Monday, July 17, 2017

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 1

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 1 


वितर्कविचाराअनन्दास्मितारुपानुगमात्संप्रज्ञातः ॥१७॥

vitarka-vicāra-ānanda-asmitā-rupa-anugamāt-saṁprajñātaḥ ॥17॥

அறிவு படிப்படியாக விதர்கா, விசாரா, அநந்தா , அஸ்மிதா என்ற நிலைகளில் செல்கிறது.

இந்த தமிழ் உரை , மூல சமஸ்கிரத உரைக்கு வலு சேர்ப்பதாக அமையவில்லை.

இப்போதைக்கு அறிவு  படிப்படியாக முன்னேறுகிறது என்று தெரிந்து கொள்ளுவோம். அவை என்னென்ன படிகள் என்று ஆராய்வோம். முழுவதும் படித்த பின்னால், இந்த சூத்திரத்தின் அர்த்தம் விளங்கலாம்.

அதற்கு முன் சமாதி என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

சமாதி என்றால் ஏதோ இறந்தபின் , ஒருவரை புதைத்து அதற்கு மேல் கட்டும் ஒன்று என்று  நினைத்துக் கொள்ளக் கூடாது.

எப்படியோ அந்த சொல், இறந்தவரை புதைத்த இடத்திற்கு பெயராகி விட்டது.

அதை கொஞ்சம் தள்ளி வைப்போம்.

சமாதி என்றால் சமம் + ஆதி.  ஆதி என்றால் முதலில் எப்படி இருந்தோமோ அதோடு அல்லது அதற்கு சமாக இருப்பது.

ஆதி என்றால் , முதலில் நாம் தோன்றியபோது எப்படி இருந்தோம் ?

 ஒரு குழந்தைக்கு நல்லது, கெட்டது , உயர்வு, தாழ்வு,  பணக்காரன், ஏழை என்ற பாகுபாடும் கிடையாது.

நாளடைவில் இவற்றை நாம் அறிந்து கொள்கிறோம்.

இவற்றை அறிந்த பின்னும், அந்த குழந்தை மனம் போல் இருப்பது சமாதி.

இருமை அகன்று ஒருமையில் நிலைப்பது சமாதி.


கல்லார்க்கும் கற்றவர்க்கும்  களிப்பருளும் களிப்பே என்பார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

என்பது திருவருட்பா

‘கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே  நோக்குவார்.’’

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

ஒன்றாக காண்பதுவே காட்சி என்பார் ஒளவையார்

இப்படி இருமை (duality ) மறைந்து , ஒருமை நிலை அடைவதுதான் சமாதி.

அந்த சமாதி இரண்டு வகைப்படும்.

ஒன்று  ஸம்ப்ரஜானதா இன்னொன்று அஸம்ப்ரஜானதா

இதில் ஸம்ப்ரஜானதா என்றால் என்ன என்று இங்கு சிந்திக்க இருக்கிறோம்.

தர்க்கம் என்றால் ஆராய்ச்சி, ஆராய்தல், அலசுதல், சரி எது தவறு எது என்று வாதம் செய்து உண்மையை நிலை நிறுத்துதல்.

நாம்  எதை  ஆராய்ச்சி செய்கிறோமோ , அவை , அவற்றினுள் இருக்கும் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, நாம் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், அந்த அணு எப்படி வேலை செய்கிறது, அதனுள் என்னென்ன இருக்கிறது, அதில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்றெல்லாம் போக போக புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

அதே போல நம் உடலை பற்றி ஆராயத் தொடங்கினால் , அதன் உறுப்புகள், அவை எவ்வாறு வேலை செய்கின்றன, அதில் வரும் நோய்கள், அவற்றை எப்படி குணப் படுத்துவது என்றெல்லாம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா ?

இது வெளி உலகை ஆராயும் போது நாம் அறிந்து கொள்ளும் முறை.

இது விதர்கம்.

மற்றவற்றையும் ஒவ்வொன்றாக அறிவோம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/117.html

Sunday, July 16, 2017

யோக சூத்திரம் - 1.16 - தன்னை அறிந்தால் ஆசைகளை விடலாம்

யோக சூத்திரம் - 1.16 - தன்னை அறிந்தால் ஆசைகளை விடலாம் 


तत्परं पुरुषख्यातेः गुणवैतृष्ण्यम् ॥१६॥

tatparaṁ puruṣa-khyāteḥ guṇa-vaitr̥ṣṇyam ॥16॥

தத் பரம் புருஷா கியாதே  குண வைட்ர்ஸ்ந்யம்

tat = அந்த

paraṁ = உயர்ந்த

puruṣa = தன்னை

khyāteḥ = அறிந்தால், உணர்ந்தால்

guṇa = குண

vaitr̥ṣṇyam  = தாகம் அடங்கும், பற்றுகளில் இருந்து விடுதலை கிடைக்கும் ॥16॥


தன்னை தான் அறிந்தால் ஆசைகளில் இருந்து விடுபடலாம்

புருஷா என்றால் "நான் என்ற உணர்வு", "உண்மையான நான்". அதை அறிந்தால் பற்றில் இருந்து விடுபடலாம்.

முந்தைய ஸ்லோகத்தில், ஆசை என்பது நம் அனுபவத்தில் இருந்தும், மற்றவர்கள் சொல்லக் கேட்டும் வருவது என்று பார்த்தோம்.

சரி, ஆசை வரும் வழி தெரிகிறது.

அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது.

பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் வேண்டும் என்கிறதே மனம். அந்த டிவி, இந்த கார், இந்த வில்லா, அந்த tour , இந்த உடை என்று எல்லாம் வேண்டும் என்கிறதே மனம்.

என்ன செய்யலாம்.

தன்னை அறிந்தால் இந்த ஆசைகள் போகும் என்கிறார்.

என்னடா இது புது குழப்பமாக இருக்கிறதே. நான் யார் என்று எனக்குத் தெரியாதா.  என் பெயர், உயரம், நிறம், அப்பா, அம்மா, படிப்பு, உத்யோகம் , என் கனவுகள், கற்பனைகள், ஆசைகள், எல்லாம் எனக்குத் தெரியுமே.

