யோக சூத்திரம் - 2.52 - திரை விலகி
கோவிலுக்கு போய் இருக்கிறீர்களா? ஒவ்வொரு பூஜை நேரத்துக்கு முன்னும், ஸ்வாமிக்கு திரை போட்டு இருப்பார்கள். உள்ளே அபிஷேகம் அலங்காரம் எல்லாம் நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில், பெரிதாக மணி அடித்து, திரை விலகுவார்கள். அதே சமயத்தில், உள்ளே தீபாராதனை நடக்கும். ஸ்வாமியை நாம் காண முடியும்.
கன்னத்தில் போட்டுக் கொண்டு வந்து விடுவோம்.
இந்த நிகழ்வு என்ன சொல்ல வருகிறது?
சுவாமி உள்ளே இருக்கிறார். தீபம் எரிகிறது. நமக்குத் தெரியவில்லை. காரணம், திரை மறைக்கிறது. திரையை விலக்கினால், தீப ஒளி பிரகாசமாகத் தெரியும்.
நமக்குள்ளும் ஒரு தீபம் எரிந்து கொண்டு இருக்கிறது. அதன் வெளிச்சம் வெளியே தெரிவது இல்லை. காரணம் திரை போட்டு மறைத்து இருக்கிறது.
என்ன திரை?
என்ன வெளிச்சம் ?
நமது உடம்பில் இல்ல பிராண சக்தியானது சதா சர்வகாலமும் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றை பற்றிக் கொள்கிறது. ஆசை, பயம், தேவை, பொறாமை, காமம், நடுக்கம், பசி, தாகம், என்று பல விதமான உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, அது அலைந்து கொண்டே இருக்கிறது. ஒரு நொடி கூட அது நிற்பது இல்லை.
இந்த ஓட்டம் தான் திரை. இந்த ஓட்டம் இருக்கும்வரை, அந்த சுடர் ஒளி வெளியே தெரியாது.
ஓட்டம் நின்றால் , அமைதி பிறந்தால், திரை விழும். வெளிச்சம் தெரியும்.
இதுதான் சிதம்பர இரகசியம். கோவில் பூஜையின் உள் அர்த்தம்.
பிராணனை நிறுத்துவது சாதாரண காரியம் இல்லை.
அருணகிரி நாதருக்கு முருகன் சொன்ன இரண்டே வார்த்தை உபதேசம்
"சும்மா இரு".
செம்மான் மகளை திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
"சும்மா இரு" சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
என்பார் அருணகிரி.
"சும்மா இருப்பது" மகா மந்திரம். செய்ய முடியாத ஒன்று.
திருமுருகாற்றுப் படையில், நக்கீரர் சொல்கிறார்
"சேண் விளங்கு அவிர் ஒளி" என்று
உயரத்தில், உன்னதமான இடத்தில் எல்லோரும் காணும்படி பிரகாசிக்கும் ஒளி என்கிறார்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை,
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
நம்மை அறியாமலேயே நாம் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒன்றினால் செலுத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
"நான் முடிவு செய்து அதைச் செய்தேன் " என்று நாம் நினைக்கலாம். அப்படி முடிவு செய்ய தூண்டியது எது?
சரி, அந்த ஓட்டத்தை எப்படி நிறுத்துவது?
அதற்குத்தான் பிராணாயாமும் அதன் நாலு படிகளும். அவற்றை செய்வதன் மூலம், பிராணனின் இந்த திக்கற்ற ஓட்டம் நிற்கும்.
அப்படி நின்றால், உள்ளே உள்ள ஒளி வெளிப்படும்.
"நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி "
என்பார் மணிவாசகப் பெருந்தகை.
உள்ளே உள்ள ஒளி பெருகும்.
அப்படி ஒளி வீசிய ஆள் யாராவது உண்டா என்றால், "ஆம், இராமன் மேனியில் இருந்து ஒளி வீசியது" என்கிறார்.
வெய்யோன் ஒளி, தன் மேனியின், விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும், இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான்!
சூரிய (வெய்யோன்) ஒளி, இராமனின் திருமேனியில் இருந்து புறப்பட்ட ஒளியில் மங்கி விட்டதாம்.
சரி, இது எல்லாம் இருக்கட்டும். இதுக்கும், பதஞ்சலியின் யோக சூத்திரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்....
சூத்திரம்
tatah ksiyate prakasha-avaranam ||52||
ततः क्षीयते प्रकाशाअवरणम् ॥५२॥
tataḥ kṣīyate prakāśa-āvaraṇam ॥52॥
உண்மையான உள் ஒளியை மறைத்து இருந்த திரை விலகும்
tataḥ = அதன் பின். அதாவது, பிராணாயாமம் செய்த பின்
kṣīyate = மறைந்து விடும்
prakāśa = பிரகாசம், ஒளி
āvaranam = திரை, தடுப்பு
ஒளி என்றால் அப்படியே ஒளி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஒளி என்றால் தெளிவு, உண்மை, அறிவு, ஞானம் வெளிப்படும் என்று கொள்வது சாலப் பொருந்தும்.
இன்னும் கூட விரித்துச் சொல்லலாம்....
வாசகர்களின் சிந்தனைக்கு கொஞ்சம் விட்டு விடுகிறேன்....
https://yogasutrasimplified.blogspot.com/2019/09/252.html