्वात्ततोऽपि विशेषः ॥२२॥
mr̥du-madhya-adhimātratvāt-tato'pi viśeṣaḥ ॥22॥
பயிற்சி என்பது கடை, இடை, மேல் என்று மூன்று நிலைகளில் உள்ளது.
mr̥du = மிருது = மென்மையாக
madhya = நடுத்தரத்தில்
adhimātrat = அதிமாத்ரத் = தீவிரமாக
vāt = அது
tato = ததோ = இந்த
'pi = அபி = மேலும்
viśeṣaḥ = விசேஷ = நிலைகள், படிகள்
ஒரு இளைஞன் , ஒரு புத்த துறவியை அடைந்து, "நான் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும்...சுமார் எத்தனை நாள் ஆகும் " என்று கேட்டான்.
குரு: என்ன ஒரு பத்து வருடம் ஆகும்
இளைஞன்: பத்து வருடமா, அவ்வளவு நாள் எல்லாம் பொறுக்க முடியாது. நான் எவ்வளவு மணி வேண்டுமானாலும் பயிற்சி செய்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடியுமா ? என்று கேட்டான்.
குரு: அப்படியென்றால் , பதினைந்து வருடம் ஆகும் என்றார்.
இளைஞன்: என்ன குருவே இப்படி சொல்கிறீர்கள். நான் அதிகம் பயிற்சி செய்கிறேன் என்கிறேன் நீங்கள் அப்படி செய்தால் இன்னும் ஐந்து ஆண்டுகள் அதிகம் ஆகும் என்கிறீர்களே. நான் விடுமுறையை எடுக்காமல் பயிற்சி செய்கிறேன். இந்த பத்து வருடத்தை கொஞ்சம் குறைத்து ஒரு இரண்டு மூணு ஆண்டுகளில் முடிக்க முடியுமா ? என்று கேட்டான்.
குரு: ஓ அப்படியா . அப்படி என்றால் இருபது வருடம் ஆகும் என்றார்.
புரிகிறதா ?
அவசரப் பட்டால் , காரியம் நடக்காது. எந்த பயிற்சியும் , காலம் பிடிக்கும். ஒரே நாளில் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் ஒன்றும் நடக்காது.
உடற் பயிற்சி கூடத்தில் சேர்ந்த ஒரே வாரத்தில் பத்து கிலோ எடை குறைய வேண்டும் என்று நினைப்பது.
இசை பயிற்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் உலக தரம் வாய்ந்த இசை கலைஞனாக ஆக வேண்டும் என்று நினைப்பது.
இதெல்லாம் நடக்காத காரியம்.
எந்த பயிற்சியை எடுத்துக் கொண்டாலும், மிகுந்த உற்சாகத்தில் முதல் சில நாளில் ரொம்ப செய்ய வேண்டியது. அதனால் உடம்பில் அங்கே இங்கே வலிக்கும். தசை (muscles ) பிடித்துக் கொள்ளும். வலிக்கும். "இது நமக்கு சரிப் படாது " என்று விட்டு விடத் தோன்றும்.
எதை எடுத்தாலும் அவசரப் படக்கூடாது.
மென்மையாக ஆரம்பிக்க வேண்டும்.
உடம்பும் மனமும் பயிற்சியில் ஒன்றி பழகிய பின், அடுத்த நிலைக்குப் போக வேண்டும்.
மென்மையான பயிற்சியில் இருந்து கொஞ்சம் கடினமான பயிற்சியை செய்ய வேண்டும்.
அடுத்து கடினமான பயிற்சியை செய்ய வேண்டும்.
எடுத்தவுடன் நேரே கடினமான பயிற்சியை செய்யக் கூடாது.
அதற்காக காலம் பூராவும் மென்மையான பயிற்சியே செய்து கொண்டு இருக்கக் கூடாது .
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வேண்டும்.
மனமும், உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு ஒரு படியாக முன்னேற வேண்டும்.
அப்படி செய்தாலும், எந்த வேலையிலும் வெற்றி பெறலாம்.
http://yogasutrasimplified.blogspot.com/2017/07/122.html
No comments:
Post a Comment