சும்மா, இந்த தன்னை அறிந்தால் ஆசை போகும் என்பதெல்லாம் கதை.

தன்னை அறிந்தால் எப்படி ஆசை போகும் ?

சிந்திப்போம்.

உலகில் உள்ள அனைத்தும் குணங்களால் நிறைந்தது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குணங்களின் தொகுப்பு தான் உலகில் உள்ள அனைத்தும்.

எப்படி ?

லட்டு என்றால் என்ன ?

லட்டு என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும், வாயில் போட்டால் இனிப்பாக இருக்கும், நெய் வாசம் வரும், தொட்டால் மென்மையாக , மிருதுவாக இருக்கும். இந்த குணங்களின் தொகுப்புதான் லட்டு என்பது. இன்னும் கொஞ்சம் வேண்டுமானால் மேலும் சில குணங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன பந்து போல இருக்கும் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியில் லட்டு என்பது சில குணங்களின் தொகுதி என்பது தெரிகிறது அல்லவா ?

அது போல, மல்லிகை பூ என்றால் என்ன ?

வெண்மையாக இருக்கும், சின்னதாக இருக்கும், பச்சை நிறத்தில் காம்பு இருக்கும், , சுகமான மணம் தரும்.

கணவனோ, மனைவியோ, காதலியோ , பிள்ளையோ என்றால் என்ன ? அவர்களின் தோற்றம், குணங்கள் இவைகளின்தான் தொகுப்புதான்.

குணங்களை குறைத்துக் கொண்டே வந்தால் கடைசியில் ஒன்றும் இருக்காது.

அடுத்தது, நமக்கு ஒன்றின் மேல் பற்று அல்லது ஆசை வரக் காரணம் என்ன ?

அந்தப் பொருளின் (அல்லது நபரின்) குணங்கள் நமக்கு பிடித்து விடுகிறது.

லட்டு பிடிக்க காரணம், அது இனிப்பாக , மென்மையாக, மணமாக இருப்பதால்.

பாகற்காய் பிடிக்காது ஏன் என்றால் அது கசக்கும்.

சில குணங்கள் பிடிக்கும், சில பிடிக்காது.

சில பேரை பிடிக்கும் காரணம் அவர்களின் குணம். சிலரை கண்டாலே பிடிக்காதது , காரணம் அவர்களின் குணம்.

அடுத்தது, இந்த குணங்கள் எங்கே இருக்கின்றன ? பொருளில் இருக்கிறதா, அல்லது நம்மில் இருக்கிறதா ?

சிந்திப்போம்.

சில மாநிலங்களில் உள்ளவர்கள் நிறைய காரம் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் காரம் குறைந்தாலும் உணவு சப் என்று இருக்கும். ஆனால், அந்த காரம் குறைந்த உணவோ சிலர்க்கு பொறுக்க முடியாத காரமாக இருக்கும். காரம் என்பது உணவில் இல்லை, உண்பவரின் தன்மையைப் பொறுத்து அமைகிறது.

சிலருக்கு காபி டீ குடிப்பதென்றால் மூன்று தேக்கரண்டி சர்க்கரை வேண்டும். அதுவே சிலருக்கு வாயில் வைக்க முடியாது.

சிலருக்கு வலி பொறுக்க முடியும். சிலருக்கு சின்ன வலி கூட பொறுக்க முடியாது.

சிலருக்கு சில இசை பிடிக்கும். சிலருக்கு அதுவே காட்டு கத்தலாய் தோன்றும்.


மஞ்சள் காமாலை வந்தவனுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரியும்.

நமக்கு ஒருவரை பிடிக்கும். அதே ஆளை இன்னொருவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

எனவே, குணங்கள் என்பது பொருள்களில் இல்லை. அது நம்மில் இருக்கிறது. அதை அனுபவிப்பனில் இருக்கிறது என்பது தெளிவாகும்.

உலக விஷயங்களின் மேல் ஆசை வைப்பது என்பது நம் மீதே நாம் ஆசை வைப்பது தான்.

பொருள்களுக்கு குணங்களைத் தருவதும், தந்த குணங்களை அனுபவிப்பதும் நாம் தான்.

இந்த தருபவனும், அனுபவிப்பனும்தான் "புருஷா" என்று குறிப்பிடப்படுகிறது.

இதை அறிந்து கொண்டால், அதுவே பர வைராக்கியம் எனப்படும்.

ஆசை ஏன் வருகிறது ? எங்கிருந்து வருகிறது ? எப்படி திருப்தி வருகிறது ? என்பதெல்லாம் புரிபடும்.

நான் பொருள்களுக்கு வேண்டிய குணங்களை அளிக்கிறேன்.

நான் பொருள்கள் தரும் இன்பங்களை அனுபவிக்கிறேன்.

இந்த நான்" ஐ புரிந்து கொண்டால், ஆசை மற்றும் வெறுப்பினால் அலையும் மனது தானே அடங்கும்.  சலனங்கள் ஓயும். தெளிவு பிறக்கும்.

உண்மையின் தரிசனம் கிடைக்கும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/116.html

Friday, July 14, 2017

யோக சூத்திரம் - 1.15 - வைராக்கியம் என்பது

யோக சூத்திரம் - 1.15 - வைராக்கியம் என்பது 


दृष्टानुश्रविकविषयवितृष्णस्य वशीकारसंज्णा वैराग्यम् ॥१५॥

dr̥ṣṭa-anuśravika-viṣaya-vitr̥ṣṇasya vaśīkāra-saṁjṇā vairāgyam ॥15॥

திருஷ்ட அனுசரவிக்க விஷய விதர்ஸனஸ்ய சம்ஜியான வைராக்கியம்

dr̥ṣṭa = திர்ஷ்ட = பார்வை, பார்த்தல்

anuśravika = அனுசரசவிக்க = கேட்டு அறிதல்

viṣaya = விஷய = விஷயங்களை

vitr̥ṣṇasya = வித்ருஸந்சய = பற்றற்று இருக்கிறானோ

vaśīkāra = நிதானம், சமநிலை

saṁjṇā = உள்ளுணர்வோடு

vairāgyam = அதுவே வைராக்கியம்

தான் அறிந்தும், மற்றவர்கள் சொல்லக் கேட்டும் விஷயங்களின் மேல் பற்றற்று அவைகளின் மேல் உள்ளுணர்வோடு சம நிலையில் இருப்பது வைராக்கியம் எனப்படும். 


