Saturday, January 18, 2020

யோக சூத்திரம் - 2.54 - பிரத்தியாகாரம்

யோக சூத்திரம் - 2.54 - பிரத்தியாகாரம் 


sva-visaya-asamprayoge cittasya-svarupa-anukara ivendriyanam pratyaharah

sva = சுயமாக, தானாக

vishaya = விஷயங்கள், பொருட்கள்

asamprayoge = ஸம்ப்ரயாகே என்றால் சேர்ந்து இருப்பது. அ + ஸம்ப்ரயாகே
என்றால் பிரிந்து இருப்பது. விலகி இருப்பது. தொடர்பு அற்று இருப்பது.

chittasya = சித்தத்தில்

svarupe =  இயல்பில், வடிவில்

anukarah = ஒத்து இருக்கும்

iva = அதே போல

indriyanam =  இந்திரியங்கள்

pratyaharah =  உள்நோக்கி செல்லுதல்


இந்திரியங்கள் வெளி உலக விஷயங்களில் செல்லாமல், அவற்றின் தொடர்பை விட்டு இருந்தால், அவை உள்நோக்கி திரும்பும். 



இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்ற இந்த நான்கு அங்கங்களும் வெளி உலக சம்பந்தப் பட்டவை.

எதை செய்கிறோம்,  எதை விலக்குகிறோம் , எப்படி உட்கார்கிறோம், எப்படி மூச்சை  இழுத்து விடுகிறோம் என்பதெல்லாம் வெளி உலக தொடர்பான  விஷயங்கள்.

அடுத்தது, பதஞ்சலி உள் நோக்கி செல்கிறார்.

சித்தம் அமைதியாக இருக்க வேண்டும். அதுதான் குறிக்கோள். மனம் எப்படி அமைதியாக இருக்கும்?  மனம் எப்படி சஞ்சலம் இல்லாமல் இருக்கும்?

அதற்கு முன்னால் , அது எப்படி சலனப் படுகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்த புலன்கள் வெளி உலக விஷயங்களை நமக்கு உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கின்றன.

டிவி பார்க்கிறோம், செய்தித் தாள் வாசிக்கிறோம். நண்பர்களோடு அரட்டை அடிக்கிறோம்.  போகிற வழியில் பலவற்றை பார்க்கிறோம், கேட்கிறோம், நுகர்கிறோம்.

நம் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து புலன்களும் செய்திகளை உள்ளே அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

செய்தி உள்ளே போனவுடன், சித்தம் வேலை செய்யத் தொடங்குகிறது.

அடடா, இந்த வீடு நல்லா இருக்கே, ஹ்ம்ம்...இருந்தா அந்த மாதிரி வீட்டுல இருக்கணும்.

இந்த படம் இன்னிக்குதான் வந்துருக்கு. அடுத்த வாரம் போவோம்.

இந்த நகை நல்ல டிசைன் ஆ இருக்கே. வாங்குனா தேவலை.

இப்படி ஒவ்வொரு விஷயமும் நமக்கு உள்ளே சென்று சித்தத்தை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றன. மனம் கிடந்து அலை பாய்கிறது.

இப்படி அலை பாயும் மனதில் உண்மை எங்கே தெரியும்.

அப்படினா, மனம் அலை பாயாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த புலன்கள், வெளி உலக விஷயங்களில் உள்ள தொடர்பை நிறுத்த வேண்டும்.

ஐயோ, அது ஒண்ணும் நடக்கிற காரியமா தெரியலையே. பாக்காம, பேசாம, கேக்காம, எப்படி இருக்கிறது? நாம் என்ன ஜடமா?  என்ற கேள்வி எழும்.

அது பதஞ்சலிக்குத் தெரியாதா?

அவர் சொல்கிறார், எப்போது புலன்கள் வெளி உலக தொடர்பை துண்டிக்கின்றனவோ, அப்போது அவை உள் நோக்கிச் செல்லத் தலைப்படும்.

உள்ளே என்ன நடக்கிறது என்று அறியத் தலைப்படும்.

நம்மை நாமே அறிந்து கொள்ள, அது முதல் படி.

புலன்களை வெளியே விட்டால் அது பாட்டுக்கு அலைந்து கொண்டே இருக்கும்.

அதை, வெளியே போவதை நிறுத்தினால் போதும், அது உள்ளே செல்லத் தொடங்கிவிடும்.

உள்ளே என்ன இருக்கிறது என்று நாம் அறியத் தொடங்குவோம்.

நாம் யார், ஏன் இப்படி இருக்கிறோம், நம் செயல்களுக்கு என்ன காரணம், என்ற உண்மைகளை அறிய ஆரம்பிப்போம்.

உள்ளே போவோமா?


https://yogasutrasimplified.blogspot.com/2020/01/254.html

No comments:

Post a Comment