பற்றறு இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

பற்றை அறுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பற்று இரண்டு வகைகளில் வருகிறது.

ஒன்று , நமது சொந்த அனுபவத்தில் இருந்து

இன்னொன்று, மற்றவர்கள் சொல்லக் கேட்டு.

இதில், நமது சொந்த அனுபவத்தில் இருந்து வரும் பற்று மிக மிக குறைவு. மற்றவர்கள் சொல்லக் கேட்டு அதில் இருந்து வரும் பற்று மிக மிக அதிகம்.

இப்படி எல்லாம் செய்தால் , இந்த பிறவிக்குப் பின் சொர்கம் போகலாம், அங்கே அழகான பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள், எப்போதும் பாட்டும், இசையும் இருக்கும் என்று சொன்னவுடன் , ஆசை வருகிறது. நாமும் சொர்கம் போனால் எப்படி இருக்கும் என்று மனம் கணக்குப் போட தொடங்கி விடுகிறது.

நாம் இதுவரை சொர்கம் போனது இல்லை. மற்றவர்கள் சொல்லக் கேட்டு வரும் ஆசை.

சில பேர் சொல்லலாம் , "எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் ஆசை இல்லை " என்று.

அவர்களின் ஆசை வைகுந்தம் போக, நித்ய சூரிகளாக இருக்க, கைலாயம் போக, சிவ பூத கணங்களாக இருக்க , பரம பிதாவுக்கு அருகில் இருக்க என்று வேறு வித ஆசைகள் இருக்கும்.

ஆசை என்பது எல்லாம் ஒன்று தான். எதன் மேல் ஆசை என்பதில் தான் வேறுபாடே தவிர , எல்லோருக்கும் ஆசை இருக்கிறது.

தண்ணி அடிக்க வேண்டும் என்று விரும்புபவனுக்கும், நித்ய சூரிகளாக வேண்டும் என்று  விரும்புபவனுக்கு ஆசை இருக்கிறது. இதில் ஆசை என்பதில்தான் வேறுபாடு.

இதில் நல்ல ஆசை , கெட்ட ஆசை என்பதெல்லாம் கிடையாது.

சரி, ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா ? பற்றற்று இருப்பது சாத்தியமா ? சாத்தியம் என்றே வைத்துக் கொண்டாலும், அது தேவையா ? இறைவன் மேல் பற்று வைக்கக் கூடாதா என்றெல்லாம் கேள்வி வரும்.

பற்று வைப்பதால் என்ன நிகழ்கிறது ?

மனம் அதை பற்றிக் கொள்ளகிறது. அது கிடைக்கும் வரை அதையே நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை அடைய பல முயற்சிகளை செய்கிறது.  கிடைக்குமோ, கிடைக்காதோ என்று சந்தேகம் கொள்கிறது. கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வருகிறது.

இதனால், மனதில் சதா சஞ்சலம நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மனதில் ஒரு ஆசை இருந்தாலே இவ்வளவு நிகழ்கிறது.

நம் மனதில் எத்தனை ஆசைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசையும் இத்தனை எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

பொருளில், உறவில், அலுவலகத்தில், வீட்டில், அண்டை அயலில், நண்பர்கள் மத்தியில், பிள்ளைகள் மூலம் என்று ஆயிரம் ஆயிரம் ஆசைகள்.

ஒவ்வொரு பற்றில் இருந்தும் கணக்கில் அடங்காத எண்ண அலைகள்.

இவ்வளவு எண்ண அலைகள் இருந்தால் எங்கிருந்து உண்மையை காண்பது ?

சித்த விருத்தி நிரோதம் எப்படி நிகழும் ?

நாம் வாழும் காலத்தில் இது இன்னும் சிக்கலாகிறது.

Watsapp , Facebook போன்ற சமூக வலை தளங்களில் ஒருவர் நான் இது வாங்கினேன், நான் பஇங்கே போனேன், நான் இன்னது சாப்பிட்டேன், நான் இந்த படம் பார்த்தேன் என்று சொன்னவுடன், நம் மனம் அவை அனைத்துக்கும் எங்க ஆர்மபித்து விடுகிறது.

இந்த தேவை, ஆசை, பற்று மற்றும் தேவை இல்லாமை, பற்றற்று இருப்பது என்ற இரண்டிற்கும் நடுவில் சம நிலையில் உள்ளுணர்வோடு இருப்பதே வைராக்கியம்.

உலகில் எவ்வளவோ இருக்கிறது. அனைத்தையும் நாம் அடைய முடியாது. அதற்காக ஒன்றுமே இல்லாமலும் இருக்க முடியாது.

இந்த இரண்டு எதிர் முனைகளுக்கு நடுவில் மனதை ஒரு சம நிலையில் அறிவு பூர்வமாக நிறுத்துவதே வைராக்கியம்.

பற்றறு இருப்பது என்பது ஆசையை அடக்குவது இல்லை. உள்ளே ஆசை பொங்கி பொங்கி வரும். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பது அல்ல பற்றறு இருப்பது.

பற்றறு இருப்பது என்பது ஆசைகளில் இருந்து விடுபடுவது அல்ல. விடுபடுவது என்றால், முதலில் ஆசைப் படுபவது பின் அதில் இருந்து விடுபடுவது என்று ஆகும்.

முதலில் ஆசையே வராமல் இருப்பதுதான் பற்றறு இருப்பது.

பதஞ்சலியை பொறுத்த வரை, நீங்கள் எதில் பற்று வைக்கிறீர்கள், இதில் பற்று அற்று இருக்கிறீர்கள்  என்பதெல்லாம் ஒரு முக்கியமான விஷயம் அல்ல.

உங்கள் மனதைப் பாருங்கள். அதில் எவ்வளவு எண்ண அலைகள் ஓடுகின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக பற்றினை விட்டால், இந்த அலைகள் ஓய்ந்து மனம் அமைதி பெரும். தெளிந்த மனதில் தெளிந்த சிந்தனைகள் பிறக்கும்.

அலை ஓய்ந்து அமைதி பிறக்கும். அந்த அமைதியில் சத்தியத்தின் தரிசனம் கிட்டும்.

கிட்டட்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/115.html

Thursday, July 13, 2017

யோக சூத்திரம் - 1.14 - வேரூன்றிய பயிற்சி

யோக சூத்திரம் - 1.14 - வேரூன்றிய பயிற்சி 



स तु दीर्घकाल नैरन्तर्य सत्काराअदराअसेवितो दृढभूमिः ॥१४॥

sa tu dīrghakāla nairantarya satkāra-ādara-āsevito dr̥ḍhabhūmiḥ ॥14॥

ச து தீர்க்க கால நைரந்தர்யா ஸத்கார ஆதார அசேவித்தோ த்ரதபூமி

sa = ச = அது

tu = து = மேலும்

dīrghakāla  = தீர்க்க கால

nairantarya = நைரந்தர்ய

satkāra = உறுதியாக, முனைப்புடன்

ādara = ஆதார = மதிப்புடன், உயர்வை எண்ணி

āsevito = அசேவித்தோ = செய்தால்

dr̥ḍhabhūmiḥ = வேரூன்றி நிற்கும் ॥14॥

அதை (அப்யாஸத்தை ) நீண்ட காலம் தொடர்ந்து முனைப்புடன் , வேரூன்றி நிலைத்து நிற்கும்படி செய்ய வேண்டும். 

மன சலனங்களை நீக்க அப்பியாசமும் வைராக்கியமும் தேவை என்று பார்த்தோம்.

அதில் அப்பியாசம் பற்றி இங்கே சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

பயிற்சி என்றால் எவ்வளவு நாள் செய்ய வேண்டும் ?

சில நாள், ஒரு சில வாரம் ? மாதம் ? இரண்டு மூன்று வருடம் ? எவ்வளவு நாள் செய்ய வேண்டும்  என்ற கேள்வி வரும்.

நீண்ட நாள் செய்ய வேண்டும் என்கிறார் (தீர்க்க காலம் - தீர்க்க சுமங்கலி என்பது போல நீண்ட நாள்).

நீண்ட காலம் என்றால் எவ்வளவு நாள் ? வாழ் நாள் இறுதி வரையா ? அப்படி செய்து கொண்டே இருந்தால் பின் அதன் பலனை எப்போது அனுபவிப்பது ?

இந்த கேள்வி அப்படியே இருக்கட்டும். கடைசியில் அதற்கு பதில் இருக்கிறது.

அதற்கு முன்னால் ,

இந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் ?

இரண்டு முக்கியமான விஷயங்களை  கூறுகிறார்.

ஒன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

நிறைய பேர் பல நல்ல விஷயங்களை தொடங்குவார்கள். கொஞ்ச நாளில் அதில் ஆர்வம் குறைந்து விட்டு விடுவார்கள்.

அது உடற் பயிற்சியாக இருக்கட்டும், உணவு கட்டுப் பாடாக இருக்கட்டும், படிப்பாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் தொடங்கும் போது இருக்கும் உற்சாகம் சிறிது நாளில் போய் விடுகிறது. எனவே, வாழ்வில் எதையும் சாதிக்க முடிவதில்லை.

தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எப்படி என்றால் , நீர் தாரை எப்படி ஒழுகுகிறதோ அது போல். வீட்டில் கூரையில் எங்காவது சின்ன விரிசல் இருந்தால் அதில் இருந்து நீர் ஒழுக்கிக் கொண்டே இருக்கும் அல்லவா அது போல விடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். (nairantarya = நைரந்தர்ய ). தர்யா என்றால் தாரை. நீர் தாரை போல.

அடுத்தது, நாம் செய்யும் எந்த செயலின் மேலும் நமக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டும்.

ஏனோ தானோ என்று செய்யக் கூடாது.

நான் செய்வது நல்ல  காரியம். இதனால் எனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பிறக்கும். எனவே இதை செய்கிறேன் என்று செய்யும் பயிற்சியில் ஒரு மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும்.  (ādara)

அடுத்தது, satkāra = உறுதியாக, முனைப்புடன் , உறுதி இருக்க வேண்டும். தளரக் கூடாது. உடலும் மனமும் சலிப்படையும். விடக் கூடாது.


சரி இப்படி, விடாமல், உறுதியாக, மதிப்புடன், நீண்ட காலமாக பயிற்சி (அப்பியாசம்) செய்வது என்பது நடக்கிற காரியமா ? ரொம்ப கடினமாக இருக்கிறதே ? இதெல்லாம் நமக்கு சரிப் பட்டு வருமா ? இல்லை வழக்கம் போல "கேக்க நல்லாத்தான் இருக்கு....ஆனா இதெல்லாம் நடை முறைக்கு சாத்தியமாகாது என்று ஒரு பிட்டை போட்டு விட்டு நகர்ந்து விடுவோமா " என்று நினைக்கத் தோன்றும்.

இந்த கடினமான பயிற்சியை எளிதாக்க வழி சொல்கிறார். அந்த பதிலே , இதை எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்பதற்கும் விடை.

இப்படி பயிற்சி செய்து கொண்டிருந்தால்  நாளடைவில் அதுவே நமக்குள் வேரூன்றி  விடும். அப்படி என்றால் , அது நம்மில் ஒன்றாகி விடும். நாம் அதுவாகி விடுவோம்.

வேரூன்றுதல் என்றால்  என்ன ?

செடி சின்னதாக இருக்கும் போது மழை வந்தால் அடித்துக் கொண்டு போய் விடும். ஆடு மாடு தின்று விடும். பெரிய காற்று அடித்தால் வேரோடு விழுந்து விடும். ஆனால், வேர் நன்றாக பாய்ந்து பெரிய மரமாக மாறி விட்டால், காற்று மழை புயல் ஆடு மாடு என்று எது வந்தாலும் கம்பீரமாக நிற்கும்.

அது போல, ஆரம்ப காலத்தில் பல தடைகள், சந்தேகங்கள், இருக்கும். அதுவே வேரூன்றி விட்டால், அவை போய் விடும்.

பிறந்ததில் இருந்து விடாமல் மூச்சு விடுகிறோம். அது பெரிய காரியமாக தெரிகிறதா ? மூச்சு விட முடியவில்லை என்றால்தான் கஷ்டமாக இருக்கிறது.

எந்த பயிற்சியும் விடாமல், தொடர்ந்து, உறுதியுடன் செய்து வந்தால் அது நாளடைவில் பழக்கமாகி நம் வாழ்வோடு ஒன்றாகி விடும். அது செய்வது என்பது ஏதோ ஒரு வேலை போல இருக்காது. இயல்பாக நடக்கும்.

உதாரணமாக, காலையில் பல் துலக்குவது. அது ஒரு வேலையாகவே தெரிவது இல்லை. தூங்குவது போல, மூச்சு விடுவது போல, அது நம்மில் ஒன்றாகிவிட்ட பழக்கம்.

அது போல , அப்யாஸமும் நம்முள் வேரூன்றி நிலைத்து நிற்கும் வரை அதை செய்ய வேண்டும். அதற்கு பின், அது தானாகவே நிகழும்.

கார் ஓட்ட பழகும் போது முதலில் ரொம்ப கடினமாக இருக்கும்.

Steering , accelerator , brake , clutch , gear , signal , horn , indicator , traffic signal , speed braker , ongoing , upcoming traffic  என்று ஆயிரம் விஷயங்களை கவனிக்க வேண்டும். அலுத்துப் போவோம்.

ஆனால், பழகிய பின், இது ஒன்றுமே தெரியாது. ஓட்டிக் கொண்டே பேசலாம், music player இல் பாட்டை மாத்தலாம், என்னவெல்லாமோ செய்யலாம். மிக எளிதாக இருக்கும்.

அது போல மேற்கண்ட முறையில் அப்பியாசம் செய்தால், சித்த விருத்தி என்பது  மிக எளிதாக நிகழும்.

அதற்கு எவ்வளவு நாள் ஆகும் ? அது நீங்கள் செய்யும் பயிற்சியைப் பொறுத்தது.

முழு மனதுடன் (sincere ) முனைப்புடன் செய்தால் சீக்கிரமே நிகழாலாம்.

நிகழ வாழ்த்துக்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/114.html

Wednesday, July 12, 2017

யோக சூத்திரம் - 1.13 - அப்பியாசம் என்பது

யோக சூத்திரம் - 1.13 - அப்பியாசம் என்பது 



तत्र स्थितौ यत्नोऽभ्यासः ॥१३॥

tatra sthitau yatno-'bhyāsaḥ ॥13॥

தத்ர ஷிதோவ் யத்னோ அபியாஷ்

tatra = தத்ர = அதில்

sthitau  = உறுதியான, நிலையான

yatno = யத்னம் = முயற்சி

'bhyāsaḥ = அப்பியாசம்


இந்த இரண்டில் (அப்பியாசம், வைராக்கியம் என்ற இரண்டில்) அப்பியாசம் என்பது உறுதியாக முயற்சி செய்வது

மனதில் வரும் சலனங்களை நிறுத்த இரண்டு விஷயங்கள் தேவை என்று பார்த்தோம்.

ஒன்று அப்பியாசம் , இன்னொன்று வைராக்கியம்.

இதன் விரிவை பார்ப்பதற்கு முன்னால் , பதஞ்சலி எப்படி எழுதிக் கொண்டு போகிறார்கள் பாருங்கள்.

ஒரு கணித சூத்திரத்தை வரவழைப்பது போல, படி படியாக விளக்கிக் கொண்டு போகிறார்.

உண்மையை எப்படி காண்பது . அதற்கு தடையாக இருக்கும் சித்த சலனங்கள். அவை என்னென்ன ? அதில் ஒவ்வொவொன்றுக்கும் விளக்கம். மனதை எப்படி கட்டுப் படுத்துவது.

அதில் அப்பியாசம் என்றால் என்ன என்று இங்கு சொல்கிறார்.

அதில் அப்பியாசம் என்பது உறுதியான முயற்சி.

சமஸ்க்ரித வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. சில சமயம் சரியான அர்த்தத்தை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

சில சமயம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அர்த்தங்களை சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஷித்தோ என்றால் உறுதியான, நிலையான, நடுக்கம் இல்லாத, அமைதியான, ஒருமுகப்பட்ட  என்ற அர்த்தங்கள் உண்டு. நாம் எல்லாவற்றையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

சரி, இந்த அபியாசம் எதை அடைய ?

வாழ்வில் நிறைய பேர் மிக மிக மும்மரமாக , ஒரே சிந்தனையுடன் கடினமாக உழைப்பார்கள். அவர்கள் தங்கள் தேவைகளை அடைவார்கள். அடைந்த பின் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

ஏன் ? என்னவாயிற்று ? வேண்டியது கிடைத்து விட்டதே ? பின் என்ன மகிழ்ச்சிக்கு குறை ?

என்ன தேடுகிறோம் என்றே தெரியாமல் தேடுகிறார்கள். எது தேவை என்று தெரியாமலேயே கடுமையாக உழைக்கிறார்கள்.

ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள்.

உங்கள் மனம் இரண்டு விதமாக செயல் படுவதை அறிவீர்கள்.

ஒன்று, மனம் சிலவற்றின் பின்னால் போகும். அவை வேண்டும்  என்று விரும்பும். பணம், புகழ், அதிகாரம், பதவி, சுகம் என்பவை.

இன்னொன்று, இவை இவை வேண்டாம் என்று வெறுத்து ஓடும். வறுமை, தனிமை, நோய் , பயம் ...இவை வேண்டாம் என்று ஓடும்.

இதில் சிக்கல் என்னவென்றால், முதல் பட்டியலில் உள்ள ஒன்றை எடுத்தால், இரண்டாவது பட்டியலில் உள்ள ஒன்றும் கூடவே வரும்.  தவிர்க்க முடியாது.

மனம் இங்கும் , அங்கும் அலைந்து கொண்டே இருக்கும். இது வேண்டும், ஆனால் அது வேண்டாம் என்று வாதம் பண்ணிக் கொண்டே இருக்கும்.

உறுதியான,  அலைபாயாத, நடுக்கம் இல்லாத பயிற்சி எதுவாக இருக்கும் ?

எது ஒன்றை அடைய நினைத்தால் நமக்கு நடக்கும் வராதோ, மனம் அலை பாயாதோ, அதை அடைய முயற்சி செய்வதே அப்பியாசம்.

குழப்பமாக இருக்கிறதா ?

சரி, சில உதாரணங்கள் பாப்போம்.

எனக்கு ஒரு நாளைக்கு 20 சிகரெட் பிடிக்க வேண்டும். நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். உறுதியாக, தெளிவாக, நடுக்கம் இல்லாமல்.  முடியுமா ?

கொஞ்ச நாளில் உடல் நிலை சீர்கெடும். மருத்துவர் சொல்லுவார், புகை பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று.

இப்படியே  தண்ணி அடிப்பது, திருடுவது, போன்ற செயல்களை நினைத்துப் பாருங்கள்.

இவற்றை தொடர்ந்து, விடாமல், நடுக்கமும், குழப்பமும் இல்லாமல் செய்ய முடியாது.

இயற்கைக்கு எதிரான எது ஒன்றையும் நம்மால் தொடர்ந்து செய்ய முடியாது.

தொடர்ந்து செய்வது என்றால், இயற்கையோடு ஒன்றியதைத்தான் செய்ய முடியும். இயல்பான ஒன்றைத்தான் செய்ய முடியும்.

அப்படி செய்யும் போது , மன சலனங்கள் குறையும், நிற்கும்.

மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தும் விஷயங்களை தவிருங்கள்.  மந்தையில் ஏற்படும்  அலைகளை , சிதறல்களை குறைக்க அது ஒரு முதல் படி. அடுத்தது, எது சுகமாக இருக்கிறதோ, எதை தொடர்ந்து உறுதியாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.

அது அப்பியாசம். தமிழிலே ஒழுக்கம் என்று சொல்லுவார்கள்.


உடனே, நான் அப்பியாசம் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்து விடாதீர்கள். கொஞ்சம் பொறுங்கள்.

அப்பியாசம் என்பது ஒரு பாதிதான். வைராக்கியம் என்பது மறு பாதி. அதையும் பார்த்து விடுவோம்.

அப்பியாசம் செய்வதால் என்ன ஆகும் ?

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/113.html

Tuesday, July 11, 2017

யோக சூத்திரம் - 1.12 - அப்பியாசம், வைராக்கியம்

யோக சூத்திரம் - 1.12 - அப்பியாசம், வைராக்கியம் 


अभ्यासवैराग्याअभ्यां तन्निरोधः ॥१२॥

abhyāsa-vairāgya-ābhyāṁ tan-nirodhaḥ ॥12॥

abhyāsa = அப்பியாசம் - பயிற்சி

vairāgya = வைராக்கியம் - பற்றற்று

ābhyāṁ  = இரண்டும்

tan = இந்த

nirodhaḥ  = நிரோதம்

அப்யாஸமும் வைராக்கியமும் நிரோதத்திற்கு இரண்டு கூறுகள் 

சித்தத்தில் ஏற்படும் சலனங்களினால் நாம் இந்த உலகை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் செய்கின்றன என்று பார்த்தோம். சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் சித்தத்தில் ஏற்படும் சலனங்களை நிறுத்தி மனம் அமைதி அடையவேண்டும் என்றும் பார்த்தோம்.

எப்படி அலையும் மனதை நம் வழிக்கு கொண்டு வருவது ?

மனதை , அதன் சலனங்களில் இருந்து சமனப் படுத்த இரண்டு தேவை. அவை

1. அப்பியாசம்
2. பற்றற்று இருப்பது

அப்பியாசம் என்றால் பயிற்சி. தொடர்ந்து, விடாமல் பயிற்சி செய்வது.

வைராக்கியம் என்றால் இருமை (நல்லது கெட்டது , வேண்டியது வேண்டாதது, பெருமை சிறுமை) அற்று நடு நிலையில் இருந்து செயல்படுவது.

நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர்கள் சொல்வதை கேட்கிறோம். நல்லது கெட்டது எது என்று தெரிகிறது. இருந்தும் நல்லதை செய்யாமல் கெட்டதை செய்கிறோம். ஏன் ?

அதிகமாக உண்பது, புகை, மது , உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது இவை எல்லாம் கெட்டது என்று அதை செய்பவர்களுக்கு தெரியும். இருந்தும் செய்கிறார்கள். ஏன் ?

பொறாமை, கோபம், அதீத காமம், எல்லாம் கெடுதல் என்று தெரிகிறது. இருந்தும், அவற்றை விட முடியாமல் தவிக்கிறார்கள்.

ஏன் ?


நாம் எந்த காரியத்தை செய்தாலும், அந்த காரியம் நமக்குள் சில பதிவுகளை  ஏற்படுத்துகிறது. அதை சமஸ்கிருதத்தில் "சம்ஸ்காரம்" என்கிறார்கள்.

அது என்ன பதிவு ?

செய்த காரியம் பிடிக்கும், பிடிக்காது, சுகமாக இருக்கிறது, கடினமாக இருக்கிறது, மீண்டும் செய்யத் தூண்டுகிறது,வேண்டவே வேண்டாம் என்று தோன்றுகிறது.

அந்த பதிவின் தன்மையைப் பொறுத்து நாம் அந்த காரியங்களை மீண்டும் மீண்டும் செய்கிறோம். அல்லது , செய்யாமல் விடுகிறோம்.

பொதுவாகவே , கெட்ட காரியங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. ஒன்றிரண்டு முறை செய்தாலே தானாகவே ஒட்டிக் கொள்கிறது.

தண்ணி அடிக்கவும், புகை பிடிக்கவும், ரொம்ப நேரம் தூங்கவும் என்ன பயிற்சி தேவை.  பயிற்சி இல்லமாலேயே செய்யலாம்.

டிவி சீரியல் பார்ப்பது, whatsapp இல் வெட்டி அரட்டை அடிப்பது, நொறுக்கு தீனி தின்பது இதற்கு எல்லாம் ஒரு பயிற்சியும் தேவை இல்லை.

ஆனால், அதி காலை எழுந்து படிக்கப் போவது, உடற் பயிற்சி செய்வது,  உணவு கட்டுப் பாடு போன்ற நல்ல செயல்களுக்கு பயிற்சி செய்வது.

பயிற்சி என்றால் விடாமல் , திரும்ப திரும்ப செய்வது. பயிற்சி ஒரு பழக்கமாக மாற வேண்டும். பழக்கம் , பின்னால்  வழக்கமாக மாற வேண்டும். பின் அதுவே நமது இயற்கையாக மாறி விடும். நமது இயல்பாக மாறி விடும்.

எனவே பயிற்சி என்பது சித்த சலனத்தை நிறுத்தவே. பதஞ்சலி நல்லது , கெட்டது என்றெல்லாம் சொல்லவில்லை.

சித்தம் சலனப்படுகிறது. அந்த சலனத்தை நிறுத்த பயிற்சி செய்ய வேண்டும். அவ்வளவுதான் அவர் சொல்கிறார்.

எதை பயிற்சி செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று பின்னால் வருகிறது. பொறுமை.

வைராக்கியம் - பற்றற்று இருப்பது.  ஏன் பற்றற்று இருக்க வேண்டும் ?

நாம் முன்பே பார்த்தது போல, பற்று என்று வந்து விட்டால் அது நம் சித்தத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது (சம்ஸ்காரம்). ஒவ்வொரு பதிவும் ஒரு அலையை உண்டாக்குகிறது.

விரும்பி எறிந்தாலும் , விரும்பாமல் எறிந்தாலும் எறிந்த கல் குளத்தில் அலைகளை தோற்றுவிக்கத்தான் செய்யும்.

நாம் செய்யும் பயிற்சியின் மேல் பற்று வந்து விட்டால், நான் செய்வதுதான் சரி என்று தோன்றும், மற்றவர்கள் செய்வது தவறு என்று தோன்றும். அவர்களோடு வாதம் செய்யத் தோன்றும். வாதம் சண்டையாக மாறும்.

பயிற்சி செய்யும் போது துன்பம் வரும். கஷ்டமாக இருக்கும். எதையும் பொருட்படுத்தக் கூடாது. இது கஷ்டம், இது நடை முறைக்கு சரி வராது, இது வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல என்று தள்ளி வைக்காமல் சித்த சலனத்தை நிறுத்தும் அவற்றை (அவை பின்னல் வருகிறது) பயிற்சி செய்ய வேண்டும்.

அப்பியாசம் = விடா முயற்சி, தொடர் முயற்சி

வைராக்கியம் = பற்றற்று இருப்பது. ஆங்கிலத்தில் let go என்று சொல்லுவார்களே  அது போல.

மேலும் சிந்திப்போம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/112.html

18

Monday, July 10, 2017

யோக சூத்திரம் - 1.11 - ஞாபகம் என்பது ...

யோக சூத்திரம் - 1.11 - ஞாபகம் என்பது ...



अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः ॥११॥

anu-bhūta-viṣaya-asaṁpramoṣaḥ smr̥tiḥ ॥11॥

anu = அதிலிருந்து

bhūta = அனுபவம் எழுகிறது

viṣaya = விஷயங்கள்

a = இல்லை

saṁ = முழுவதும்

அசம் என்றால் அ  + சம்  = முழுமை இல்லாத

pramoṣaḥ = சேர்த்துக் கொள்ளாத, மேலும் கூட்டாத

smr̥tiḥ  = ஞாபகம் என்பது

அனுபுத்த விசய அஸம்ப்ரமோஷ ஸ்ம்ரித்

ஞாபகம் என்பது பழைய அனுபவங்களை மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் நினைப்பது. 

எண்ணச் சிதறல்கள் எவ்வாறு எழுகின்றன என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

பிரமாணம்
விபரீதம்
விகல்பம்
நித்திரை

என்பனவற்றை இது வரை சிந்தித்தோம்.

அடுத்தது ஞாபகம்.

ஞாபகம் என்பது முன்பு நடந்த ஒன்றை மனதில் நினைத்துப் பார்ப்பது, வேறு ஒன்றின்  கலப்பில்லாமல்.

சரி, அது எப்படி சித்தம் சிதற வழி வகைக்கும் ? அது எப்படி உண்மையை மறைக்கும் ?

நாம் நம் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

அது சரி அல்ல.

காரணம் என்ன என்றால், உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் நம் பழைய ஞாபகங்களை  பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

ரொம்பவும் ஆழமாக போவதற்கு முன்னால் , நமது அன்றாட வாழ்வில் எப்படி  இந்த ஞாபகம் நம்மை சிக்கலில் மாட்டி விடுகிறது என்று பார்ப்போம்.

"அவனை நம்பினேன். இப்படி துரோகம் செய்து விட்டானே "

"அவனா அப்படி செய்தான் ?"

"அவளை உயிருக்கு உயிராய் காதலித்தேன்...இப்படி கடைசியில் என்னை ஏமாற்றி  விட்டு விட்டுப் போய் விட்டாளே "

"அவனை எப்படி எல்லாம் வளர்த்தேன், கல்யாணத்திற்கு பின் எப்படி மாறி விட்டான் "

என்று நமது நடைமுறை வாழ்க்கையில் நாம் எவ்வளவோ  கேட்கிறோம்.

இவற்றிற்கு காரணம் என்ன ?

முன்பு நல்லவனாக இருந்தான். அந்த ஞாபகம் மட்டுமே உண்மை என்று எண்ணிக் கொண்டிருப்பதால் , அவன் வேறு விதமாக மாறினால் துரோகம் செய்து விட்டான் என்கிறோம்.

நல்லவன் கெட்டவனாக மாறுவதற்கும், கெட்டவன் நல்லவனாக மாறுவதற்கும்  இந்த ஞாபகம் தான் காரணம்.

ஒருவனை நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ நாம் நம் மனதில் குறித்துக் கொள்கிறோம். அந்த ஞாபகத்தில் இருந்து நாம் அவனோடு உறவாடுகிறோம்.

அது உண்மையை மறைக்கிறது.  அவன் மாறி இருக்கலாம் அல்லவா ?

"முன்னே எல்லாம் என் கணவன் என் மேல் அவ்வளவு அன்பா இருப்பார்...இப்ப எல்லாம் கண்டுகிறதே இல்ல "

"காதலிக்கும் போது எப்படி இருந்தாள் ...கல்யாணத்துக்கு பின் இப்படி மாறிவிட்டாளே "

எல்லாமே நாம் ஞாபகத்தில் இருந்து உண்மையை பார்ப்பதால் வரும் வினை.

ஞாபகம் என்ற கலர் கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்க்கிறோம்.

சரி, அதற்காக யாரையும் , எதையும் நம்பக் கூடாதா ? அப்படி யாரையும் எதையும்  நம்பாமல், எதிர்  பார்க்காமல், ஒருவரைப் பற்றி ஒரு ஞாபகமும் இல்லமால்  இருக்க முடியுமா ?

இந்த சூத்திரத்தை கூர்ந்து நோக்கினால் நமக்கு .ஒன்று விளங்கும்.

"ஞாபகம் என்பது பழைய அனுபவங்களை மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் நினைப்பது. "

ஞாபகம் என்பது வேறு ஒன்றையும் கலக்காமல் நினைப்பது. அதாவது, தற்போதைய நிலை,  சூழ்நிலை என்ன என்று நினைக்காமல், பழசை மட்டும்  நினைத்துக் கொள்வது.

பழசை கொண்டு வர வேண்டும் அதே சமயம் நிஜ உலகம் எப்படி இருக்கிறது என்று  அதோடு சேர்த்துக் கொண்டு பார்க்க வேண்டும். பழைய ஞாபகங்கள் மட்டும் இருந்தால் அந்த உண்மையை மறைக்கும்.


நம்முடைய நம்பிக்கைகள் என்பது பழைய ஞாபகம்  அன்றி வேறு இல்லத்தில்.

வீட்டில்,, நாம் சிறு பிள்ளையாக போது இது இது இன்ன இன்ன மாதிரி என்று சொன்னார்கள்.

அது நம் மனதில் ஆழ பதிந்து விடுகிறது.

அந்த ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. நாம் அந்த ஞாபகத்தின் படி நடக்கிறோம்.

நாளடைவில் அந்த ஞாபகங்கள்தான் உண்மை என்று நினைக்கத் தொடங்கி விடுகிறோம்.

உங்கள் ஞாபகங்கள்தான் நீங்கள் யார் என்று தீர்மானிக்கிறது.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் உங்கள் ஞாபகம் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால்  அழிந்து விட்டது என்று. (தலையில் அடி பட்டால் பழசெல்லாம் மறந்து போகும் என்கிறார்கள்).

அனைத்து ஞாபகங்களும் அழிந்து விட்டால் , நீங்கள் யார் ? உங்கள் மதம் என்ன ? உங்கள் கல்வித் தகுதி என்ன ? உங்கள் உறவுகள் என்ன ?

எதுவுமே இல்லை.

அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம், வீடு, வாசல், எதுவும்  இல்லை.

கடவுள் இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, நாடு இல்லை.

ஞாபகம்தான் எல்லாம் என்று புரிகிறதா ?

யதார்த்த உலகை, நிஜ உலகை வேறு ஞாபகக் கண்ணாடி மூலம் பார்த்துக் கொண்டிருந்தால் எவ்வளவு சிக்கல் என்று தெரிகிறதா ?

ஞாபகங்கள் எண்ணச் சிதறல்களை உண்டாக்குகின்றன.

ஒருவன் நல்லவன் என்று நம் ஞாபகம் சொன்னால், அவனை அடுத்த முறை பார்க்கும் போது  நம்மை அறியாமலேயே புன்னகை  வருகிறது,வ அவனை வரவேற்கிறோம்.

ஒருவன் கெட்டவன் என்று நம் ஞாபகம் சொன்னால், அவனைக் கண்டவுடனேயே வெறுப்பு வருகிறது.

மகிழ்ச்சி வெறுப்பு, கோபம் எல்லாம் எண்ண அலைகள்தான். அவனின் தற்போதைய நிலையை அறிய விடாமல் தடுக்கும்.

"அவ அப்படி சொல்லி இருக்கக் கூடாது "

" அவர் அப்படி செய்திருக்கக் கூடாது "

என்று நம்மை இறந்த காலத்தில் வைத்து அழுத்திக் கொண்டிருப்பவை ஞாபகங்கள்.

நம்மை நிகழ் காலத்தில் வாழ விடாமல் தடுப்பவை ஞாபகங்கள்.

இந்த விபரீதம், விகற்பம், நித்திரை , ஞாபகம் எல்லாம் வரத்தான் செய்யும்.

இவை நம் வாழ்வோடு ஒன்றியவை.

இவற்றை விட முடியாது.

அப்படியானால், இவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து, சித்த அலைகளை நிதானப்படுத்தி  , உண்மையின் தரிசனத்தை எப்படி பெறுவது ?

யோகா அந்த வழியை சொல்லித் தருகிறது.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/111.html